‘இல்லம் தோறும் மூவர்ணக்கொடி’ - தேசியக் கொடி வரலாறு முதல் பயன்படுத்தும் விதம் வரை தெரிந்து கொள்ளுங்கள்!

சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் இந்த பொன்னாளில், பட்டொளி வீசும் நமது மூவர்ண கொடி உருவானது எப்படி, அதன் பொருள், தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி பார்க்கலாம்...
22 CLAPS
0

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட உள்ளது. 75வது சதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' (Azadi ka Amrit Mahotsav) என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ‘இல்லம் தோறும் மூவர்ணகொடி’ (Har Ghar Tiranga) ’ஹர் கர் திரங்கா' என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மக்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து, லட்சக்கணக்கான மக்கள் டி.பி.யை மாற்றியுள்ளார்.

தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நினைவுகூறும் வகையில், நாட்டு மக்களுக்கு இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாராகி வரும் இந்த பொன்னாளில், பட்டொளி வீசும் நமது மூவர்ண கொடி உருவானது எப்படி, அதன் பொருள், தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி பார்க்கலாம்...

தேசிய கொடி வரலாறு:

காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி ஆங்கிலேயே ஆட்சியில் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. அப்போது தான் சுதந்திர இந்தியாவிற்கு தனியொரு அடையாளம் தர ஒரு கொடி தேவை என நினைத்தனர். அதற்கு முன்னதாக சுதந்திர போராட்டத்தை பிரதிபலிக்கும் சின்னமாக தேசியக்கொடி ராட்டை சின்னத்துடன் உருவாக்கப்பட்டது.

1921ஆம் ஆண்டில் “பிங்கலி வெங்கய்யா” (Pingali Venkayya) என்ற பல்கலைக்கழக விரிவுரையாளர், காந்திக்கு ஒரு கொடி வடிவமைப்பை வழங்கினார். அதில் இந்துக்களுக்கு சிவப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு பச்சை ஆகிய இரண்டு முக்கிய மதங்களுடன் தொடர்புடைய நிறங்கள் இருந்தன. கிடைமட்டமாகப் பிரிக்கப்பட்ட கொடியின் மையத்தில், காந்தியின் சுதந்திர போராட்டத்தை எடுத்துரைக்கும் விதமாக நூல் நூற்கும் ராட்டை இடம் பெற்றிருந்தது.

அந்த தேசியக்கொடியில், கிருஸ்துவர்கள், யூதர்கள், பார்சிகள் ஆகியோரை பிரதிபலிக்கும் விதமாக வெள்ளை நிறத்தை சேர்க்கும் படி, மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் கொடி மாற்றி வடிவமைக்கப்பட்டது. மே 1923ல் நாக்பூரில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.

1931 ஆம் ஆண்டு, காங்கிரஸின் கொடிக் குழு, மூவர்ண கொடியில் சில மாற்றங்களை செய்வதற்காக அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஐதாராபாத்தைச் சேர்ந்த சுரையா தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணி தான், இதற்கு முன்னதாக தேசியக் கொடியில் இருந்த அடர் சிவப்பு நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிறத்தையும், ராட்டைக்கு பதிலாக அசோகச் சக்கரத்தை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், ராட்டைக்கு பதிலாக 24 ஆரங்களைக் கொண்ட அசோக சக்கரத்துடன் கூடிய புதிய தேசிய கொடி 22 ஜூலை 1947ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

யார் அந்த பிங்கலி வெங்கய்யா?

1876 ​ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ள பட்லபெனுமருவில் (இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டினம்) தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் பிங்கலி வெங்கய்யா.

மெட்ராஸில் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, புவியியல், விவசாயம், கல்வி மற்றும் மொழிகளில் கூட திறமையானவர் ஆனார்.

பிரிஷ்ட்களிடம் சிப்பாயாக பணியாற்றி வெங்கய்யா, தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு தான் 19 வயது இளைஞனாக காந்தியை சந்திதார். காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றியவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பின் தொடர்ந்தார். இந்த தொடர்பு தான் இந்தியாவுக்கான தேசியக் கொடியை வடிவமைக்க அவரைத் தூண்டியது.

தேசிய கொடி தயாரிப்பு:

கர்நாடகாவின் தட்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி கிராமத்தில் கர்நாடகா காதி கிராமோதகா சம்யுக்த சங்கம் என்ற அமைப்பு மட்டுமே இந்திய தேசிய கொடியை செய்வதற்கான உரிமையை கொண்டிருந்தன. ஹூப்ளியை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் உற்பத்தி வசதிகளுடன், ஜவுளி வேதியியலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி கல்லூரியும் உள்ளது.

பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) அமைப்பின் படி, சரியான அளவில், சரியான வடிவில் தேசியக்கொடியை இவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும்.

தேசியக்கொடி 9 அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. சிறியது 6×4 இன்ச்களிலும், பெரியது 21X14 அடியிலும் செய்யப்படுகிறது. தேசியக்கொடி தயாரிக்க பயன்படும் ஒவ்வொரு துணியும், 18 முறையான தரக்கண்காணிப்புக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படும்.

தேசிய கொடியை வீட்டில் ஏற்றலாமா?

 • இந்திய சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 26, 2002 அன்று, இந்தியக் கொடி குறியீடு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இந்தியக் கொடியை எந்த நாளிலும் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர், அதற்கு முன்னதாக சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினம் போன்ற தேசிய நாட்களில் மட்டுமே கொடியை ஏற்ற வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது.
 • தேசியக் கொடியை கல்வி நிறுவனங்களில் (பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு முகாம்கள், சாரணர் முகாம்கள், முதலியன) கொடியின் மரியாதையை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றலாம். பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது உறுதிமொழியும் ஏற்க வேண்டும்.
 • ஒரு பொது, ஒரு தனியார் அமைப்பு அல்லது ஒரு கல்வி நிறுவனம் தேசியக் கொடியை அனைத்து நாட்களிலும், சந்தர்ப்பங்களிலும் ஏற்றலாம்/காட்சிப்படுத்தலாம், சடங்கு அல்லது தேசியக் கொடியின் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு இசைவாக இருக்கலாம்.
 • புதிய குறியீட்டின் பிரிவு 2 அனைத்து தனியார் குடிமக்களும் தங்கள் வளாகத்தில் கொடியை பறக்கவிடுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கொடியை அவமதிக்கும் செயல்கள்:

 • தேசியக்கொடி தலைகீழான நிலையில் ஏற்றுவது, காட்சிப்படுத்துவது கூடாது; அதாவது காவி நிறப்பட்டை அடிப்பகுதியில் இருப்பது போல் கம்பத்தில் கொடியை ஏற்றக்கூடாது.
 • கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படக் கூடாது.
 • எந்தவொரு நபருக்கும், பொருளுக்கும் தாழ்வானதாக தேசியக்கொடி இருக்கக்கூடாது.
 • தேசியக் கொடிக்கு உயரமானதாக அல்லது மேலே அல்லது பக்கத்தில் இணையாக வேறு எந்த கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது.
 • தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாளச் சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.
 • தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்படுத்திய பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது.
 • தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது.
 • தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது.
 • தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது.
 • உரையாளரின் மேசை மீது விரிப்பாகவோ, உரையாளரின் மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.
 • அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாத.
 • மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ அல்லது பின்னலிட்டோ தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது.
 • தனியார் இறுதிச்சடங்குகள் உட்பட எந்த நிலையிலும் தேசியக்கொடியை தொங்கவிடக் கூடாது.
 • தேசியக் கொடியின் மீது எழுத்துக்கள் எதையும் பதிவு செய்யக் கூடாது.
 • பொருள்களை மடிக்கவோ, வாங்கவோ அல்லது வழங்கவோ தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.
 • எந்தவொரு வாகனத்தின் ஓரப்பகுதி, பின்பகுதி, மேற்பகுதி ஆகியவற்றை மூடுவதற்கு தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.

தேசியக் கொடி அளவு மற்றும் துணி:

இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002-ல் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட 2021 டிசம்பர் 30 தேதியிட்ட உத்தரவில், பாலியஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது கைத்தறி, விசைத்தறி, பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு, காதி துணியால் தேசியக்கொடி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன்படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம், அகலத்தின் விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

தேசியக்கொடியை அரை கம்பத்தில் பறக்க விடும் முறை:

இந்திய அரசின் உத்தரவு இல்லாமல் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படக்கூடாது. அரைக் கம்பத்தில் பறக்க வேண்டிய போது முதலில் கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு அதன் பிறகு அரை கம்பம் வரையில் இறக்கப்பட வேண்டும். அதேபோல தேசியக் கொடியை இறக்கும்போதும், உச்சிவரை ஏற்றப்பட்டு பின்பு முழுவதும் இறக்கப்பட வேண்டும்.

தேசியக்கொடியை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

இந்திய கொடி குறியீட்டின் 2.2 பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசியக்கொடியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அதை எரித்தோ, அல்லது வேறு வழியிலோ தனிமையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

காகித கொடி பொதுமக்களால் அசைக்கப்பட்ட பிறகு அவற்றை தரையில் போடக்கூடாது. தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் தனிமையில் அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

சரி, நம் இந்திய நாட்டு தேசியக் கொடி பற்றிய அனைத்தையும் தெரிந்து கொண்ட நாம், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை நம் வீடுகளில் கொடிகள் ஏற்றியும், அதற்கு உரிய மரியாதையை அளித்தும் ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்...

Latest

Updates from around the world