216 அடி உயரம்; 1500 டன் எடை: இந்தியாவின் 2வது பிரம்மாண்ட ராமானுஜர் சிலை சிறப்பம்சங்கள் என்ன?
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் ஐதாராபாத்தில் உள்ள முச்சிந்தலா பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 'சமத்துவச் சிலை' என பெயரிடப்பட்டுள்ள ராமனுஜர் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.
பிரம்மாண்ட சிலையை திறந்து வைத்த பாரத பிரதமர் மோடி, அதன் கீழ் நின்று சிறிய பூஜை ஒன்றை செய்தார். அதன் பின்னர், சிலை திறப்பிற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்துவைத்தார். அதற்கு முன்னதாக ஆசிரமத்தில் உள்ள திவ்ய தேச கோவில்களிலும் பிரதமர் தரிசனம் செய்தார்.
ராமானுஜரின் சிலை திறப்பிற்கு பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி,
“சமத்துவத்தின் உண்மையான பாதுகாவலர் ராமானுஜர், கோவிலுக்குள் பிற்படுத்தப்பட்டோர் நுழைவதை சாத்தியமாக்கியவர். ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு. அவருக்கு நெருங்கிய தொடர்புடைய ஆலயங்களில் திவ்ய பிரபந்தம் முக்கியத்துவம் பெருகிறது. ராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும்” எனத் தெரிவித்தார்.
சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலையின் சிறப்பம்சங்கள்:
45 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள பீடத்தின் மீது ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 800 டன் எடையுள்ள சிலையை சுற்றி, 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெருமாளின் 108 திவ்ய பிரதேசங்களை குறிக்கும் வகையில் 108 அடி உயர ராமானுஜர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மலர் மேல் ராமானுஜர் சிலை அமரவைக்கப்பட்டுள்ளது. இந்த தாமரை மலர் பீடத்தின் உயரம் 27 அடி, மொத்த மேடையின் உயரம் 54 அடி ஆகும். அதற்கு பத்ரபீடம் என பெயரிடப்பட்டுள்ளது.
- பத்ரபீடத்தில் 54 தாமரை இதழ்கள், 36 யானை சிற்பங்கள், 18 சக்கரங்கள், அருகில் 108 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- பத்ரபீடத்தில் இருந்து ராமானுஜர் சிலையின் உச்சி வரை கணக்கிட்டால் மொத்தம் 216 அடி உயரமுள்ள பஞ்சலோக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜரின் கையில் உள்ள மந்திரக்கோலின் உயரம் மட்டுமே 135 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமானுஜரின் பிரம்மாண்ட சிலை உள்ள ஒட்டுமொத்த முதல் தளமும் சுமார் 63 ஆயிரத்து 444 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. எனவே அதனை பறைசாற்றும் வகையில் பத்ரபீடத்திற்கு கீழே உள்ள தளத்தில் 120 கிலோ எடையுள்ள ராமானுஜரின் தங்க சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 3 லட்சம் சதுர அடி ஆகும். அன்றாட பூஜைகளுக்கு இந்த இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திவ்ய தேச கோயில்களின் மாதிரிகளைக் கொண்டு 108 சிறிய கோயில்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஹோய்சாலக் என்ற கட்டக்கலை பாணியில், 468 தூண்கள், கலைநயமிக்க சிற்பங்கள் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வளாகத்தில் மின்னணு வேத நூலகம், ஆராய்ச்சி மையம், ராமானுஜரின் படைப்புகளை விவரிக்கும் கல்விக்கூடம், கூட்டங்கள் மற்றும் கருந்தரங்கை நடத்துவதற்காக பிரம்மாண்ட அரங்கம், திரையரங்கம் ஆகியன 14,700 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.
ஐதராபாத் விமான நிலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பிரம்மாண்ட ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட சிலைக்கான மொத்த செலவு:
பிரம்மாண்ட ராமானுஜர் சிலை அமைப்பதற்காக 45 ஏக்கர் நிலத்தை ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஜூபல்லி ராமேஸ்வர ராவ் என்பவர் தானமாக வழங்கியுள்ளார்.
நன்கொடைகள் மூலம் 1,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக கீர் ஒருங்கிணைந்த வேதிக் அகாடமி அறிவித்துள்ளது. இந்த சிலைக்கு ரூ.1,000 கோடியிலிருந்து வரி தவிர, ரூ.130 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி, வெண்கலம், பித்தளை, துத்தநாகம் என 7 ஆயிரம் டன் எடையுள்ள ஐம்பொன் உலோகங்களை கலந்து பிரம்மாண்ட பஞ்சலோக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை நிறுவ சீனாவைச் சேர்ந்த எரோஜன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் பங்காற்றியுள்ளது.
உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் 2வது பிரம்மாண்ட சிலை என்ற பெருமையை ராமானுஜரின் ‘சமத்துவச் சிலை’ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.