சோதனைகளைக் கடந்து வெற்றிப் பாதையில் முன்னேறிய இந்திய பிராண்ட்கள்...
நீல்கமல், பாலிகேப், ஷாலிமார் பெயிண்ட்ஸ் ஆகிய இந்திய பிராண்ட்கள் தொடர் முயற்சியின் விளைவாக வெற்றி பெற்றுள்ளன. வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற்றுள்ள இந்நிறுவனங்களின் வெற்றிக்கதை.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல், 1990 வரை இந்திய வர்த்தக அமைப்பு, லைன்சன்ஸ், கட்டுப்பாடுகள், அரசு அனுமதி ஆகியவற்றுடன் இயங்கியது என்பதை இப்போது நினைத்துப் பார்ப்பது கடினம் தான். ஆனால், இப்போது பார்த்தால் இந்தியா 21 யூனிகார்ன்களைக் கொண்ட, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலை கொண்டுள்ளது.
எல்லா பெரிய விஷயங்களுமே சிறிய அளவில் இருந்து தான் துவங்குவதாக சொல்லப்படுவதற்கு ஏற்ற வகையில், இங்கு நாம் பார்க்கக் கூடிய இந்திய தொழில்முனைவோர்கள் எளிமையாகத் துவங்கி, தங்கள் விடாமுயற்சி மற்றும் தொலைநோக்கால் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரு கனவாக துவங்கி, பின்னர் இந்தியா முழுவதும் அறியப்படும் பிராண்டாக வளர்ந்து, பங்குச்சந்தையில் பட்டியலிடும் அளவுக்கு உயர்ந்த நிறுவனங்களின் வெற்றிக்கதைகளை பார்க்கலாம்.
சோலார் இண்ட்ஸ்ட்ரீஸ் (Solar Industries)
வெடிபொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘சோலார் இண்ட்ஸ்டிரீஸ்’ பின்னே இருக்கும் தொழில்முனைவோர் 67 வயதான சத்தியநாராயணன் நூவால், 1970 களில் நிறுவனத்தை துவக்கிய போது, இந்திய ராணுவத்திற்காக வெடிபொருட்களை தயாரிப்பதற்கான உரிமம் கிடைகும் என அவர் நினைக்கவில்லை.
“ராஜஸ்தானின் சிறிய கிராமத்தில் வளர்ந்தேன். பத்தாம் வகுப்பில் பள்ளியில் இருந்து விலகி, வர்த்தகத்தில் முயற்சி செய்தேன். ஆனால் அப்போது கடினமான உழைப்பு தேவைப்படும் வர்த்தகத்தை புரிந்து கொள்ளும் அனுபவம் இல்லை. குத்தகை தொழில், போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றை முயற்சி செய்தேன். ஆனால் எல்லாம் தோல்வியில் முடிந்தன,” என்கிறார் சத்யநாரயணன்.
இதன் பிறகு அவர் வேலைத்தேடி நாக்பூர் சென்றார். வாடகைக்கு இடம் தேட முடியாமல், நகரின் ரெயில் நிலையத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். இருந்தும் மனம் தளராமல் பாடுப்பட்டு, வெடிபொருட்கள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்று, அதற்கான குடேனையும் அமைத்துக்கொண்டார். மாநில சுரங்கங்களுக்கு வெடிபொருட்களை வழங்கி வந்தார். எனினும் வளர்ச்சி பெரிதாக இல்லை.
1990-களில் இத்துறையில் போட்டி அதிகரித்து, லாபம் குறைந்தது. சத்யநாராயணன் வேறு வழியில்லாமல் மனைவி நகைகளை அடமானம் வைத்து தாக்குபிடித்தார். அப்போது தான், வர்த்தகத்தில் இருந்து வெடிபொருட்கள் தயாரிப்புக்கு மாறுவது எனத் தீர்மானித்தார்.
1995ல் நாக்பூரில் சோலார் இண்ட்ஸ்டிரீஸ் நிறுவனத்தை சிறிய அளவில் துவங்கினார். முதலில் வெடிபொருட்கள் விற்பனையாளராக இருந்து ஒராண்டு காலத்தில் சிறிய உற்பத்தி ஆலைஅயை ஒரு கோடியில் அமைத்தார்.
இன்று இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 25 உற்பத்தி ஆலைகள் மற்றும் வெளிநாடுகளில் நான்கு இடங்களில் ஆலைகளை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 50 நாடுகளுக்கு பொருட்களை வழங்குகிறது.
இந்நிறுவனம், 2006ல் பொது பங்குகளை வெளியிட்டது, 2019 நிதியாண்டில் ரூ.2,461.6 கோடி விற்றுமுதல் ஈட்டியது.
பாலிகேப் (Polycab)
இந்தர் ஜெய்சிங்கானிக்கு 15 வயது ஆன போது தந்தையை இழந்தார். 1968ம் ஆண்டு, அவரது தாய் படிப்பை நிறுத்தி விட்டு தந்தையின் தொழிலை கவனித்துக்கொள்ளுமாறு கூறினார்.
ஜெய்சிங்கானி குடும்பம், மும்பையில் சிண்ட் எலெக்ட்ரிக் கடையை நடத்தி வந்தது.
இந்தர் வர்த்தகத்தை கவனித்துக்கொள்ள துவங்கிய போது, அவரது சகோதரர்கள் கிர்தாரி, அஜய் மற்றும் இளைய சகோதரர் ரமேஷ் உடன் இருந்தனர்.
“சிந்திகளாகிய நாங்கள், எப்போதுமே தொழிலதிபர்களாகி எங்களுக்கான பெயரை உருவாக்கிக் கொள்ள விரும்பினோம். துடிப்பான வர்த்தகத்திற்கான அடித்தளம் அமைத்து, எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன்,” என்கிறார்.
துவக்கத்தில் இந்தர் மற்றும் சகோதரர்கள் கடையை நடத்தியபடி, வயர்கள் மற்றும் கேபில்களை சோதனை முறையில் தயாரித்து பார்த்தனர். எனினும், 1983ல்; குஜராத்தில் மின்சாரப் பொருட்களை தயாரிப்பதற்காக பாலிகேப் எனும் நிறுவனத்தைத் துவக்கிய போது அவர்களின் வெற்றி ஆரம்பமானது.
பாலிகேபின் ஆரம்ப நாட்கள் சகோதர்களுக்கு சோதனையும் சவால்களும் நிரம்பியதாக இருந்தது. பிவிசி சுற்றிய வயர்கள், கேபில்கள், மற்றும் தாமிரம், அலுமினியம் வயர்களை தயாரிப்பதற்காக குஜராத்தில் ஹலாலில் ஆலை அமைத்தனர்.
லாபத்தின் பெரும்பகுதியை அவர்கள் பாலிகேப் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். கொஞ்சம் பணத்தை கையிருப்பாக வைத்துக்கொண்டனர். எனினும் ஆர்ம்ப காலத்தில் மூலதனம் என்பது பெரும் சவாலாக இருந்தது.
“வளங்கள் சொற்பமாகவே இருந்தாலும், மனம் இருந்தால் மார்கம் உண்டு எனும் வாக்கில் நம்பிக்கைக் கொண்டிருந்தோம். கடினமான இலக்குகளை வைத்துக்கொண்டு துரத்திச்சென்றோம். இதனால் வாய்ப்புகள் உண்டாகி, நிறுவனம் பெரிதாக வளரும் என நம்பினோம்.”
2009ல் நிறுவனம், பொறியில, கொள்முதல் மற்றும் கட்டுமானம் வர்த்தகத்தில் விரிவாக்கம் செய்தது. கிராமப்புற மின் திட்டங்களுக்கான வடிவமைப்பு,பொறியியல், மற்றும் செயலாக்கத்தில் ஈடுபட்டனர்.
“தரமான தயாரிப்புகளால் எங்கள் பிராண்ட் மதிப்பு உயர்ந்த போது, சந்தையில் தரமான நுகர்வோர் பொருளுக்கான இடைவெளி இருப்பதாக உணர்ந்தோம். எங்கள் டீலர்களும் இதே எண்ணம் கொண்டிருந்தனர். 2014ல் மின்விசிறி, ஸ்விட்ச்கள், சோலார் சாதனங்கள், மின்சாதனங்களை தயாரிக்கத் துவங்கினோம்,” என்கிறார் இந்தர்.
இன்று பாலிகேப், 25 உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. நிறுவனம், இந்தியாவில் 3,450 டீலர்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும்,1,25,000 விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்கிறது.
2019ல் நிறுவனம் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆண்டுக்கு ரூ.7,985 கோடி விற்றுமுதல் கொண்டுள்ளது.
நீல்கமல் (Nilkamal)
1981ல், வாமன்ராய் பரேக் மற்றும் ஷரத் பரேக், தங்கள் குடும்பத் தொழிலான பட்டன் உற்பத்தியில் இருந்து விலகி, அப்போது பிரபலமாகத் துவங்கியிருந்த பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தனர்.
மும்பையின் பவாய் பகுதியில் வாடகை இடத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் தயாரிப்பைத் துவக்கினர். நில்கமல் லிமிடெட்டாக மாறிய நீல்கமல் பிளாஸ்டிக்சின் பயணம் இப்படித் தான் துவங்கியது.
சகோதரர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் வர்த்தகத்தை மேற்கொண்டிருந்த போது, பால் பாட்டில்களைக் கொண்டு செல்ல மரத் தட்டுகள் பயன்படுத்தப்படுவதைப் பார்த்தனர். பிளாஸ்டிக் தட்டுகள் இதைவிட எளிதாக இருக்கும் என நினைத்தனர்.
“பால் பண்ணைகளில் தினமும் 1,000 தட்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என் தாத்தாவும், அவரது சகோதரரும் இந்த துறையில் பெரும் வாய்ப்பை உணர்ந்தனர். எனவே 80-களின் மத்தியில், அந்தேரியில் ஆலை அமைத்து, பிளாஸ்டிக் தட்டுகளை தயாரிக்கத்துவங்கினோம்,” என்கிறார் மூன்றாம் தலைமுறையைச்சேர்ந்தவரும், நீல்கமல் நிறுவன நிர்வாக இயக்குனருமான மிஹிர் பரேக்.
இந்த காலகட்டத்தில் இந்தியர்கள் மரம் அல்லது இரும்பு நாற்காலியை அதிகம் பயன்படுத்தி வந்தனர். வாமன்ராய் மற்றும் ஷரத் ஜெர்மனியில் இருந்து நாற்காலி வார்ப்பை ஆர்டர் செய்து அவற்றை இந்தியாவில் விற்கத்துவங்கினர்.
நீல்கமல் பர்னீச்சர்கள் இப்படி தான் ஆரம்பமானது. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதிக நிதி தேவை. சொந்த நிதியில் நிறுவனத்தை நடத்தி வந்ததால், பங்கு வெளியீடு செய்ய வேண்டும் என நிறுவனர்கள் நினைத்தாலும், அப்போதைய பொருளாதார சூழ்நிலை ஏற்றதாக இல்லை.
“வர்த்தகத்தை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற பொது பங்குகளை வெளியிடுவது சரி என தாத்தா நினைத்தார். ஆனால், 1991ல் பங்குச்சந்தையில் பட்டியலிடத் தீர்மானித்த போது வளைகுடா போர் மூண்டு, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இந்தியாவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை உண்டானது. இருப்பினும், பங்கு வெளியீடு நடைபெற்று, நல்ல வரவேற்பும் கிடைத்தது- எங்கள் பங்கு வெளியீட்டிற்கு 6.5 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன,” என்கிறார் மிஹிர்.
நீல்கமல் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்துள்ளது. நிறுவனம் பிளாஸ்டிக் சார்ந்த வேறு பிரிவுகளிலும், விரிவாக்கம் செய்துள்ளது. ஆண்டு விற்றுமுதல் ரூ.2,200 கோடியாக இருக்கிறது.
ஷாலிமார் பெயிண்ட்ஸ் (Shalimar Paints)
ஒன்றல்ல இரண்டு தீவிபத்துகளை எதிர்கொண்டு மீண்டு வந்த ஷாலிமார் பெயிண்டின் கதை ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது. 2014ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்து, நிறுவனத்தின் ஹவ்ரா ஆலையை சாம்பலாக்கியது. 2016ல் நாசிக் ஆலையில் தீ விபத்து உண்டானது.
“நிறுவனத்திற்கு இவை சோதனையான காலமாக அமைந்தது. இரண்டு முறையும் சேதம் அதிகமாக இருந்தது. முதல் தீவிபத்தில் இருந்து மீண்டு வரும் போது இரண்டாவது சம்பவம் நடைபெற்றது,” என்கிறார் ஷாலிமார் பெயிண்ட்ஸ் துணைத்தலைவர் மினால் ஸ்ரீவத்ஸ்வா.
ஷாலிமார் பெயிண்ட்ஸ் இந்தியாவில் பழைமையான உற்பத்தி பிராண்ட்களில் ஒன்றாக இருக்கிறது. 1902ம் ஆண்டு மேற்குவங்கத்தில் நிறுவனம் துவக்கப்பட்டது. ஆங்கிலேயே தொழில்முனைவோர்களால் துவங்கப்பட்டு பின்னர் பல நிர்வாகங்கள் கைமாறிய நிலையில், 1989ல் ஓ.பி.ஜிண்டால் குழுமம் மற்றும் எஸ்.எஸ்.ஜுன்ஜின்வாலா குழுமம் கைகளுக்கு மாறியது.
ஹவ்ரா பாலம், ராஷ்ட்ரபதி பவன் உள்ளிட்ட இந்தியாவில் அடையாளச் சின்னங்கள் பல ஷாலிமார் பெயிண்ட் வர்ணத்தைக் கொண்டுள்ளன. நிறுவனம் தொழிற்சாலை பெயிண்ட் தயாரிப்பும் ஈடுபட்டுள்ளது.
தீ விபத்திற்கு பிறகு உற்பத்தித் தடைப்பட்டது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியவில்லை. பின்னர் மீண்டு வரும் போது அடுத்த தீவிபத்து உண்டானது. எனினும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கை எங்களைக் காப்பாற்றியது, என்கிறார் மினால்.
ஷாலிமார் பெயிண்ட்ஸ் வலுவாக மீண்டு வந்து. 2019 நிதியாண்டில் ரூ.367.3 கோடி விற்றுமுதல் பெற்றுள்ளது. நாடு முழுவதும் 30 டிப்போக்கள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட டீலர்களைக் கொண்டுள்ளது. 1961ல் பொது லிமிடெட் நிறுவனமாக மாறியது.
Shahlon
1984ல் குஜ்ராத்தின் சூரத்தில், தீரஜ்லால் ஷா, அரவிந்த ரவிச்ந்த் ஷா மற்றும் நிதின் ரவிசந்த் ஷா ஆகிய சகோதரர்கள் சிறிய ஜவுளி ஆலையை துவக்கினர். நிறுவனத்திற்கு ஷாலான் (Shahlon) என பெயரிடப்பட்டது.
“அந்த காலத்தில் ஜவுளி நிறுவனங்கள் தான் தொழில்மயமாக்கத்தில் முன்னணியில் இருந்தனர். நாட்டின் தொழில் உற்பத்திக்கு இந்தத் துறை முக்கியம் என உணர்ந்ததால் வளர்ச்சி வாய்ப்பை உணர்ந்தோம்,” என்கிறார் தீரஜ்லா ஷா.
ஆனால் நிறுவன வெற்றி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. சகோதரர்கள் 16 ஆண்டுகள் விடாமுயற்சியிடன் செயல்பட்டனர். பாரம்பரிய பவர்லூம்களுடன், வாட்டர் ஜெட் லூம்களையும் கொண்டு வந்தனர். 2000 ஆவது ஆண்டு, ரிலையனஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்துடனான கூட்டு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
அடுத்த பத்தாண்டுகளில் நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து, காற்றாலை நுட்பத்தையும் உற்பத்தியில் பயன்படுத்த துவங்கியது.
“2011க்கு பிறகு, யார்ன் டையிங்கில் நல்ல வாய்ப்பை உணர்ந்து மேலும் செயல்திறனை அதிகரித்தோம்,” என்கிறார் தீரஜ்லால் ஷா. 2019ல் பொது பங்குகளை வெளியிட்ட நிறுவனம் ரூ.382 கோடி விற்றுமுதலை பெற்றுள்ளது.
ஆங்க்ல கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்-சைபர்சிம்மன்