Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் முதல் ‘Sologamy’ திருமணம்: தன்னைத் தானே மணந்து கொள்ளும் இளம்பெண்!

இந்தியாவிலேயே முதன்முறையாக சோலோகமி திருமணத்தை செய்து கொள்ள இருக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண். திருமணம் முடிந்த கையோடு கோவாவிற்கு அவர் தேனிலவும் செல்ல திட்டமிட்டுள்ளார் அவர்.

இந்தியாவின் முதல் ‘Sologamy’ திருமணம்: தன்னைத் தானே மணந்து கொள்ளும் இளம்பெண்!

Saturday June 04, 2022 , 2 min Read

மற்றவர்களுக்காக அர்ப்பணிப்பது மட்டும் வாழ்க்கையல்ல, கிடைத்த ஒரு வாழ்க்கையில் நம்மையும் நாம் நேசிக்க வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனாலேயே 'மீ டைம்..' 'செல்ஃப் லவ்' போன்ற வார்த்தைகள் அதிகம் சமூகவலைதளக்களில் உபயோகிக்கப்படுகிறது.

தற்போது அதன் அடுத்தகட்டமாக தன் மீது கொண்ட அதீத அன்பால் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

இந்தியாவின் முதல் சோலோகமி (Sologamy) திருமணமாக இது கருதப்படுகிறது. இந்தத் திருமணம்தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்காகி உள்ளது.

bindu

'சோலோகமி' என்றால் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது. ஏற்கனவே இதுபோன்ற திருமணங்கள் மேலை நாடுகளில் புதியதல்ல. ஆனால், இந்தியாவில் இதுதான் முதல்முறை என்பதால், ஆச்சர்யமடைந்துள்ளனர் நெட்டிசன்கள். இந்தத் திருமணம் பற்றிய சாதக, பாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் 24 வயது ஷமா பிந்து. எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்ற இவருக்கு, திருமண வாழ்க்கையில் விருப்பமில்லையாம். ஆனால், மணப்பெண்ணாக மாற வேண்டும், மணமான பெண்கள் போல் நெற்றியில் திலகமிட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளதாம்.

எனவே, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்து கொள்வதற்குப் பதில் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவரது திருமணம் இம்மாதம் (ஜூன்) 11ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் பிந்து. அதில்,

“எனக்கு திருமண வாழ்வில் விருப்பம் இல்லை. இருந்தாலும் மணப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனவே, என்னை நானே திருமணம் செய்ய முடிவு செய்து விட்டேன். சோலோகமி பற்றி இணையத்தில் தேடினேன். நம் நாட்டில் இதுவரை அப்படி ஒரு திருமணம் நடந்ததாகத் தெரியவில்லை. இந்தத் திருமணம் மூலம் சுய காதலுக்கு முன்னுதாரணமாக நான்தான் இருக்கப் போகிறேன் என நினைக்கிறேன்," என்கிறார்.
sologamy bindu

சுய திருமணம் என்பது உங்களுக்கு நீங்கள் இருப்பதையும், நிபந்தனையின்றி உங்கள் மீது அளவற்ற அன்பு செலுத்துவதையும் உறுதி செய்யும் கமிட்மென்ட் ஆகும். பொதுவாக நாம் யாரைக் காதலிக்கிறோமோ அவர்களை மணந்து கொள்ளலாம்.

“நான் என்னைக் காதலிக்கிறேன். அதனால்தான் இந்தத் திருமணம். பெண் பிரதானம் என்பதையும் இதன் வழியாக உணர்த்த விரும்புகிறேன்," எனத் தனது வித்தியாசமான திருமணம் குறித்துக் கூறியிருக்கிறார் பிந்து.

முதலில் தங்களது மகளின் இந்த வினோதமான ஆசை குறித்து அவரது பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். பின்னர், தங்களது மகளின் திருமணத்திற்கு அவர்கள் முழு சம்மதம் அளித்து விட்டனர்.

மாப்பிள்ளை மட்டும்தான் கிடையாது. மற்றபடி இந்தத் திருமணத்தை விமர்சையாக நடத்த திட்டமிட்டுள்ளார் பிந்து. ஜூன் 9 ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு சொந்தபந்தங்கள் முன்னிலையில், சடங்கு, சம்பிரதாயங்களோடு அனைவரின் ஆசிர்வாதங்களைப் பெற்று கோத்ரியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது.

திருமண நாளன்று தாலி கட்டுதல், நெற்றியில் திலகமிடுதல் உள்ளிட்ட அனைத்து சடங்களையும் தனக்குத் தானே பிந்து செய்து கொள்ளப்போகிறார்.

“இதில் என்ன சிறப்பு அம்சம் எனில் இதை ஒரு பெண் செய்கிறாள் என்பதுதான். தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது என்பது பலருக்கும் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். ஆனால் இதில் நான் சொல்ல வருவது இதை ஒரு பெண் முன்னெடுக்கிறாள் என்பதுதான்.”
bindu

சுய திருமணத்தை சிலர் அர்த்தம் இல்லாததாக கருதலாம். எனக்கு என் விருப்பம் முக்கியம். எனது பெற்றோரும், எனது திருமணத்துக்கு திறந்த மனதுடன் ஆசி வழங்கியுள்ளனர், என்கிறார் பிந்து.

திருமணம் மட்டுமல்ல.. திருமணம் முடிந்த கையோடு இரண்டு வாரம் தேனிலவிற்காக கோவா செல்லவும் திட்டமிட்டுள்ளார் பிந்து.

இந்த வித்தியாசமான திருமணம் பற்றிய செய்தி சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. மணப்பெண்ணான பிந்துவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.