Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவர் ஆன திரௌபதி முர்மு!

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி இன் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவர் ஆன திரௌபதி முர்மு!

Friday July 22, 2022 , 3 min Read

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி இன் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய குடியரசுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 29ம் தேதி நடைபெற்றது. ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார்.

draupadi murmu

இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்மு 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த சின்ஹா 3 லட்சத்து 80 ஆயிரத்து 177 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற சாதனையையும் திரெளபதி முர்மு நிகழ்த்தி காட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒவ்வொரு எம்.பி.க்கும் 700 வாக்குகள் இருந்த நிலையில், முர்முவின் மொத்த வாக்கு மதிப்பு 5,23,600 ஆகும், இது பதிவான எம்.பி.க்களின் மொத்த செல்லுபடியாகும் வாக்கு எண்ணிக்கையில் 72.19 சதவீதமாகும்.

யார் இந்த திரெளபதி முர்மு?

திரௌபதி முர்மு ஜூன் 20, 1958 அன்று ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமத்தில் சந்தலி பழங்குடி குடும்பத்தில் பிரஞ்சி நாராயண் துடு என்பவருக்கு பிறந்தார். அவரது தந்தையும் தாத்தாவும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் கிராமத் தலைவர்களாக இருந்தவர்கள்.

திரௌபதி முர்மு வங்கிப் பணியாளரான ஷியாம் சரண் முர்முவை மணந்தார், இவர் 2014ம் ஆண்டு காலமானார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். தற்போது ஒரு இதிஷ்ரி முர்மு என்ற ஒரு மகள் மட்டுமே உள்ளார்.

draupadi murmu

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ராய்ராங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும், ஒடிசா அரசின் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை:

திரெளபதி முர்மு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மற்றும் சமூக சேவையில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.1997ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் (BJP) திரெளபதி முர்மு இணைந்தார். அதனையடுத்து ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில், அவர் ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்தின் தலைவரானார் மற்றும் பிஜேபி பட்டியல் பழங்குடியினர் மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

draupadi murmu

ஒடிசாவில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் போது, ​​திரௌபதி முர்மு அமைச்சராக பதவி வகித்தார். மார்ச் 6, 2000 முதல் ஆகஸ்ட் 6, 2000 வரை வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும், ஆகஸ்ட் 6, 2002 முதல் மே 16, 2004 வரை மீன்பிடி மற்றும் கால்நடை வள அபிவிருத்தி துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

திரௌபதி முர்மு, 2007 இல், ஒடிசா சட்டமன்றத்தின் சிறந்த எம்எல்ஏவுக்கான நீலகந்தா விருதைப் பெற்றுள்ளார்.

64 வயதான திரெளதி முர்மு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்குப் பிறகு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது முன்னாள் பாஜக உறுப்பினர் ஆவார்.

ஜார்கண்ட் ஆளுநரான திரெளபதி முர்மு:

திரௌபதி முர்மு ஜார்க்கண்டின் ஆளுநராக மே 18, 2015 அன்று பதவியேற்றார், ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். ஒடிசாவிலிருந்து இந்திய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் பழங்குடித் தலைவர் ஆவார்.

திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் ஆளுநராக 2017ல் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம், 1908 மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம், 1949 ஆகியவற்றில் திருத்தங்களைக் கோரி ஜார்க்கண்ட் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

இந்த மசோதா பழங்குடியினர் தங்கள் நிலத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான உரிமைகளை வழங்க முயன்றது, ஆனால் நிலத்தின் உரிமை பழங்குடியினரிடம் இருந்து மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.

திரௌபதி முர்மு: NDA வின் ஜனாதிபதி வேட்பாளர் 2022:

ஜூன் 2022 இல், திரௌபதி முர்மு 2022 தேர்தலுக்கான இந்திய ஜனாதிபதிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாஜகவால் பரிந்துரைக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அவர் தனது வேட்புமனுவுக்கு பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றார்.

draupadi murmu

திரௌபதி முர்முவுக்கு ஒடிசாவின் பிஜேடி, ஜார்கண்டின் ஜேஎம்எம் கட்சி, மகாராஷ்டிராவின் சிவசேனா, உத்தரபிரதேசத்தின் பிஎஸ்பி, கர்நாடகாவின் ஜேடிஎஸ் மற்றும் பல கட்சிகள் ஆதரவு அளித்தன.

திரௌபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஜூலை 25ம் தேதி திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.