பிளாஸ்டிக் தொடங்கி கொரோனா படுக்கை வரை- பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ள Nilkamal நிறுவனம்!
மும்பையில் வாடகை இடத்தில் தொடங்கப்பட்டு இன்று 2,200 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ள Nilkamal பிராண்ட் கோவிட்-19 பெருந்தொற்று சூழலுக்கு ஏற்ப தனிமைப்படுத்தும் படுக்கைகளை தயாரித்து மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளித்துள்ளது.
வாமன்ராய் பரேக், ஷரத் பரேக் இருவரும் சகோதரர்கள். இவர்களது குடும்பத்தினர் பட்டன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சகோதரர்கள் இருவரும் 1981-ம் ஆண்டு குடும்ப வணிகத்தில் இருந்து விலகி பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்கள். பிளாஸ்டிக் தயாரிப்புகள் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கிய காலகட்டம் அது.
இந்த சகோதரர்கள் இருவரும் மும்பையின் பொவாய் பகுதியில் சிறியளவில் வணிகத்தைத் தொடங்கினார்கள். வாடகைக்கு இடம் எடுத்து பக்கெட், பேஸ்கெட், மக் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இவ்வாறு தொடங்கப்பட்ட முயற்சி பிரம்மாண்ட பிராண்டாக உருவாகியுள்ளது.
கடந்த நாற்பதாண்டுகளில் மூலை முடுக்குகளிலும் சென்றடைந்து வாடிக்கையாளர்களின் நம்பகமான பிராண்டாக உருவாக்கியுள்ளது. மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரான மிஹிர் பரேக் வணிக பயணம் குறித்து எஸ்எம்பிஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார்.
தற்போது Nilkamal லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகிக்கும் மிஹிர் பரேக் சந்தை போக்குகளுக்கு ஏற்ப தொடர்ந்து புதுமை படைத்து, நிலைநிறுத்திக்கொண்டு வளர்ச்சியடைந்தது குறித்து விரிவாக விவரித்தார்.
பி2சி மற்றும் பி2பி பிரிவு
வாமன்ராய், ஷரத் இருவரும் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் விரிவாக்கம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஒருமுறை இருவரும் Worli Dairy பார்வையிடும்போது பால் பாட்டில்கள் எடுத்துச் செல்ல மரத்தால் ஆன கிரேட் பயன்படுத்தப்படுவதைக் கவனித்தார்கள்.
இதற்கு மாறாக பிளாஸ்டிக் கொண்டு தயாரித்தால் கையாள எளிதாக இருக்கும்; நீடித்திருக்கும்; விலையும் குறைவு என்பதை இந்த சகோதரர்கள் உணர்ந்தனர்.
“ஒரு பால் பண்ணையில் சுமார் 1,000 கிரேட் பயன்படுத்தப்பட்டன. பொருட்களைக் கையாளும் பிரிவில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை என் தாத்தாவும் அவரது சகோதரரும் உணர்ந்தனர். இதனால் 80-களில் கிரேட் தயாரிப்பைத் தொடங்கினார்கள். மும்பை அந்தேரியில் மற்றுமொரு தொழிற்சாலை அமைத்துத் தயாரிப்பைத் தொடங்கி பி2பி பிரிவில் செயல்பாடுகளைத் தொடங்கினார்கள்,” என்று எஸ்எம்பிஸ்டோரி இடம் மிஹிர் பகிர்ந்துகொண்டார்.
80-களில் ஜெர்மனியில் கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்த சகோதரர்கள் இருவரும் பிளாஸ்டிக் நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கவனித்தனர். இந்தியாவில் அந்த சமயத்தில் மரம் அல்லது உலோக நாற்காலிகளே பயன்பாட்டில் இருந்தன.
வாமன்ராய், ஷரத் இருவரும் ஜெர்மனியில் இருந்து பிளாஸ்டிக் மோல்ட் ஆர்டர் செய்து வாங்கி இந்தியாவில் பிளாஸ்டிக் நாற்காலிகள் தயாரிக்கத் தீர்மானித்தார்கள். Nilkamal பிராண்டின் ஃபர்னிச்சர் தயாரிப்புப் பணிகள் இப்படித்தான் தொடங்கப்பட்டது.
வணிக விரிவாக்கத்திற்கு நிதி அதிகம் தேவைப்பட்டது. இதற்கு சகோதரர்கள் இருவரும் பங்குகளை வெளியிட்டு மூலதனம் திரட்டத் தீர்மானித்தார்கள். இருப்பினும் 90-களில் பொருளாதாரச் சூழல் சாதகமாக இல்லை.
“வணிகத் திறனை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையைப் பெறவும் பங்கு வெளியிடுவதே சிறந்தது என்பது என் தாத்தாவின் கருத்தாக இருந்தது. இருப்பினும் 1991-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிட அவர் திட்டமிட்டபோது வளைகுடாப் போர் மூண்டது. எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டது. இந்தியாவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இருப்பினும் துணிந்து பங்குகளை வெளியிட்டார். நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்றார்.
பொருட்களைக் கையாளும் வணிகம், இன்சுலேட் செய்யப்பட்ட ஐஸ்பாக்ஸ் மற்றும் மீன்களை கொண்டு செல்ல உதவும் டப், கழிவு மேலாண்மை டூல், சாலை பாதுகாப்புப் பொருட்கள் என இந்நிறுவனம் சிறப்பாக விரிவடைந்துள்ளது.
90-களின் இறுதியில் இரண்டாம் தலைமுறை தொழில்முனைவர்களான ஹித்தேன் பரேக், நயன் பரேக் மற்றும் மனீஷ் பரேக் பொறுப்பேற்று ஃபர்னிச்சர் பிரிவை வளர்ச்சியடையச் செய்தனர்.
19,000 சில்லறை வர்த்தகப் பகுதிகளுக்கு Nilkamal தயாரிப்புகளை விநியோகிக்கும் 2,000-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள், பி2பி பிரிவை நிர்வகிக்கும் 400-க்கும் மேற்பட்டோர் அடங்கிய விற்பனைக் குழு ஆகியவற்றுடன் இந்நிறுவனம் 2,200 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ளது.
இந்தியாவில் 10 Nilkamal தொழிற்சாலைகளும் இலங்கையில் ஒரு தொழிற்சாலையும் இயங்கி வருகின்றன. இந்நிறுவனம் 2005-ம் ஆண்டு @Home என்கிற ஃபர்னிச்சர் சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் ஸ்டோர்களை அறிமுகப்படுத்தியது. 2012ம் ஆண்டு Nilkamal Matrezzz மற்றும் 2019-ம் ஆண்டு Doctor Dreams என்கிற மெத்தை பிராண்டையும் அறிமுகப்படுத்தியது.
பேக்கேஜிங் துறை
முதலீட்டு வங்கித் துறையில் இரண்டாண்டுகள் பணியாற்றிய பின்னர் மிஹிர் குடும்ப வணிகத்தில் இணைந்தார். மூன்றாம் தலைமுறை தொழில்முனைவராக வணிக செயல்பாடுகளில் புதுமை படைக்க விரும்பினார்.
பேக்கேஜிங் துறையில் காணப்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பிரிண்டிங், பேக்கெஜிங், பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் மாற்றத்தைக் கொண்டு சேர்க்க Nilkamal BubbleGUARD அறிமுக்கப்படுத்தும் யோசனையை இவர் முன்வைத்தார்.
கடினமான சூழல்களிலும் புதுமை
இந்தியாவில் பெருந்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை Nilkamal முன்னரே கணித்திருந்தது. பொருட்களை கையாளும் பிரிவு அத்தியாவசியப் பொருட்களின்கீழ் வந்தாலும்கூட மற்ற தயாரிப்புகளின் விற்பனை பாதிக்கப்பட்டன.
“பெருந்தொற்று பரவத் தொடங்கிய கட்டத்தில் இந்தியாவில் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அவசரத் தேவை ஏற்படும் என்பதை உணர்ந்தோம். இந்தச் சூழலுக்குத் தேவையான தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கினோம்,” என்றார்.
சுவாசப்பிரச்சனை இருக்கும் நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் படுக்கை, தனிமைப்படுத்தும் பகுதிகளுக்கான ஸ்டீல் படுக்கை, தற்காலிக மருத்துவமனைகளில் பயன்படுத்தும் வகையில் மூன்று நிமிடங்களில் அசெம்பிள் செய்யக்கூடிய புதுமையான எடை குறைந்த படுக்கை போன்றவற்றை இந்நிறுவனம் உருவாக்கியது.
Nilkamal நிறுவனத்திற்கு பாலிப்ரொப்பிலீன் மூலப்பொருட்களை விநியோகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் டெல்லியில் உள்ள சர்தார் படேல் கோவிட் மையத்திற்கு 2,000 கோவிட் படுக்கைகள் மற்றும் படுக்கைக்கு அருகில் வைக்கக்கூடிய 2,000 கேபினட்களையும் Nilkamal நன்கொடையாக வழங்கியது. மேலும் நவி மும்பை மருத்துவமனைக்கு 1,500 படுக்கைகளையும் மும்பை பிகேசி மருத்துவமனைக்கு 1,000 படுக்கைகளையும் விநியோகித்துள்ளது.
பேருந்துகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் வகையில் இருக்கைகளுக்கு இடையில் TravelGUARD தடுப்பு வடிவமைத்தது.
தனித்துவம் மற்றும் திட்டம்
உயர் தரம், வாடிக்கையாளர்கள் மீது முழு கவனம் செலுத்தும் போக்கு, புதுமையான தயாரிப்புகள், வலுவான சானல் பார்ட்னர்கள் போன்றவை இந்நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது.
“தற்போதைய பெருந்தொற்று சூழலானது எங்களது வணிக உத்திகளை மாற்றியமைக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிக செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.
வரும் நாட்களில் டிஜிட்டல் செயல்பாடுகளுடன் விரிவடைய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா