ஐ-போனில் அசத்தல் போட்டோஸ்; தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் சிஇஓ!
தமிழக பள்ளி மாணவர்களால் ஐபோன் 13 மினி மூலம் எடுக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை ஆப்பிள் சிஇஓ டிம் குக் பாராட்டியுள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களால் ஐ-போன் 13 மினி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை ஆப்பிள் சிஇஓ டிம் குக் பாராட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் அருட்காட்சியகத்தில் ‘போட்டோ பைனாலே’ என்ற அறைக்கட்டளை சார்பில் ‘கதைகளின் நிலம்’ (A Land of Stories) என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெற்ற உள்ள இந்த கண்காட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 40 பள்ளி மாணவர்கள் க்ளிக் செய்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை போட்டோ பைனாலே அமைப்பு புகைப்படம் எடுப்பதை ஒரு பயிற்சியாகவும் கலை வடிவமாகவும் ஊக்குவிக்கிறது.
கதைகளின் பூமி கண்காட்சி குறித்து தனது இணையதளத்தில்,
தமிழகம் முடிவற்ற கதைகளின் பூமி. பலதரப்பட்ட மக்கள், உணவு, கட்டிடக்கலை, இயற்கைக்காட்சிகள் மற்றும் கலாச்சாரச் சுவடுகளுடன், தமிழ்நாட்டை படங்கள் மூலம் ஆராய்வது அதன் செழுமையை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த வழியாகும். மாநிலத்தின் பாரம்பரியம், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவை, அதன் நீளம் மற்றும் அகலத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அதைத்தான் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த இளம் கலைஞர்கள் ஆவணப்படுத்த அழைக்கப்பட்டனர்.
இந்த கண்காட்சியானது தமிழகத்தையும் அதன் கதைகளையும் அவர்களின் லென்ஸ்கள் மூலம் சித்தரிக்கும் அவர்களின் புகைப்படங்களின் தொகுப்பாகும். மாணவர்களின் பில்டர் இல்லாத லென்ஸ் பார்வையும், தமிழ்நாட்டின் முடிவற்ற கதைகளும் ஒன்றாகச் சேர்ந்து, பார்வையாளரிடம் அழுத்தமான தாக்கத்தை உருவாக்கும் என நம்புகிறோம்.
”இந்த கதைகள் வண்ணங்கள், கட்டப்பட்ட சூழல், இடைவெளிகள் மற்றும் இந்த நிலத்தின் மக்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன. புகைப்படங்கள் மூலம் ஆராய்வதன் மூலம், எங்கள் இளம் கலைஞர்கள் நாங்கள் வளர்ந்த கதைகளை வெளிப்படுத்துகிறார்கள்,” எனக்குறிப்பிட்டுள்ளது.
துருப்பிடித்த கதவுகள், மரக்கதவுகள், விரிசல் விழுந்த சுவர்கள், சென்னையின் குடியிருப்பு பகுதிகள், சைக்கிள், ஜன்னல்கள், ரயில் கைப்பிடிகள், இயற்கை காட்சிகள், ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, காகம், அன்றாடம் நாம் வாழ்வில் சந்திக்கும் இயல்பான மனிதர்களின் மகிழ்ச்சியான முகங்கள் என விதவிதமாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஐ-போன் மினி 13 மூலம் பில்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தாமல் பள்ளி மாணவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆப்பிள் நிறுவன சிஇஓ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐ-போன் 13 மினியில் தங்கள் சமூகங்களின் அதிர்வை படம்பிடித்துள்ளனர். இப்போது அவர்களின் படைப்புகள் சென்னை போட்டோ பைனாலே சார்பில் வரலாற்று சிறப்புமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன,” எனப் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச விருது வென்ற புகைப்பட கலைஞருக்கு முதல்வர் பாராட்டு:
மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரனுக்கு ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ சர்வதேச விருது கிடைத்துள்ளது. இது புகைப்படக் கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கு சமமானது ஆகும்.
‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ என்ற அறக்கட்டளை சார்பில் சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருதில், இந்த ஆண்டு 130 நாடுகளைச் சேர்ந்த 4,606 பேர் பங்கேற்றனர். அதில், 23 நாடுகளைச் சேர்ந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செந்தில் குமரனுக்கு வாழ்த்து கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திரு.செந்தில்குமரன் அவர்கள் ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ அமைப்பின் #WPPh2022 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்! மனித - வன விலங்கு மோதலை வெளிக்கொண்டு வரும் இவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை!” எனப் பதிவிட்டுள்ளார்.