1,32,000 சதுர அடியில் பள்ளி, 25ஆயிரம் புக்ஸ் லைப்ரரி, 18,110 சதுர அடி மைதானம்...
இது இன்டெர்நேஷனல் பள்ளி அல்ல, இந்தியாவின் சிறந்த 2வது அரசுப்பள்ளி. இது எங்கிருக்கிறது தெரியுமா?
அரசுப் பள்ளிகள் என்றாலே பெற்றோர்கள் மத்தியில் சிறு மனத்தயக்கம் ஏற்படும் சூழலே நிலவி வருகிறது. போதிய உட்கட்டமைப்பு வசதி, கழிப்பறை தூய்மையின்மை, ஆங்கிலவழி கல்வியின்மை என அரசுப்பள்ளிகள் குறித்து நெடுங்கால குற்றசாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அரசுப் பள்ளிகளைப் பற்றி நாம் நினைக்கும் முறையையே மாற்றும் நோக்கில் பள்ளிகளை மாற்றி வருகிறது கேரள அரசு. அதற்கான பிரம்மாண்ட உதாரணமாய் இருக்கிறது கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள நடக்காவு பகுதியில் இயங்கிவரும் அரசு தொழிற்கல்வி பெண்கள் மேல்நிலை பள்ளி.
ஏழு ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கிய கட்டிடங்கள், 2,300 மாணவிகளுக்கு ஒரு டஜனுக்கு குறைவான கழிப்பறை வசதியிலிருந்த பள்ளி இன்று, EducationWorld’s India வெளியிட்ட 2019-20ம் ஆண்டிற்கான சிறந்த பத்து இந்திய அரசுப்பள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
கோழிக்கோடின் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., பிரதீப் குமார் முன்னெடுத்த ‘ப்ரிஸம்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு முன்னெப்பொதும் இல்லாத மாற்றத்தை பெற்ற 120 ஆண்டு பழமையான இப்பள்ளி, ‘எஜுகேஷன் வேர்ல்ட் இந்தியாவின் சிறந்த அரசுப்பள்ளிகள்’ பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளாக இடம்பிடிக்க தவறியதில்லை.
1,32,000 சதுர அடி நிலப்பரப்பளவுக் கொண்ட பள்ளியில் உள்ள வசதிகள்:
சுமார் 25,000 புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகம், தடகள, கால்பந்து மற்றும் ஹாக்கிக்கென 18,110 சதுர அடியில் டர்ஃப் (செயற்கை புல்தரைவிரிப்பு) பல்நோக்கு விளையாட்டு மைதானம், மரத்தாலான தரைத்தளம் அமைக்கப்பட்ட 13,000சதுர அடியில் கூடைப்பந்து மற்றும் பூப்பந்து மைதானம், மாணவர்களுக்கான லாக்கர் அறைகள், தோட்டம், ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய உணவு உண்ணும் அறை, எக்ஸட்ரா... எக்ஸட்ரா...
நடக்காவு பள்ளியின் உலகத்தரத்தை காண்பதற்காகவே 250க்கும் மேற்பட்ட பள்ளிகள் இப்பள்ளி நோக்கி பயணித்தன. அதில் 65-க்கும் மேற்பட்ட பள்ளிகள் நடக்காவு பள்ளியினை அவர்களது பள்ளிகளிலும் பிரதிபலிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டன. அப்பள்ளியின் வெற்றியைக் கண்ட கேரள அரசு, மாநிலத்தில் உள்ள 1000 பள்ளிகளை நடக்காவு மாதிரியை கொண்டு மேம்படுத்த முனைந்தது.
இதற்கு அச்சாணியாய் இருந்து செயல்பட்டவர் கோழிகோட்டின் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான பிரதீப் குமார்.
‘பல தலையீடுகள் மூலம் பிராந்திய பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துதல்’ (ப்ரிஸம் திட்டம்) எனும் திட்டத்தினை 2013ம் ஆண்டில் நிறுவிய பிரதீப் குமார், அதைபற்றிய ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தார். அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாதிரித் திட்டமாக ப்ரிஸ்ம்மை மாநில கல்வித் துறை அங்கீகரித்தது.
அத்துடன் பிரதீப்பின் திட்டத்தினை செயல்படுத்த பல்வேறு நிறுவனங்களும், கல்வி மையங்களும் ஒன்று சேர்ந்தன. அதில், ஃபைசல் மற்றும் ஷபானா அறக்கட்டளை நிதியுதவி அளித்து திட்டத்தை செயல்படுத்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்- கோழிக்கோடு, மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-கோழிகோடு போன்ற மதிப்புமிக்க நிறுவனங்கள் இந்த திட்டத்தை பல்வேறு மட்டங்களில் செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்டன.
“2006ம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராகியதிலிருந்து, எனது தொகுதியில் உள்ள பெற்றோர்கள், நகரத்தின் முன்னணி தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்காக எனது பரிந்துரையை நாடிவந்தனர். தகுதி அடிப்படையில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து நியமிக்கப்படும் அரசுப் பள்ளிகளில் சேர பெற்றோர்கள் தயங்குகின்றனர். இது பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது பற்றி சிந்திக்க என்னைக் கட்டாயப்படுத்தியது.
“கல்லூரி படிப்பு என்றால் ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி.கள் போன்ற அரசுக்கல்வி நிறுவனங்கள் சிறந்தவை என்றால், ஏன் ஒரு அரசுப் பள்ளி சிறந்து விளங்க முடியாது?” என்று இந்தியன் எக்ஸ்பிரசிடம் பகிர்ந்துள்ளார் பிரதீப் குமார்.
உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வளர்ச்சி நிதியின் ஒரு பகுதியை பயன்படுத்தத் திட்டமிட்ட பிரதீப், கூடுதல் செலவீனங்களுக்காக துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஃபைசலின் ‘ஃபைசல் மற்றும் ஷபானா அறக்கட்டளை-யை நாடியுள்ளார். பள்ளியின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்த ரூ15 கோடியை நன்கொடையாக வழங்கியது இந்தியா மற்றும் ஐக்கிய எமிரேட்சில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவிவரும் இவர்களது அறக்கட்டளை.
“நடக்காவு பள்ளித் திட்டம் ஒரு தற்செயல் நிகழ்வு. நான் சில நாட்கள் கேரளாவில் தங்கி இருந்தேன். அப்போது, பிராந்தியத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் நிலை குறித்து அறிந்தேன். இந்தியாவில் 1.2 மில்லியன் அரசுப் பள்ளிகள் உள்ளன என்றும், அவைகள் அனைத்தும் மோசமான உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன, அதனால் அவை மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன என்றும் கூறினார்கள்.
பின், துபாய்க்கு திரும்பியதும், கோழிகோட்டின் எம்.எல்.ஏ., பிரதீப் குமாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் நடக்காவு பள்ளியின் நிலைமையையும், அதனை மேம்படுத்துவதற்கு அவர் வைத்துள்ள திட்டங்களையும் கூறினார். அடுத்த சில வாரங்களிலே, அதை புதுப்பிக்க முடிவு செய்தோம்,” என்று பகிர்ந்தார் ஃபைசல்.
வகுப்பறைகளில் புரோஜெக்டர் பொருத்தப்பட்டிருப்பதால் டிஜிட்டல் முறையில்கற்றல் வேடிக்கையாகவும், சுவாராஸ்யம் நிறைந்ததாகவும் மாறியது. தவிர, இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியலுக்கென நவீன ஆய்வகங்கள், தூய்மையான கழிப்பறைகள் பள்ளியில் 92 இடங்களில் அமைக்கபெற்றன. உள்கட்டமைப்பைத் தவிர, நடக்காவு பள்ளியில் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதே திட்டத்தின் மற்றொரு முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு கோழிகோடு ஐ.ஐ.எம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
“பள்ளி நாட்களில் மாணவர்கள் இடையூறு வழங்கக்கூடாது என்ற முடிவில் இருந்தோம். 2014ம் ஆண்டு கோடை விடுமுறையில் பணியைத் துவக்கினோம். 95 நாட்களில் வேலையை முடித்தோம். பழைய கட்டிட சுவர்கள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டி எழுப்பப்பட்டன. 2015ம் ஆண்டில் புதிய கல்வியாண்டிற்காக பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது.” என்று கல்ஃப் நியூசிடம் கூறினார் ஃபைசல்.
நடக்காவு பள்ளியின் வெற்றி, மாற்றத்திற்கான சிறுவிதையாகி, கேரள அரசே கோழிக்கோட்டின் காராபரம்பா அரசுப் பள்ளியில் ‘பள்ளிக்குத் தேவையான அனைத்து மின்சாரங்களும் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் பேனல்கள், 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அப்புறப்படுத்த எரியூட்டி’ என அடுத்தக்கட்ட வசதிகளுடன் அரசுப் பள்ளிகளின் தரநிலையை உயர்த்தியது.
அரசு உட்பட பல்வேறுடைய முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாய், கடந்த இரண்டு ஆண்டுகளில் கேரளாவில் சுமார் 2.35 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்.
தமிழகத்திலோ ஒற்றை இலக்கத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தி கொண்டிருக்கிறது அரசு. கேரளாவை பின்பற்றி அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் அங்கும் மாணவர்கள் நிச்சயம் குவிவார்கள்.