யூடியூப் சேனலாக தொடங்கி இந்தியாவின் 101-வது யூனிகார்ன் ஆன Physics Wallah-வின் வெற்றுக்கதை!
நடிகர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட அலக் பாண்டே செலிபிரிட்டி டீச்சர் ஆனது மட்டுமல்லாமல் பில்லியன் டாலர் மதிப்புடைய பிசினஸ்மேனாகவும் வளர்ந்து நிற்கிறார்.
இணை நிறுவனர் மற்றும் சிஇஓ Alakh Pandey நடிகர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், வாழ்க்கை திசைமாறிவிட ஆசிரியர் ஆனார். பிறகு செலிபிரிட்டி டீச்சர் ஆனார். தற்போது ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய பிசினஸ்மேனாக வளர்ந்து நிற்கிறார்.
“நான் இப்போது வெற்றியடைந்திருப்பதால் ஆசிரியர் பணியை ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். 2015ம் ஆண்டு ஒரே ஒரு சிறிய அறையில் பாடங்களை வீடியோக்களாக ஷூட் செய்தபோதும் இன்றிருப்பது போலவே சற்றும் ஆர்வம் குறையாமல் ரசித்தபடியேதான் செய்து வந்தேன்,” என்கிறார் கல்வி தொழில்நுட்ப யூனிகார்ட் Physics Wallah நிறுவனர் மற்றும் சிஇஓ அலக் பாண்டே.
இந்த வளர்ச்சிப் பயணத்தைப் பற்றி யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவிடம் பிரத்யேக நேர்காணலின்போது பகிர்ந்துகொண்டார் அலக் பாண்டே.
Physics Wallah இந்த ஜூன் மாதம் WestBridge Capital மற்றும் GSV Ventures நிறுவனங்களிடமிருந்து 100 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 1.1 பில்லியன் டாலர் மதிப்புடையதாக உயர்ந்து இந்தியாவின் 101-வது 'யூனிகார்ன்’ அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.
குழந்தைப் பருவம் – கற்றுக்கொடுப்பதில் ஆர்வம்
அலக் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்று அலகாபாத்தில் இருந்தது. அலக், மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அந்த வீட்டின் ஒரு பகுதியை குடும்பத் தேவைக்காக விற்றுவிட்டார்கள். அலக் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது மீதமிருந்த வீட்டையும் விற்றுவிட்டனர். வாடகை வீட்டிற்கு மாறினார்கள்.
குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு அலக் வளர்ந்தார். அலக்கின் அப்பா வீட்டை விற்ற தொகையிலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து அலக்கிற்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.
“அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார். என்னுடைய கனவை தன் கனவாக நினைத்து எல்லாவற்றையும் செய்தார்,” என்கிறார் அலக்.
அலக் எட்டாம் வகுப்பு படித்தபோதே தன்னைவிட சிறிய வயதுடைய குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள்தான் உண்மையில் Physics Wallah முதல் பேட்ச் மாணவர்கள்.
பாடம் எடுப்பதில் அப்போது தொடங்கிய ஆர்வம் மென்மேலும் அதிகரித்ததே தவிர துளியும் குறையவில்லை. பொறியியல் படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு கிட்டத்தட்ட நான்காண்டுகள் வரை பயிற்சி மையம் ஒன்றில் வகுப்பெடுத்தார். இங்கு குறைவான சம்பளமே கிடைத்துள்ளது.
“நீ நன்றாக வகுப்பெடுக்கிறாய். ஒருநாள் நிச்சயம் 7,000 மாணவர்களுக்கு பாடம் எடுக்கத்தான் போகிறாய் என்று என் பார்ட்னர் ஒருமுறை என்னிடம் கூறினார். எதற்காக 7,000 என்கிற எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். மேலும் பலருக்கு எடுக்கலாம் என்கிற எண்ணத்துடன் யூட்யூப் சேனல் தொடங்கினேன்,” என்கிறார்.
யூட்யூப் சேனல்
2016-ம் ஆண்டு ஆன்லைன் கற்றல் பிரபலமாகத் தொடங்கிய காலகட்டம். கல்வி தொழில்நுட்பப் பிரிவில் செயல்படும் மிகப்பிரபல நிறுவனமான பைஜூஸ் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. ஆன்லைன் கற்றல் மாணவர்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்தாலும் யூட்யூப் மற்றும் இதர ஆன்லைன் தளங்களின் உள்ளடக்கங்கள் மாணவர்களை அதிகம் சென்றடையவில்லை.
ஆனால் அலக் தனித்துவமான உத்தியை பின்பற்றினார். கடினமாக உழைத்தார். சராசரியாகப் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து டாப்பர் ஆக்கினார்.
“இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது கடினம். மெட்ரோ நகரங்கள் போல் இல்லை. அதிலும் மாணவர்களுடன் ஒன்று கலந்து அவர்கள் நிலையில் இருந்து அவர்களைப் புரிந்துகொண்டு பயற்சியளிப்பவர்களைப் பார்ப்பது அரிது,” என்கிறார் அலக்.
யூட்யூப் வகுப்புகளைப் பொருத்தவரை ஆசிரியர் ஒரு சின்ன டீசரை மட்டுமே வெளியிடுவது வழக்கமாக இருந்தது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே மொத்த உரையையும் பார்க்க முடியும். ஆனால், இவர்களுக்கு மத்தியில் அலக் பாடங்களை முழுமையாக விளக்கி மொத்த வீடியோவையும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்தார்.
“தினமும் காலை எழுந்ததும் யூட்யூப் வியூஸ் செக் செய்வேன்,” என்கிறார்.
யூட்யூப் சேனலைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. கூடவே அலக்கின் பொறுப்பும் அதிகரித்தது.
“50,000 மாணவர்கள் கற்றுக்கொள்ளும்போது, தப்பித்தவறியும் சின்ன தப்பையும் செய்துவிடாமல் கவனமாக இருக்கவேண்டியிருந்தது,” என்கிறார்.
போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்துகொள்பவர்களும் பொறியியல் படிக்கும் மாண்வர்களும் கோட்டா பயிற்சி மையங்களுக்கு தேடிச் செல்வது வழக்கம். அலக் கோட்டா சென்றார். ஸ்டடி மெட்டீரியல்ஸ் வாங்கி வந்து சொந்தமாக பாடதிட்டத்தை டிசைன் செய்தார்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு PhysicsWallah கோட்டாவில் சொந்தமாக ஒரு இன்ஸ்டிட்யூட் திறக்க முதல் மாதத்திலேயே 10,000 மாணவர்கள் பதிவு செய்துகொண்டனர்.
மிகக்குறைந்த கட்டணமாக 4,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைச் சென்றடைய முடிகிறது. இது Physics Wallah வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது.
Physics Wallah முதல் பேட்ச் Lakshya அறிமுகப்படுத்தியதும் எந்தவித சிரமமும் இல்லாமல் 63,000 மாணவர்கள் உடனடியாக பதிவு செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
கல்வியா? காசா?
ஒருபுறம் பில்லியன் டாலர் மதிப்புடைய வணிகத்தை கட்டமைத்துவிட்டு மற்றொருபுறம் ஒரு சிறந்த ஆசிரியராக எப்படி அலக்கினால் இருக்கமுடிகிறது?
”பணம் சம்பாதிக்கவேண்டும் என்பது உங்கள் லட்சியமாக இருக்குமானால் உங்கள் கனவுக் கனவுக்கோட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்துவிடும். எப்படி அதிக மாணவர்களை சேர்க்கலாம் என்பதில் முழு கவனமும் இருக்கும்போது லெக்சரில் கவனம் இருக்காது. இது வீழ்ச்சிக்கு வழிவகுத்துவிடும்,” என்கிறார்.
இதை வெறும் வார்த்தைகளாக அவர் குறிப்பிடவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆன்லைன் ஸ்டார்ட் அப் ஒன்றில் கிடைத்த ஆசிரியர் வேலையை அலக் நிராகரித்துவிட்டார்.
”மாணவர்கள் எப்போதும் மாணவர்கள்தான். தொழில்நுட்பப் பிரிவிலோ சேல்ஸ் பிரிவிலோ வேலை செய்பவர்களின் இலக்கு ‘பயனர்கள்’ அல்லது ‘வாடிக்கையாளர்கள்’. என்னைப் பொருத்தவரை நான் கையாள்வது என்னிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் என்னைப் பின்பற்றவேண்டும் என்றும் விரும்பும் மாணவர்கள்,” என்கிறார்.
இந்தத் துறையில் செயல்படும் மற்றவர்கள் தங்கள் கோர்ஸ்களில் சேர 40,000 – 50,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில் அலக் அதில் பத்தில் ஒரு பங்குகூட வசூலிப்பதில்லை.
“எங்கள் மாணவர்கள், எங்களை கல்வித்துறையின் ’ஜியோ’ என்றே அழைப்பார்கள்,” என்கிறார் புன்னகையுடன்.
கல்வித் தொழில்நுட்ப தளங்கள் திரைப்பிரபலங்களைக் கொண்டு விளம்பரப்படுத்துவதை சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தார். அந்தப் பிரபலங்களுக்கும் கல்வித் துறைக்கும் துளியும் தொடர்பில்லாத நிலையில் அவர்களால் மாணவர்களை எப்படி ஊக்கப்படுத்த முடியும் எனக் கேள்வியும் எழுப்புகிறார்.
”அவர்கள் திரைத்துறையில் சாதித்தால், அந்தத் துறையில் வளர்ந்து வரத் துடிக்கும் நடிகர்களுக்கு வேண்டுமானால் அவர் முன்மாதிரியாக இருக்கலாம். மாணவர்களுக்கு அல்ல,” என்கிறார் அலக்.
முயற்சியின் முதுகெலும்பு
எத்தனை விளம்பரப்படுத்தினாலும் ஒரு பிராடக்ட் சிறந்ததாக இருந்தால் மட்டுமே அது பயனரைச் சென்றடையும் என்கிறார் அலக்.
“எங்கள் பிராடக்ட் சிறப்பாக இருப்பதற்குக் காரணம் எங்கள் இணை நிறுவனர் பிரதீக் மகேஸ்வரி. ஆப் அவர் உருவாக்கியதுதான். நிறுவனத்தை எப்படி கட்டமைக்கவேண்டும் என அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார். ஆட்டோமேஷன் சொல்லிக்கொடுத்தார். இப்படி Physics Wallah முதுகெலும்பாக இருப்பவர் அவர்,” என்கிறார் அலக்.
இந்நிறுவனம் PW சர்டிஃபிகேஷன் தொடர்பான வேலையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் நேரில் தொடர்புகொள்ள முடியாமல், வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் ஆசிரியர்கள் Physics Wallah உடன் இணைந்திருக்கலாம்.
“பிரதீக்கும் நானும் சேர்ந்து நாட்டில் லட்சக்கணக்கான அலக் பாண்டேக்களை உருவாக்க விரும்புகிறோம்,” என்கிறார்.
மேலும், Physics Wallah ’Sarathi’ என்கிற திட்டம் தொடர்பான பணியிலும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பாடம் தொடர்பான சந்தேகங்களை வீடியோ மூலம் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இந்த வசதி ஏற்கெனவே இந்தத் துறையில் இருக்கிறது என்றாலும் மற்றவர்களால் வசூலிக்கப்படும் தொகையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே Physics Wallah நிர்ணயித்துள்ளது.
அதேபோல், பிராந்திய மொழிகளையும் இந்நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. கொல்கத்தாவில் வங்காள மொழியில் ஒரு பயிற்சி மையம் தொடங்கியதை அடுத்து தெலுங்கு பேசும் மாணவர்களுக்காக ஹைதராபாத்தில் பயிற்சி மையம் திறக்க திட்டமிட்டிருக்கிறது. ஹைபிரிட் டீச்சிங் மாடலை பிராந்திய மொழிகளில் விரிவுவதும் குறுகியகால நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டிருக்கிறது.
நடிப்பு மீதான காதல்
”என்னுடைய முதல் காதலான நடிப்பின் பக்கம் என் கவனம் திசைதிரும்புவிடுமோ என்கிற பயம் இன்றளவும் என் குடும்பத்தினருக்கு உண்டு. ஆனால், எனக்கு ஆர்வமுள்ள ஆக்டிங், டீச்சிங் இரண்டையும் ஒன்று சேர்த்து என் பாதையை வகுத்துக்கொண்டேன்,” என்கிறார் அலக்.
“இந்த உலகில் நாம் இறைவன் ஆட்டிவைக்கும் படி ஆடுகிறோம் அவ்வளவுதான். நாம் எல்லோரும் அதன்படி நடித்துக்கொண்டிருக்கிறோம்,” என்கிறார்.
இந்த பெயரும் புகழும் திடீரென்று மறைந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் அவ்வப்போது தோன்றும் என்கிறார் அலக்.
”இன்று நான் ஒரு ஹீரோ, ஒருவேளை நாளை நான் வில்லனாக மாறிவிட்டால்? இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் என்னுடன் செல்ஃபி எடுக்க சூழ்ந்துகொள்ளும்போது சில நேரங்களில் சலிப்படைவதுண்டு. அப்போது, இதை இழந்துவிட்டால் என்னாகும்? இந்த அன்பு மொத்தமும் ஒருநாள் காணாமல் போனால் என்னாகும்? என்று நினைத்துக்கொள்வேன்,” என்கிறார் புன்னகையுடன்.
ஆங்கில கட்டுரையாளர்: பிரதீக்ஷா பாண்டே | தமிழில்: ஸ்ரீவித்யா