‘பெண்களுக்குத் தங்கள் குடும்பத்துடன் அவர்களின் கனவும் சம அளவு முக்கியம்’ - மனிதவளப் பயிற்சியாளர் பிருந்தா!

ஒருவரின் வெற்றிக்கான திறவுகோல் அவர் தனது முழுத்திறனையும் உணர்ந்து செயல்படுவதே என்று தன்னுடைய பயிற்சியின் மூலம் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார் மனித வள பயிற்சியாளர் பிருந்தா.

‘பெண்களுக்குத் தங்கள் குடும்பத்துடன் அவர்களின் கனவும் சம அளவு முக்கியம்’  - மனிதவளப் பயிற்சியாளர் பிருந்தா!

Monday January 30, 2023,

8 min Read

ஒருவரின் கனவுகளும் ஆசைகளுமே அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிச்சம் போட்டு காட்டும் சக்தி. அதனை மதித்து, பாதுகாத்து, இலக்கை அடைவதிலேயே மனிதப் பிறப்பின் உண்மையான அர்த்தம் இருக்கிறது என்று ஆழமாக நம்புகிறவர் Human Resource development trainer பிருந்தா அசோகன்.


பிடித்த பாடமாக இருந்தால் அடித்து தூள் செய்வதும், பிடிக்காத புரியாத வகுப்புகளாக இருந்தால் கடைசி பெஞ்ச் மாணவி என்று சுமார் மாணவியாக இருந்தவர் இப்போது மற்றவர்களுக்குள் இருக்கும் திறமைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து புது உயரத்திற்கு கொண்டு செல்லும் ஸ்கைராக்கெட்டராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

பிருந்தா

பிருந்தா, தலைமைச் செயல் அதிகாரி, தி மேஜிக் கீ

சுமார் மாணவி டு சூப்பர் பயிற்சியாளர்

சுமார் மாணவி டூ சூப்பர் பயிற்சியாளராக பிருந்தா மாறியது எப்படி என்பதன் பின்னணியை விவரித்த அவர், “எங்களுடைய பூர்வீகம் டெல்டா மாவட்டமா இருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். படிப்பில் படு சுமார் கடைசி பெஞ்ச் மாணவி என்றும் சொல்லலாம். கணிதத்திற்கும் எனக்கும் எட்டா பொருத்தம், எனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று எனக்கே தெரியாது.


படிப்பை தவிர்த்து கூடுதலாக தனித்திறன் பயிற்சி வகுப்புகள் என்றெல்லாம் பெற்றோர் எந்த வாய்ப்புகளையும் ஏற்படுத்தவில்லை. அப்படி அவர்கள் கொடுத்த வாய்ப்புகளையும் நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

“வகுப்பறையில் உட்கார்ந்து கரும்பலகையில் எழுதிப்போடுவதை படித்து மார்க் வாங்கும் என்கிற அந்த கல்விமுறை எனக்கு ஒத்துவரவில்லை, ஆனால் எல்லோருடனும் நன்கு பழகி அவர்களை புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது,” என்று தனது தொடக்க கால வாழ்க்கை பற்றி தெரிவித்தார்.

பிடிக்காத என்ஜினியரிங்

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு Fashion designing, psychology, bio technology போன்ற வித்தியாசமான படிப்பை படிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என்னுடைய பெற்றோருக்கு அதில் இஷ்டம் இல்லாததால் பொறியியல் படிப்பில் தான் சேர்த்து விட்டார்கள்.


எனக்கு கணிதத்தில் தான் கஷ்டமே அப்படி இருக்கும் போது என்ஜினியரிங் சேர்ந்து மிகவும் கஷ்டப்பட்டு அரியர், பார்டர் பாஸ் என்று எப்படியோ படித்து முடித்தேன். கணிதத்தை தவிர்த்து மற்ற செயல்முறை விளக்கப் பாடங்களில் அதிக மதிப்பெண்களை பெற்றேன். என்னுடைய பெற்றோர் பழமைவாதிகள் என்பதால் படிப்பு முடித்த உடனே 21 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டனர்.


வீட்டில் எப்போதுமே தம்பிக்கும் எனக்கும் இடையே ஒருவித பாகுபாடு இருந்தது. பல நேரங்களில் மகன் தான் எல்லாமே, திருமணம் முடிந்த கையோடு அவர்களின் கடமை முடிந்தது என்றெல்லாம் பெற்றோர் சொல்லிக் கொண்டே இருந்ததும் கூட ஒரு விதத்தில் என்னை நானே தனி மனிதியாக உருவாக்கிக் கொள்ள ஒரு காரணமானது, என்கிறார் எதிர்மறைகளையும் நேர்மறைகளாக மாற்றிய இந்த பக்குவப்பெண்.

பிருந்தா1

கலைந்த கருவால் உடைந்த பிருந்தா

21 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருந்தாலும் எனக்குப் பிடித்த மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்து வைத்தனர். என்னுடைய கணவர் மருத்துவர் என்பதால் எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருந்தது. ஏதோ ஒன்று செய்ய வேண்டும் ஆனால் என்ன செய்வது என்று தெரியாததால் பல முயற்சிகளைச் செய்தேன்.


ஐடி துறையில் மென்பொருள் டெஸ்டிங் பயிற்சியாளராகச் சேர்ந்தேன், ஜப்பானிய மொழியை கற்றுக்கொண்டு அதில் ஏதாவது செய்யலாம் என்று அந்த முயற்சியை செய்தேன். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை, கரை சேர்வதற்காக வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் தாய்மை அடைந்தேன்.


அதனால் எல்லாவற்றிற்கும் ஒரு பாஸ் பட்டன் போட துரதிஷ்டவசமாக அந்தக் குழந்தை 6 மாதத்தில் கருவிலேயே கலைந்தது. இதன் பின்னர், மீண்டும் பணிக்குச் சென்றால் எல்லோரும் இந்தச் சம்பவம் பற்றியே கேட்பார்கள் என்பதால் புதிதாக ஏதாவது செய்யலாம் என்று மீண்டும் படிக்கச் சென்றேன், என்கிறார்.

ஒரு நிகழ்வு நம்முடைய வாழ்வை ஸ்தம்பிக்கச் செய்தால் அதிலேயே உழன்று கொண்டிருக்காமல் அதில் இருந்து வெளிவர வேறு திசையில் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிற அவரின் புரிதல் நமக்கும் நல்ல வழிகாட்டியே.

தேடலில் செய்த புதுப்புது முயற்சிகள்

MBA தான் எனக்கு ஒத்து வரும் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் அதற்கு சமமான ஒரு படிப்பாக ME constructional Engineering Management என்ற ஒரு படிப்பை பற்றி தெரிய வந்தது. இது மிகவும் தனித்துவமான படிப்பாக இருக்கிறது என்பதோடு சிவில் என்ஜினியரிங்கிற்கும் தொடர்புடையதாக இருப்பதால் அதைப் படிக்கலாம் என்று முடிவு செய்தேன். முதுநிலை படிக்கும் போது தான் எனக்குள் என்னென்ன திறமைகள் இருக்கிறது என்பது எனக்கே தெரிய வந்தது.


பள்ளியில் படிக்கும் காலத்தில் மாணவர்களிடையே நடக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றில் பங்கேற்றிருப்பதால் எனக்கு ஓரளவு பேசவும் எழுதவும் வரும், என்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள தெரியும் என்ற நிலையில் தான் என்னைப் பற்றிய புரிதல் இருந்தது. முதுநிலை படிப்பை நான் மிகவும் பிடித்துப் போய் படித்தேன் செயல்முறையுடன் கூடிய கல்வி முறை என்பதால் நான் MEல் 95 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றேன்.

பிருந்தா2

திறமைக்கு கிடைத்த பேராசிரியர் வாய்ப்பு

நான் கருத்தரங்குகளில் பேசும் திறனைப் பார்த்து பேராசிரியர்கள் இளநிலை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க அழைத்தனர். நான் பாடங்களை விவரிக்கும் முறை மாணவர்களுக்கு மிகுந்த தெளிவைத் தந்தது. இந்த வாய்ப்புகளால் முதுநிலை படிப்பை முடித்த உடனேயே தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகும் வாய்ப்பு தேடி வந்தது.


நானே சுமார் ஸ்டூடன்ட் கல்லூரி காலத்தில் சுட்டித்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன், என்னால் மாணவர்களை சமாளிக்க முடியாது என்று பேராசிரியர் வாய்ப்பை தவிர்த்த போதும் நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து என்னை சம்மதிக்க வைத்தது. என்னுடைய துறையின் தலைவர் எனக்கு மிகவும் உற்சாகம் தந்தார், என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த அவர் மாணவர்களின் தனித்திறன் பயிற்சி சார்ந்த எந்த வாய்ப்புகள் வந்தாலும் முதலில் என்னுடைய பெயரை பரிந்துரைத்தார்.

கார்ப்பரேட் சூழலுக்கு ஏற்ற பயிற்சி

நான் பணியாற்றிய கல்லூரியில் தென்தமிழகத்தை சேர்ந்த மாணவர்களே அதிகம் என்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசுதல் மற்றும் தன்னம்பிக்கை தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிக்கான குழு அமைக்கப்பட்டதில் நான் முதன்மை இடம் பெற்றேன். மாணவர்களுக்கு பயிற்றுவிக்கத் தேவையான பாடத்திட்டங்களை திட்டமிட்டு அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் செயல்முறையில் அவற்றை செய்யவைத்தேன்.


நோட்டு, புத்தகம், நோட்ஸ்,பேனா என்று இல்லாமல் செயல்வழியில் பாடங்கள் இருந்ததால் மாணவர்கள் விரும்பிப் படித்தனர். மேடையேறி பேசத் தயங்கி அழுது மயக்கம் போட்டவர்களும் கூட கொஞ்சம் கொஞ்சுமாக நம்பிக்கையோடு பேசத் தொடங்கினர். மாணவர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயல்பட வேண்டும், அனைவரின் முன்னேற்றமும் சேர்ந்ததே வெற்றி என்று மாணவர்கள் ஒன்றுபட்ட செயல்படும் பழக்கத்தைக் கொண்டு வந்தேன். இதனால் பல மாணவர்கள் படிப்பில் பிரகாசிக்கத் தொடங்கினர்.

“கற்றல் எனக்கு முன்னேற்றத்தைத் தரும் என்கிற உத்வேகம் மாணவர்கள் மத்தியில் இருந்ததை என்னால் காண முடிந்தது. அதற்கு நானும் ஒரு வகையில் உதவினேன் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.”

பகுதிநேரப் பயிற்சியாளர்

மூன்றரை ஆண்டுகள் ஒரு மனநிறைவோடு பேராசிரியராக கல்லூரிக் காலம் சென்று கொண்டிருந்த போது மீண்டும் தாய்மை அடைந்ததால் வேறு வழியில்லாமல் ஓராண்டு விடுப்பு எடுத்தேன். எனினும், ஓராண்டு கழித்து என்னுடைய மகன் பிறந்த பின்னர் மீண்டும் பணியில் சேர முடியாத சூழ்நிலையால் முழுவதும் பணியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.


மகனுக்கு ஒரு வயது ஆன பின்னர் மீண்டும் என்னுடைய பணியைத் தொடரலாம் என்று நினைத்து பகுதிநேரமாக soft skill trainer வேலை செய்ய முடிவெடுத்தேன். கல்லூரியில் பேராசிரியராக இருந்த போது எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் புதிதாக முயற்சித்து பார்ப்பதற்கான சுதந்திரம் கிடைத்தது.


அதனால் ஒரு பிரச்னை என்றால் அதற்கு என்ன தீர்வாக இருக்கலாம் என்பதை குறிப்புகளில் இருந்து கொடுக்காமல் அந்தத் துறையில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து நடைமுறைக்கு ஏற்ப தீர்வைத் தருவதே என்னுடைய பயிற்சியின் சிறப்பு என்பதால். பகுதி நேரமாக செயல்படத் தொடங்கிய நேரத்திலும் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாணவர்களுக்கு மட்டுமல்ல பெண் தொழில்முனைவர்கள், மகளிர் குழுக்களுக்கும் பயிற்சிகளை அளித்திருக்கிறேன்.

பிருந்தா3

பயணமும் புதுநம்பிக்கையும்

என்னுடைய மகனுக்கு 2 வயதாக இருக்கும் போது திடீரென ஒரு தனித்த பயணம் செய்ய முடிவெடுத்தேன். அதற்கு முன்னர் கூட உறவினர்கள், நண்பர்கள், கணவருடன் பயணம் செய்திருந்தாலும் அந்த முறை என்னுடைய மகனை விட்டுவிட்டு நான் மட்டும் தனியே பயணம் செய்ய தீர்மானித்தேன். கணவர் நல்ல வேலையில் இருக்கிறார், வீட்டில் இருந்தே குழந்தையை பார்த்துக் கொண்டால் போதும் என்று குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்த நிலையில், அதற்கு சற்றும் தயாராகாத நான் இதற்கு என்ன தான் தீர்வு என்பதை என்னுடைய தனிமைப் பயணத்தில் தேடிப் போனேன்.

“என்னுடைய வேலைக்கு நான் குழந்தையை விட்டுவிட்டுத் தான் செல்ல வேண்டும் என்பதால் அவனை வளர்க்கும் போதே யாருடைய அரவணைப்பும் இன்றி சூழலுக்கு ஏற்ப அவன் யாரையும் சார்ந்திருக்காமல் வாழும் வகையிலேயே அவனை வளர்த்தேன். இதில் எந்த குற்ற உணர்வும் எனக்கு இல்லை குழந்தைகளை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வளர்த்தால் அவர்கள் எல்லா சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்பதே யதார்த்தம்,” என்கிறார் பிருந்தா.

என்னுடைய பிறந்தநாள் நெருக்கத்தில் வந்த ஒரு கனவை நிறைவேற்றுவதற்காக நான் தனியாக இமயமலை செல்ல முடிவெடுத்து என் கணவரிடம் தெரிவித்தேன். அவர் சம்மதித்த போதும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர், எனினும் யாராலும் என்னுடைய பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. த


னியாகச் சென்று வந்துவிட முடியுமா என்ற தயக்கம் எனக்கே இருந்தாலும் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து டெல்லியை நோக்கி என்னுடைய பயணத்தைத் தொடங்கினேன். மனிதர்களிடம் பழகுவது எனக்கு மிகவும் பிடிக்கும், தெரியாத மனிதர்களையும் நம்பலாம் என்கிற நம்பிக்கையை அந்தப் பயண அனுபவம் எனக்குத் தந்தது. உடல்ரீதியில் அது ஒரு சவாலான பயணம் சுமார் 14 ஆயிரம் அடி உயரம் வரை ஏறிச் செல்ல வேண்டும், இரவு நேரங்களில் மைனஸ் டிகிரி வரை வானிலை இருந்தது.

பிருந்தா4

சிகர ஏற்றம் முடிந்து இரண்டு நாட்கள் மணாலியில் தங்கி இருந்தேன். அங்கு வெகு சில இந்தியர்கள் இருந்தாலும் வெளிநாட்டவர் பலர் இருந்தனர். அந்தப் பிறந்தநாளிற்கு வெளிநாட்டினர் அவர்களது மொழிகளில் கூறிய வாழ்த்துகளோடு வானில் கொட்டிக் கிடந்த கோடிக்கணக்கான நட்சத்திரங்களை பனிஇரவில் கண்டு ரசித்தது புதிய அனுபவத்தைத் தந்தது.


சென்னை திரும்பிய பின்னர் சிகர ஏற்றம் குறித்து சமூக ஊடகங்களில் எழுதியவை மக்களின் கவனத்தைப் பெறவே ஊடகங்கள் பல என்னுடைய தைரியம், தன்நம்பிக்கையை பாராட்டி பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் பேச்சை வழங்குவதற்காக அழைக்கத் தொடங்கின. என்னுடைய பேச்சாற்றலில் வியந்து போன கார்ப்பரேட் நிறுவனங்கள் என்னுடைய profile பார்த்து அவர்களின் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சியளிக்க அழைப்பு விடுத்தன.


பிடித்த வேலையைச் செய்ய வேண்டும், அந்த வேலைக்கு எப்படி தயாராவது, இருக்கும் வேலையில் உங்களை நீங்களே எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்று ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினேன். என்னுடைய அணுகுமுறையை பார்த்து ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று என்னுடன் சேர்ந்து பணியாற்ற ஒப்பு கொண்டது.


ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று கூறி இருந்தார்கள். நானும் ஒப்புகொண்டே ஆனால் 2 ஆண்டுகள் இப்படியே சென்றநிலையில் திடீரென அந்த நிறுவனம் எனக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று வேலையை விட்டு எடுத்துவிட்டது. நம்பிக்கையை உடைத்த அந்த தருணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதால் மீண்டும் காட்டை நோக்கி ஒரு தனி பயணத்தைத் தொடங்கினேன்.

சொந்த நிறுவனம்

அதிசயங்கள், அனுபவங்களை அள்ளித் தரும் இயற்கையை ஒட்டிய பயணம் அந்த முறையும் ஒரு புத்துணர்ச்சியை தந்து அனுப்பி வைத்தது. அந்த பயணத்தில் இருந்து திரும்பிய பிறகு புதிதாக பல client-கள் வரத் தொடங்கினர். மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட்டு கொண்டிருந்த போது தான் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நானே தொடங்கலாம் என்று 2020ம் ஆண்டில் முடிவு செய்தேன்.


யோசிக்காமல் திடீரென தோன்றிய ஒரு பெயர் the magik key அதையே என்னுடைய நிறுவனத்தின் பெயராக வைத்துவிட்டேன்.

”ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித் திறமை இருக்கிறது என்பதை ஆழமாக நம்புபவள் நான். physical, mental, emotional மூன்றும் கலந்து நம்மால் செய்யக்கூடிய விஷயங்கள் உடைக்கக் கூடிய தடைகளே மனிதத் திறமை என்று நான் கருதுகிறேன். அதற்கு ஏற்ப தங்களை வழிநடத்திச் செல்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாக இருந்ததால் என்னுடைய நிறுவனம் தி மேஜிக் கீ மூலம் மனிதத் திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சிகளையே முழுநேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறேன்.”

வருமானம் என்ன?

ஒரு நபர் தனது தரத்தை தானே நிர்ணயித்து அதற்கேற்ப செயல்பட்டு இந்த சமூகத்தில் அவரின் சேவை மற்றும் பணி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்யலாம். அப்படி சிறப்பாக செயல்படும் போது அது நிறுவனத்திற்கு மட்டும் வளர்ச்சியைத் தரவில்லை, தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தியைத் தரும்.

“என்னுடைய இந்த பயிற்சிக்காக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் எனக்கு பிடித்து விட்டால் குறைவான கட்டணத்தில் கூட ஸ்டார்ட் நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் கொடுக்கும் பயிற்சியின் தரத்தில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.”
பிருந்தா5

குடும்பத்தினருடன் பிருந்தா

பெண்களுக்கு எது தேவை?

என்னுடைய பயிற்சியில் பங்கேற்க வருபவர்கள் கருத்தரங்கம் முடிந்து செல்லும் போது தன்னாலும் முடியும் என்ற புது வெளிச்சத்துடன் செல்ல வேண்டும். நாட்களை நகர்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் பணியாற்றாமல் அடுத்தது என்ன என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு எதிர்காலத்தை தேடிச் செல்பவர்களாக மாற்ற முடிந்தது.


வெற்றி தோல்விகளை வைத்து வாழ்வை தீர்மானிக்கக் கூடாது, அதே சமயம் தோல்வியைக் கண்டு அஞ்சி முயற்சிக்காமலேயே இருக்கவும் கூடாது என்பது பிருந்தாவின் ஆணித்தரமான வாதம்.

”பெண்களுக்கு தங்களுடைய குடும்பம், கணவர், குழந்தைகளைப் போல அவர்களின் கனவும் சம அளவு முக்கியம். வீட்டின் சின்ன சுமைகளை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் அகன்று விரிந்த உலகில் உங்களால் ஜெயிக்க முடியாது. எல்லாவிதங்களிலும் சுதந்திரமான வாழ்வை பெண்கள் வாழ்ந்தால் அந்தப் பெண் மட்டுமல்ல, அவரின் வீடு, சமூகம், உலகம் என அனைத்துமே மகிழ்ச்சியடையும். ஒவ்வொரு கனவிற்கும், ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு சக்தி இருக்கிறது. கனவுகளைப் பின்தொடரும் நேர்மையான மற்றும் உறுதியான முயற்சிகள் சரியான நபரை வளரவும், ஆதரிக்கவும் ஏற்ற மாயாஜாலத்தை கொண்டு வந்து சேர்க்கும்,” என்கிறார்.

வேலைப்பளூவில் சிக்கிக் கொண்டு தவிர்ப்பவர்களுக்கு உற்சாகம் தந்து ஊக்குவிக்கும் மேஜிக் பெண் பிருந்தா.

Daily Capsule
CleverTap unfazed by funding winter
Read the full story