அஞ்சலகங்களில் தூள் பறக்கும் தேசியக்கொடி விற்பனை; எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
இந்தியாவின் 75 வயது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
75ம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பே பல்வேறு ஸ்பெஷல் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூலை முடுக்கெங்கும் மூவர்ணக் கொடியைப் பறக்க விடவும் திட்டமிட்டுள்ளது.
'இல்லதோறும் மூவர்ண கொடி' (ஹர் கர் திரங்க) என்ற திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். இதன்படி, சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் மக்கள் தங்களது சோசியல் மீடியா முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்திருந்தனர், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது டி.பி.யை மாற்றியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக இந்தியாவிலேயே முதன் முறையாக தபால் நிலையங்கள் தேசியக் கொடிகளின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, விழுப்புரம், விருதுநகர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 2,191 தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, சென்னை நகர மண்டலத்திலுள்ள 20 தலைமை தபால் நிலையங்கள், 545 துணை தபால் நிலையங்கள் மற்றும் 1626 கிளை அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.
ஆர்.எஸ்.புரம், குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையம் உள்பட கோவையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பளபளக்கும் துணியில் தைக்கப்பட்ட தேசியக்கொடி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
www.epostoffice.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் கொடிகளை வாங்கலாம். மேலும், தபால் நிலையங்களில் கொடிகள் மொத்தமாக விற்பனை செய்யப்படும் என சென்னை நகர மண்டல அஞ்சல் மாஸ்டர் ஜெனரல் ஜி.நடராஜன் தெரிவித்துள்ளார். அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய கொடிகளுடன் புகைப்படம் எடுக்கும் வகையில் செல்ஃபி பாயின்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
கொடிகளை விற்பனை செய்வது மட்டுமின்றி, தெருவோர வியாபாரிகள், பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களைச் சென்றடையும் வகையில், தேசியக்கொடி குறித்த பிரச்சாரத்திலும் தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள 1.60 லட்சம் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.