இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு; ஏ.ஆர்.ரகுமான் முதல் மாதுரி தீக்ஷித் வரை பிரபலங்கள் பங்கேற்பு!
இந்தியர்கள் ஆவலுடன் காத்திருந்த சில்லறை விற்பனை கடையை ஆப்பிள் நிறுவனம் இன்று மும்பையில் திறந்துள்ளது. இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரை அதன் சிஇஓவான டிம் குக் திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்:
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மும்பையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (Bandra Kurla Complex) பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் (Jio World Drive Mall) அமைந்துள்ளது, இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள முதல் ஆப்பிள் ஸ்டோர் ஆகும்.
ஐபோன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியா ஒரு முக்கிய சந்தையாக உருவெடுத்துள்ளது. எனவே, இதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக நாடு முழுவதும் ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ’இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரை’ மும்பையில் இன்று, அதன் சிஇஓ டிம் குக் திறந்துவைத்துள்ளார்.
11 மணிக்கு கோலாகலமாக ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்ட பின் வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்டோருக்குள் டிம் குக்குடன் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
ஏப்ரல் 20ம் தேதி அன்று டெல்லியில் சாகேத் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் சாகேத் (Apple Saket) ஸ்டோரை டிம் குக் திறந்து வைக்க இருக்கிறார். இதன் மூலமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் ஸ்டோர் சிறப்பம்சங்கள் என்னென்ன?
- இந்தியாவிலேயே முதல் முறையாக திறக்கப்பட்டுள்ள இந்த ஆப்பிள் ஸ்டோரானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த சில்லறை விற்பனைக் கடை என்று கூறலாம். இதற்காக கார்ப்பன் உமிழ்வு இல்லாத 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய வகையில் Apple BKC ஸ்டோர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தினமும் Apple BKC ஸ்டோரில் "Today at Apple" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பிற படைப்பாற்றல் வல்லுநர்கள் தலைமையில் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளன.
- வாடிக்கையாளர்கள் இங்கு நேரடியாக வந்து பழைய ஆப்பிள் ஐபோன், ஐபேட் உள்ளிட்ட டிவைஸ்களை எக்ஸ்சேஞ்ச் (exchange) செய்து புதிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
- வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை ஆர்டர் கொடுத்துவிட்டு, வாடிக்கையாளர்கள் ரீடெய்ல் ஸ்டோரில் சென்று நேரடியாக பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- ஜீனியஸ் பார் (Genius Bar) என்ற வசதியும் உள்ளது. இந்த ஜீனியஸ் பார் வசதியில் வாடிக்கையாளர்களுக்கு வல்லுநர்களின் சேவையும், ஆதரவும் கிடைக்கும்.
- இந்தியாவின் பன்முகத்தன்மையை நன்கு உணர்ந்த ஆப்பிள் நிறுவனம், தனது சில்லறை விற்பனை கடைகளில் 20 மொழிகளை பேசக்கூடிய வகையில், வெவ்வேறு விதமான 100 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. மேலும், ஆப்பிள் ஸ்டோர் மூலமாக இந்தியா முழுவதும் 2500 பேருக்கு வேலை வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 22,000 சதுர அடியில் கட்டப்பட்டிள்ள இந்த சில்லறை விற்பனைக் கடைக்கு ஆப்பிள் நிறுவனம் மாதம் ரூ.42 லட்சம் வாடகை செலுத்த உள்ளது. மேலும், ஸ்டோர் வருவாயில் 2% தொகையையும் செலுத்த வேண்டும். 3 ஆண்டுகளுக்குப் பின் 2.5% வருவாய் பங்கை செலுத்த வேண்டும். இதற்காக 11 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- ஆப்பிள் ஸ்டோர் வெளியீட்டின் போது ஆப்பிள் மியூசிக் பயன்பாட்டில் நிறுவனம் ஒரு பிரத்யேக பிளேலிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. iPhone, iPod மற்றும் Mac வாடிக்கையாளர்களுக்காக புதிய வால்பேப்பர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பிரபலங்களுடன் டிம் குக் சந்திப்பு:
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைப்பதற்காக ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு டிம் குக் இந்தியா வந்துள்ளார். முதன் முறையாக 2016ம் ஆண்டு டிம் குக் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஸ்டோர் திறப்பிற்காக மும்பை வந்த டிம் குக் பாலிவுட் பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்துள்ளார். நேற்று பாலிவுட்டின் முன்னணி நடிகையான மாதுரி தீட்சித் உடன் வடபாவ் சாப்பிட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
மேலும், ஆப்பிள் ஸ்டோர் திறப்பு விழாவிற்கு முன்னதாக பிரபலங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஷில்பா ஷெட்டி, ஏஆர் ரஹ்மான், மெளனி ராய், மாதுரி தீக்ஷித்-நேனே, ரவீனா டாண்டன், குணீத் மோங்கா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரைப்பிரபலங்களுடன் ஆப்பிள் சிஇஓ எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியையும் டிம் குக் இன்று சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ-போனில் அசத்தல் போட்டோஸ்; தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் சிஇஓ!