36 கிமீ தூரத்தை 18 நிமிடத்தில் கடந்து ரத்த மாதிரியை சேகரித்து வந்த ட்ரோன்...
இந்தியாவிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் குக்கிராமத்தில் இருந்து மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை ட்ரோன் மூலம் கொண்டு வரும் சோதனை வெற்றியடைந்து மருத்துவத்துறையில் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் வெற்றிகரமாக நடந்த ட்ரோன் சோதனை… 18 நிமிடத்தில் பறந்து வந்த ரத்த மாதிரி!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. உலக அளவில் ஆளில்லா குட்டி விமானங்களை (ட்ரோன்) வைத்து புகைப்படங்கள் எடுத்தல், போக்குவரத்து நெரிசலை கண்டறிதல் மற்றும் தட்ப வெப்ப சூழல்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறையிலும் ட்ரோனின் சேவையை பெறும் விதமாக இந்தியாவிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் ட்ரோன் மூலம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜுன் 5ம் தேதி உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்ட நிர்வாகம் சிடிஸ்பேஸ் ரோபாடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரோன் சோதனை ஓட்டத்தை நிகழ்த்தியுள்ளது. சிடிஸ்பேஸ் நிறுவனம் ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர்களான நிகிர் உபாத்யாய் மற்றும் கிருஷ்ணராஜ் இணைந்து நடத்தி வரும் ஸ்டார்ட் அப் ஆகும்.
நந்கான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தெஹ்ரி மருத்துவமனை இடையேயான 36 கிலோமீட்டர் தூரத்தை 18 நிமிடத்தில் கடந்து ரத்த மாதிரியை சேகரித்து வந்துள்ளது ட்ரோன். சாலை வழியே இந்த ரத்த மாதிரிகளை கொண்டு வருவதற்கு 2 மணி நேரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரோன் சோதனை ஓட்டமானது 555 டெலிமெடிசின் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டதாக பௌராரி மாவட்ட மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் எஸ்எஸ். பங்க்டி தெரிவித்துள்ளார். 555 டெலிமெடிசின் திட்டம் தெஹ்ரியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வகுக்கப்பட்டது. மாவட்ட மாஜிஸ்திரேட் முடிவின்படியே மருத்துவச் சேவைகள் துறையில் ட்ரோன்களை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாடுகள் சிலவற்றில் ட்ரோன்; மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுவதை அறிந்து இந்தியாவிலும் இந்த முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதன்முறையாக தெஹ்ரி மாவட்டத்தில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தி பார்த்ததாக கூறுகிறார் மாவட்ட மாஜிஸ்திரேட் சோனிகா.
“மருத்துவச் சேவைகள் துறையில் ட்ரோன்களை பயன்படுத்துவதற்காக கடந்த 3 ஆண்டுகளாகவே முயற்சிகளை செய்து வருகிறேன். இதன் அடுத்த கட்டமாக சிடிஸ்பேஸ் ரோபாடிக்ஸ் ஸ்டார்ட் அப் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சோதனை ஓட்டத்தை நிகழ்த்தி பார்த்தோம். இது ஒரு பைலட் திட்டம் என்பதால் ஸ்டார்ட் அப் நிறுவனம் எங்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை, எங்கள் தரப்பில் இருந்து போதுமான நிர்வாகத் தரப்பு ஆதரவினை தெரிவித்தோம். சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது, ட்ரோனில் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருக்கிறேன். அந்த மாற்றங்களும் செய்யப்பட்ட பின்னர் ஜூலை மாதத்தில் ட்ரோன் எங்களிடம் ஒப்படைக்கப்படும்,” என்று சோனிகா கூறியுள்ளார்.
மலை கிராமங்களில் 100 சதவிகித மருத்துவச் சேவைகளை அளிப்பதில் சிரமம் இருக்கிறது. மேலும்,
”குக்கிராமங்களில் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து மாவட்ட மருத்துவமனை கொண்டு வருவதற்குள் அவை கெட்டுப் போய் விடுகன்றன. ட்ரோன் மூலம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு மற்றும் மருத்து மாத்திரைகளைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம், ஜூலை மாதம் முதல் மருத்துவ சேவைகளுக்காக ட்ரோன் பயன்படுத்தப்படும் என்றும் மாஜிஸ்திரேட் சோனிகா கூறியுள்ளார்.
ட்ரோன்களின் வடிவமைப்பு பற்றி தெரிவித்த சிடிஸ்பேஸ் ரோபாடிக்ஸ் நிறுவனர் உபாத்யாய் இந்த ட்ரோன்கள் 50 கிலோ மீட்டர் தூரம் வரை 500 கிராம் எடையை சுமந்து செல்லும். ரத்த மாதிரிகளை சேகரித்து வரும் போது அவற்றின் தன்மை மாறாமல் இருக்க குளிரூட்டி பவுச் ஒன்று அதில் வைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தின் போது 350 கிராம் எடை கொண்ட ரத்த மாதிரிகளை ட்ரோன் சுமந்து வந்தது. இவ்வகை ட்ரோன்களை வடிவமைக்க ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்றும் உபாத்யாய் கூறியுள்ளார்.
மலைப்பகுதிகளில் மக்களிடம் மருத்துவப் பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் நகரத்தில் இருக்கும் பரிசோதனை மையங்களை வந்தடைய வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. குறைவான நேரத்திலேயே ட்ரோன்கள் மூலம் மாதிரிகளை கொண்டு வர முடியும் என்றால் இதை விட வேறு நல்ல விஷயம் ஒன்றும் இல்லை. இதே போன்று மலைப்பகுதிகளில் விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள் சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் உயிரிழப்பதையும் ட்ரோன் போக்குவரத்து மூலம் தடுக்கலாம் என்பதால் மருத்துவத்துறைக்கு இது ஒரு வரப்பிரசாதமே என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
தகவல் உதவி : டைம்ஸ் ஆஃப் இந்தியா | தமிழில் கஜலெட்சுமி