2025ல் இந்தியாவில் 250 யூனிகார்ன்கள் இருக்கும் என அறிக்கையில் தகவல்!
இந்தியாவில் அடுத்த மூன்றாண்டுகளில், ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் சந்தை மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 250 க்கும் மேல் இருக்கும் என்று வென்சர் கேபிடல் நிறுவனம் ஐயன் பில்லர் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியா எதிர்கொண்ட யூனிகார்ன் எழுச்சி ஒரு துவக்கம் தான் என்று வென்சர் கேபிட்டல் நிறுவனம் ஐயன் கேபிடல் (Iron Pillar) தெரிவிக்கிறது. 2025ல் இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட 250க்கும் மேலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்த முதலீட்டு நிறுவனம், பிரெஷ்டூஹோம், யூனிபோர், ஈட்ஃபிட் உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
இந்தியா டெக் டிரெண்ட்ஸ் எனும் பெயரில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ல் இந்திய யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு 535 பில்லியன் டாலராக இருப்பதாகவும், இது 2020ல் 384 பில்லியன் டாலராகவும், 2021ல் 497 பில்லியன் டாலராகவும் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 15 மாதங்களில், இந்தியாவில் யூனிகார்ன் ஸ்டார்ட் அப்கள் இரண்டு மடங்காக, 230 என உயர்ந்துள்ளதாக நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பூகோள எல்லைக்கு வெளியே அமைக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களும் இதில் அடங்கும்.
“இந்த வேகம் அடுத்த 24 மாதங்களில் கொஞ்சம் குறையும் என நாங்கள் எதிர்பார்த்தாலும், 2025ல் ஒரு பில்லின் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட 250 ஸ்டார்ட் அப்’களை உருவாக்குவது சாத்தியமே. வளர்ச்சி அடைந்த நிறுவனங்களில் பாதிக்கு மேல், இந்தியாவுக்கு வெளியேவும் இலக்கு கொண்டுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்,” என்று ஐயன் பில்லர் நிர்வாக பாட்னர் ஆனந்த் பிரசன்னா கூறியுள்ளார்.
சர்வதேச சிக்கல்கள், நிதி கொள்கை நெருக்கடிகளை மீறி, இந்திய ஸ்டார்ட் அப்கள் இந்த ஆண்டு முதல் காலாண்டில் 10 பில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டியுள்ளன.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்