வீடு வீடாக பேப்பர் போட்ட இளைஞன், இன்று கோடிகளில் வருவாய் ஈட்டும் திருமண ஏற்பாட்டாளர்!
குடும்ப வறுமையால் வண்டி ஓட்டுனர், பேப்பர் போடும் வேலை என கிடைத்ததை செய்த இளைஞன், தான் கண்ட கனவினை நிறைவேற்றியக் கதை இது...
2011-ம் ஆண்டில் ஆனந்த் கந்தேல்வல் தனது நண்பர்களுடன் ஜெய்ப்பூரில் உள்ள உள்ளூர் டீக்கடை ஒன்றில் அதிக நேரம் செலவிடுவார். இவ்வாறு நேரம் செலவிடும்போது சந்தையில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து ஒருவரோடொருவர் கலந்துரையாடுவது வழக்கம்.
ஆனந்தின் அப்பா மசாலா வணிகத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தார். கடனை அடைக்கத் தனது கார், வீடு, தொழிற்சாலை அனைத்தையும் விற்றுவிடும் நிலை ஏற்பட்டது. இது குறித்து ஆனந்தின் நண்பர்கள் நன்கறிவர்.
ஆனந்த் குடும்பச் செலவுகளை நிர்வகிக்க செய்தித்தாள் விநியோகம் செய்வது, ஓட்டுநர் வேலை செய்வது என கிடைத்த சிறு வேலைகளைச் செய்து வந்தார்.
“அந்த சமயத்தில் வீட்டில் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனவே பணம் சம்பாதிப்பதற்காகக் கிடைத்த வேலையைச் செய்தேன். என்னுடைய பணி வாழ்க்கை குறித்து நான் அப்போது எதுவும் தீர்மானிக்கவில்லை,” என்று எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் ஆனந்த் தெரிவித்தார்.
ஆனால் ஆனந்தின் ஓட்டுநர் பணி அதிக நாள் நீடிக்கவில்லை. அவர் ட்ரைவர் பணியைத் தொடங்கியபோது அவருக்கு 16 வயது. வேறு வழியின்றி போலியான ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தார். இந்த விஷயம் அவரது முதலாளிக்குத் தெரிந்தது. ஆனந்தை பணிநீக்கம் செய்துவிட்டார்.
ஆனந்த் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைத் தொடர்ந்தார். ஆனால் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
திருமண ஏற்பாடு துறை
உள்ளூர் தேநீர் கடையில் ஒருமுறை நடந்த உரையாடல் அவரது வாழ்க்கையின் போக்கை திசைதிருப்பியது. நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் திருமண திட்டமிடல் துறை குறித்தும் அது அவ்வாறு வளர்ச்சியடைந்து வருகிறது என்பது குறித்தும் ஆன்ந்தின் நண்பர் ஒருவர் அவரிடம் தெரிவித்தார்.
ஆனந்தின் நண்பர் சரியாகவே கணித்திருந்தார். இந்திய திருமண திட்டமிடல் துறை கடந்த சில ஆண்டுகளில் 25 முதல் 30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் 45,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக உருவாகும் சாத்தியமுடையது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திருமண திட்டமிடல் துறையில் அதிக லாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்ந்த ஆனந்த் இந்தப் பிரிவில் செயல்படத் தீர்மானித்தார்.
“நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் முயற்சி செய்ய விரும்பினேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் உள்ளூர் திருமணங்களில் நானே முன்வந்து அனைத்து பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினேன்,” என்றார்.
திருமணங்களில் தன்னார்வலராக இணைந்துகொண்டதால் திருமணங்கள் ஏற்பாடு செய்யும் முறை குறித்து தெரிந்துகொள்ள முடிந்தது. இதன் மூலம் அவருக்கு நேரடியாக நடைமுறை அனுபவம் கிடைத்தது.
எனினும் இந்தப் பகுதியில் செயல்பட முறையான அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தார். அவர் நிகழ்ச்சி மேலாண்மை பிரிவில் முறையாக பட்டமோ சான்றிதழோ பெறவில்லை. ஐஐடி-யில் படித்து பொறியாளர் ஆகவேண்டும் என்கிற விருப்பம் அவருக்கு இருந்ததில்லை.
நிகழ்ச்சி மேலாண்மை பிரிவில் படிப்பது குறித்து தெரிந்தபோதும் அவரது குடும்பத்தின் நிதிச்சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. முதல் தவணையாக 5,000 ரூபாய் கட்டவேண்டியிருந்தது. ஆனால் ஆனந்தால் அந்தத் தொகையை ஏற்பாடு செய்யமுடியவில்லை.
அப்போது திடீரென்று அவரது பாட்டி மூலம் அவருக்கு உதவி கிடைத்தது.
“என் பாட்டியிடமிருந்து 5,000 ரூபாய் கடன் வாங்கி நிகழ்ச்சி மேலாண்மை பாடப்பிரிவில் சேருவதற்கான முதல் தவணையைக் கட்டினேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் பயிற்சியாளராக பணிபுரியத் தொடங்கினேன்,” என்றார்.
விரைவில் கட்டணத்தின் இரண்டாம் தவணையை செலுத்தவேண்டிய நேரம் வந்தது. இந்த முறை அதிர்ஷ்ட்டம் அவர் பக்கம் இல்லை. பணத்தைத் திரட்ட முடியாமல் போனதால் படிப்பை நிறுத்திக்கொண்டார்.
“நான் நிகழ்ச்சி மேலாண்மை பாடத்தில் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் செலவிட்டேன். அந்தக் காலகட்டத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். நான் படிப்பை நிறுத்தியபோதும் அதே துறையில் பணியில் சேர்ந்தேன்,” என்றார்.
இருப்பினும் அவரது நிலை மேம்பட இந்தப் பணி உதவவில்லை. அவரை பணியிலமர்த்தியவர் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சம்பளம் கொடுக்கவில்லை.
“எனக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஆனால் சிறந்த அனுபவம் கிடைத்தது. வாடிக்கையாளர்களைக் கையாளும் விதத்தைத் தெரிந்துகொண்டேன். எனவே வேலையில் சேராமல் சொந்த முயற்சியில் இறங்க விரும்பினேன்,” என்றார்.
தொழில்முனைவின் ஆரம்ப நாட்கள்
ஆனந்த் 2012-ம் ஆண்டு இண்டியன் வெட்டிங் பிளானர்ஸ் (Indian Wedding Planners IWP) தொடங்கியபோது அவருக்கு 20 வயது. கையிருப்பாக 2,000 ரூபாய் மட்டுமே வைத்திருந்தார். கிரெடிட் கார்ட் விண்ணப்பித்து அதைக் கொண்டு லேப்டாப் வாங்கினார். பிரத்யேகமாக அலுவலகம் இல்லாததால் டீக்கடையில் இருந்தே பணியைத் தொடங்கினார்.
“நான் டீக்கடையில் இருந்தவாறே திருமண ஏற்பாடுகள் செய்வோரைத் தேடிவரும் நபர்களை இணையம் வாயிலாகக் கண்டறிந்தேன். நீண்ட தேடலுக்குப் பிறகு ஒரு வாடிக்கையாளர் அறிமுகமானார். அவருக்கான திருமண ஏற்பாட்டை செய்தேன். துறையில் எனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு உணவு, விளக்குகள், ஜெனரேட்டர் செட் என அனைத்தையும் ஏற்பாடும் செய்தேன்,” என்றார் ஆனந்த்.
இந்த வாடிக்கையாளர் திருமண ஏற்பாடுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். IWP செலவுகளைக் கழித்த பிறகு ஆனந்திடம் 15,000 ரூபாய் மிச்சமிருந்தது.
அது வெறும் துவக்கப் புள்ளி மட்டுமே. தொடர்ந்து திருமண ஏற்பாடுகளுக்காக பல வாடிக்கையாளர்கள் என்னை அணுகினார்கள். ஆரம்பத்தில் மூன்று திருமண ஏற்பாடுகள் செய்த பிறகு கார்த்திகா சர்மாவை சந்தித்தேன். அவர் IWP-ல் வணிக பார்ட்னர் ஆனார்,” என்று நினைவுகூர்ந்தார்.
பின்னர் ஆனந்த் ஆடம்பர திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தீர்மானித்தார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கார்ப்பரேஷன் நிர்வாகிகள் போன்றோர்களுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தார்.
ஆனந்த் வழங்கிய சேவை மெல்ல விரிவடைந்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. 16 ஊழியர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினார். சேவைகளையும் விரிவுபடுத்தினார்.
விற்பனையாளர்களை நிர்வகிப்பது, நிகழ்ச்சி நிரல், அலங்காரங்கள் தொடர்பான திட்டமிடல், விருந்தினர் மேலாண்மை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நடன ஏற்பாடு, உணவு மற்றும் பானங்கள் மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ் போன்ற சேவைகளை IWP வாடிக்கையாளார்களுக்கு வழங்கத் தொடங்கியது.
“நாங்கள் இந்தச் சேவையைத் தொடங்கியபோது இந்தப் பிரிவில் வேறு எந்த நிறுவனமும் செயல்படவில்லை. பூ ஏற்பாடு, நிகழ்ச்சி மேலாண்மை, அலங்காரம் என பிரத்யேக பிரிவில் செயல்படும் வணிகங்கள் இருந்தன. ஆனால் திருமணம் தொடர்பான முழுமையான ஏற்பாடுகளை முதன் முதலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியது எங்கள் நிறுவனமே. திருமண ஏற்பாடுகளை வாடிக்கையாளர்கள் எங்களிடம் ஒப்படைத்துவிட்டால் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்,” என்றார்.
சவால்கள் மற்றும் கற்றல் அனுபவங்கள்
ஆனந்த் 20 வயதிருக்கையில் வணிக முயற்சியைத் தொடங்கினார். இளம் வயதிலேயே வணிகத்தில் ஈடுபட்டதால் தனித்துவமான சவால்களை சந்திக்க நேர்ந்தது.
ஆனந்த் இளம் வயதினர் என்பதால் திருமண ஏற்பாடுகளை நம்பி ஒப்படைக்க வாடிக்கையாளர்கள் சற்றே தயங்கினர். 20-களில் உள்ள ஒரு நபர் குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் திருமண ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடிப்பது சாத்தியமா என்பதில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
ஆனந்த் ஒரு சில தவறுகள் செய்திருந்தாலும் அதிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார். திருமண ஏற்பாடுகள் துறையில் பங்களிக்கும் பலரைச் சந்தித்து உரையாடியதில் வாடிக்கையாளர்களைக் கையாளும் முறையைக் கற்றுக்கொண்டார்.
“எங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பான புரிதல் இருப்பது அவசியம். இளம் வயதினராக இருப்பினும் என்னுடைய தவறுகளுக்கு நான் எப்போதும் பொறுப்பேற்றுக்கொள்வேன். இதனால் சில வாடிக்கையாளர்கள் மன்னிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்வார்கள்,” என்றார்.
மேலும் ஆனந்த் IWP செலவுகளைத் தனியாகவும் திட்டமிடல் கட்டணத்தைத் தனியாகவும் வாடிக்கையாளர்களிடம் வெளிப்படையாகத் தெரியப்படுத்துகிறார். விற்பனையாளர்களிடம் கமிஷன் பெற்றுக் கொள்வதில்லை என ஆனந்த் தெரிவிக்கிறார்.
“சில குறிப்பிட்ட தருணங்களில் விற்பனையாளர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களின் செலவுகள் குறைய உதவுகிறோம். திருமண ஏற்பாடுகள் பரிந்துரை சார்ந்தே செயல்படுகிறது என்பதால் எங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என்றார்.
இன்று IWP அலுவலகங்கள் ஜெய்ப்பூர், டெல்லி ஆகிய இரு பகுதிகளிலும் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலோ அல்லது துபாய், அபுதாபி, மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளிலோ டெஸ்டினேஷன் வெட்டிங் ஏற்பாடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. IWP 700 பேர் வரை பங்கேற்கும் திருமணங்களைக் கையாள்வதாக ஆனந்த் தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டு இந்நிறுவனம் டெஸ்டினேஷன் வெட்டிங் மூலம் 7.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. பொழுதுபோக்கு, அலங்காரம் மற்றும் இதர சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் இதில் இணைக்கப்படவில்லை.
பெரும்பாலான வணிக வாய்ப்புகள் IWP வலைதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே உருவானது. அடுத்தகட்டமாக இன்ஸ்டாகிராம் மூலமாக பலரைச் சென்றடைவதில் கவனம் செலுத்த விரும்புகிறார் ஆனந்த். மும்பை மற்றும் துபாயில் செயல்படவும் IWP செயல்பாடுகளை விரிவுபடுத்த நிதி உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார்.
“இத்தனை ஆண்டுகளில் திருமணங்கள் என்னுடன் ஒன்று கலந்துவிட்டது. தோல்விகள், சந்தேகங்கள் போன்றவை இருப்பினும் தொடர்ந்து செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். IWP இன்னமும் நிறைய மைல்கற்களை எட்டவேண்டியுள்ளது,” என்றார் ஆனந்த்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா