இந்தியாவின் முதல் குளிர்த் தெளிப்பு ஸ்மார்ட் ஆய்வகம் அறிமுகம்!
ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் எலக்ட்ரிக்கல் (GE) உடன் இணைந்து செயல்படுவதன் ஒரு பகுதியாக ஏரோஸ்பேஸ் தரநிலைகளுக்கு ஏற்றவாறான மேம்பட்ட பூச்சுகளை உருவாக்க உள்ளது.
ஏப்ரல் 5-ம் தேதி ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் எலக்ட்ரிக்கல் (GE) உடன் இணைந்து இந்தியாவின் முதல் குளிர்த் தெளிப்பு ஸ்மார்ட் (‘Cold Spray’ Surface Modification and Additive Research Technologies) ஆய்வகத்தை நிறுவியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே உயரழுத்தக் குளிர்த் தெளிப்பு முறை (High-Pressure Cold Spray) வசதியைக் கொண்டுள்ள முதல் கல்வி நிறுவனமாக உருவாகியுள்ளது ஐஐடி மெட்ராஸ்.
இந்த உயரழுத்தக் குளிர்த் தெளிப்பு சாதனம் ஜப்பானின் Plasma Giken நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், GE அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, GE இந்தியா தொழில்நுட்ப மையத்தின் சிஇஓ மற்றும் GE தெற்காசியா முதன்மை தொழில்நுட்ப அதிகாரி அலோக் நந்தா ஆகியோர் இந்த ஆய்வகத்தைத் திறந்து வைத்தனர்.
இந்த ஆய்வகம் UYAY திட்டத்தின்கீழ் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் உலோகவியல் பொறியியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் எம் காமராஜ், பேராசிரியர் ஜி சுந்தரராஜன், டாக்டர் ஸ்ரீனிவாசா ஆர். பக்ஷி ஆகியோர் ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளர்களாக செயல்பட உள்ளனர்.
குளிர் தெளிப்பு தொழில்நுட்பம் குறித்து பேராசிரியர் காமராஜ் விவரிக்கையில்,
பரவலாக பயன்படுத்தப்படும் வெப்ப தெளிப்பு செயல்முறைகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபட்டதாகும். இதில் பொடிகளின் உருகுதல் தன்மை மற்றும் ஆக்சிஜனேற்றம் இல்லை. எனவே உயர்ரகப் பூச்சை ஏற்படுத்த முடியும். மேலும் படிதல் விகிதம் மிக அதிகம் என்பதால் பொடிகள் வீணாவது குறையும். அத்துடன் சேர்பொருள் உற்பத்தியிலும் பொருளின் பாகங்கள் பழுது பார்க்கும் முறையிலும் பயன்படுத்தலாம்.
முதன்மை இணை ஆய்வாளர் மற்றும் இணை பேராசிரியரான டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் பக்ஷி விவரிக்கையில்,
உயரழுத்தக் குளிர்த் தெளிப்பு முறை மேற்பரப்பு பாதுகாப்பு பூச்சுகள் படரச்செய்வதிலும் இயந்திரப் பொருட்களின் பாகங்கள் பழுது பார்ப்பதிலும் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பாதுகாப்புப் பிரிவில் பாகங்களை பழுதுபார்க்க இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது.
இந்த கல்வி நிறுவனம் GE உடன் இணைந்து செயல்படுவதன் ஒரு பகுதியாக ஏரோஸ்பேஸ் தரநிலைகளுக்கு ஏற்றவாறான மேம்பட்ட பூச்சுகளை உருவாக்க உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஐஐடி மெட்ராஸ் மற்றும் GE இணைந்து பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிமுகமான இந்த ஆய்வகமும் ’மேக் இன் இந்தியா’, ’திறன் இந்தியா’ போன்ற திட்டங்களின் நோக்கங்களுடன் ஒன்றியதாகும்.
இந்த முயற்சி நாட்டிற்கு எவ்வாறு பலனளிக்கும் என்பது குறித்து அலோக் விவரிக்கும்போது,
இந்தியாவின் சிவிலியன் விமானத்திற்கான பராமரிப்பு, பழுது மற்றும் ஒட்டுமொத்த செப்பனிடுதல் (MRO) சந்தையானது தற்போதைய மதிப்பான 4,800 கோடி ரூபாயிலிருந்து 7 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் 90 சதவீத எம்.ஆர்.ஓ தேவைகள் வெளிநாடுகளிலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த திட்டம் நாட்டின் எம்.ஆர்.ஓ சுற்றுச்சூழலை வலுப்படுத்தும். நாட்டில் மேம்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உருவாக்க உதவும். சேர்பொருள் தொழில்நுட்பத்தில் நம் பொறியாளர்களின் திறன் மேம்படும்.
குளிர் தெளிப்பு தொழில்நுட்பம் மேம்பட்ட உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இது விமான என்ஜின் பயன்பாடுகள் சார்ந்த செயல்முறைகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்படும்.
இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்ற வெப்ப தெளிப்பு மற்றும் பற்றவைக்கும் செயல்முறைகளைக் காட்டிலும் குறைவான வெப்பநிலையில் பயன்படுத்தப்படும். அதாவது அத்தகைய பழுது பார்க்கும் நுட்பங்களுடன் தொடர்புடைய பாதிப்புகள் தவிர்க்கப்படும். இதனால் நீடிப்புத்தன்மை அதிகரிக்கும்.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில் : ஸ்ரீவித்யா