'கண்ணில் கிளுக்கோமா பாதித்தவர்கள் இந்தியாவிலேயே அதிகம் உள்ளனர்' – மருத்துவ நிபுணர்கள்!
கண் நீர்அழுத்த நோய் (Glaucoma) பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் பார்வைத் திறனை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கண் நீர்அழுத்த நோய் (Glaucoma) குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தால் பார்வைத் திறனை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.
“கிளுக்கோமா எனப்படும் கண் நீர்அழுத்த நோய் ஆபத்தானது. இதனால் பார்வைத்திறனை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் 12 மில்லியன் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்படாமல் உள்ளது," என்கிறார் பிரபல அகர்வால் கண் மருத்துவமனை பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் ஆர் கலாதேவி.
இந்தியா கண் நீர்அழுத்த நோயின் தலைநகராக மாறவும் வாய்ப்பிருக்கிறது என்பதையே இந்தச் சூழல் உணர்த்துகிறது. முதியோர், நீரிழிவு நோயாளிகள், ஒளிக்கதிர் விலக்க குறைபாடுள்ளோர் போன்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு கண் நீர்அழுத்த நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.
இதனால் நம் நாட்டில் கண் நீர்அழுத்த நோயானது வேகமாக அதிகரித்து வரும் தொற்று அல்லாத கண் நோயாக உருவாக உள்ளது. ஏற்கெனவே உலகளவில் பார்வையிழந்தோரில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, என்கிறார்.
கண் நீர்அழுத்த நோய் பாதிக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்கிறார் டாக்டர் ஆர் கலாதேவி. ஆரம்பநிலையில் இந்த நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை. நோய் பாதிப்பு மெல்ல தீவிரமடைந்து சத்தமில்லாமல் பார்வைத் திறனைப் பறித்துவிடுகிறது.
எனவே இந்நோய் பாதிப்பினால் பார்வைத்திறனை இழக்காமல் இருக்க ஆரம்பகட்டத்திலேயே நோய் பாதிப்பைக் கண்டறியப்படுவதும் சிகிச்சையும்தான் ஒரே வழி என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கண் நீர் அழுத்த நோய் வாரம் எப்போது, எதற்காகக் கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் மாதம் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை உலக கண் நீர்அழுத்த நோய் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கண் நீர்அழுத்த நோய் காரணமாக நோயாளிகளுக்குப் பார்வைத் திறன் பறிபோவது தவிர்க்கப்படவேண்டும். இதுவே கண் நீர் அழுத்த நோய் வாரம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கம். இதன் மூலம் மக்கள் தொடர்ந்து உரிய இடைவெளியில் கண்களை பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
”உலகம் பிரகாசமானது, உங்கள் பார்வைத் திறனை பாதுகாத்துக்கொள்ளுங்கள்”
இதுவே 2021-ம் ஆண்டின் மையக்கருத்து. மக்கள் முறையாக தங்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொண்டால் நம்மைச் சுற்றியுள்ள இந்த அழகான உலகைத் தொடர்ந்து ரசிக்கலாம் என்கிற கருத்தை இது வலியுறுத்துகிறது.
இந்தியாவில் 1.6 மில்லியன் குழந்தைகள் உட்பட 40 மில்லியன் பேர் பார்வையிழந்தவர்களாகவோ பார்வைக் குறைபாடு உள்ளவர்களாகவோ இருப்பதாக 2021-ம் ஆண்டிற்கான உலக கண் நீர்அழுத்த நோய் வாரத்தை ஒட்டிய செய்தி வெளியீட்டில் டாக்டர் ஆர் கலாதேவி சுட்டிக்காட்டியுள்ளார்.
கண் நீர்அழுத்த நோய் எதனால் ஏற்படுகிறது?
பார்வை இழப்பிற்கு கண்புரை நோய், முறையாக சிகிச்சையளிக்கப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடு ஆகிய இரண்டும் முக்கியக் காரணங்களாக உள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது முக்கியக் காரணம் கண் நீர்அழுத்த நோய். இருப்பினும் கண் நீர்அழுத்த நோய் அதிக சிக்கலானது, ஆபத்தானது. கண்புரை நோய் போலல்லாமல் இந்தப் பிரச்சனையை சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரமுடியாது. கண் நீர்அழுத்த நோய் கண்டறியப்படாமலும் சிகிச்சையளிக்கப்படாமலும் உள்ளது.
கண்களுக்குள் இருக்கும் அழுத்தம் அதிகரிக்கும்போது இந்த நோய் ஏற்படுகிறது. கண்களுக்குள் முன் பகுதியில் இருக்கும் தெளிவான திரவம் உற்பத்தியாகும் விகிதமும் அவை வெளியேற்றப்படும் விகிதமும் ஒன்றாக இருக்கும்போது அழுத்தம் நார்மலாக இருக்கும். எனினும் இந்த திரவம் கொண்டு செல்லப்படும் பாதைகளில் அடைப்பு ஏற்படும்போது கண்களுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் இந்த அழுத்தமானது காட்சிகள் தொடர்பான தகவல்களை மூளைக்கு அனுப்பக்கூடிய பார்வை நரம்புகளைப் பாதிக்கப்படுகின்றன.
நோயின் வகைகள் என்னென்ன?
கண் நீர்அழுத்த நோய் இருவகைப்படும் என்கிறார் கலாதேவி. விரிகோண கண் நீர்அழுத்தம் (Open angle glaucoma) மற்றும் குறுங்கோணக் கண் நீர்அழுத்தம் (closed angle glaucoma). மக்களிடையே 90 சதவீதம் காணப்படுவது விரிகோண கண் அழுத்த பாதிப்பு. இது மெல்ல அதிகரித்து மைய பார்வையைப் பாதிக்கிறது. நோயாளி உரிய நேரத்தில் கண் பரிசோதனை செய்யாமல் போனால் நிரந்தர பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நோயினால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
கண் நீர்அழுத்த நோய் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். 40 வயதிற்கு மேற்பட்டோர், ஏற்கெனவே குடும்பத்தில் கண் நீர்அழுத்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது, நீரிழிவு, ஒளிக்கதிர் விலக்க குறைபாடு இருப்பவர்கள், ஸ்டீராய்ட் மருந்து உட்கொள்பவர்கள், கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து, மாத்திரைகள் மற்றும் இன்ஹேலர்கள் பயன்படுத்துபவர்கள், சருமத்திற்கான க்ரீம் பயன்படுத்துபவர்கள் போன்றோருக்கு ரிஸ்க் அதிகம். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண் நீர் அழுத்த நோய்கான ஸ்கிரீன்ங் செய்துகொள்வது அவசியம்.
நோயைக் கண்டறிவது எப்படி? சிகிச்சைகள் என்ன?
கண் நீர் அழுத்த நோய் பாதிப்பு ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டால் முறையான சிகிச்சை பெறலாம். இதனால் பார்வைத்திறன் குறைவது தவிர்க்கப்படும் அல்லது பார்வைத் திறன் பாதிப்பை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தமுடியும் என்கிறார் கலாதேவி.
இந்த நோயை இரண்டு வகைகளில் கண்டறியலாம். ஒன்று மருத்துவப் பரிசோதனை. மற்றொன்று நோய் கண்டறியும் பரிசோதனை. மருத்துவப் பரிசோதனையில் சிறப்பு சாதனங்கள் கொண்டு கண்கள் பரிசோதனை செய்யப்படும்.
கண் நீர்அழுத்த நோயைப் பொருத்தவரை உள்விழி அழுத்தத்தை மட்டுமே மாற்றமுடியும். எனவே இதை சரிசெய்வது தொடர்பாகவே சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவை:
- மருந்துகள் – கண்களுக்கான சொட்டு மருந்து, மாத்திரைகள்
- லேசர் சிகிச்சை – அடைக்கப்பட்ட பாதைகளைத் திறப்பதில் கவனம் செலுத்தப்படும்
- அறுவைசிகிச்சை – கண்களுக்குள் இருக்கும் திரவங்கள் வடிவதற்கு புதிய பாதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.