வாரநாட்களில் ஐடி ஊழியர்; வார இறுதியில் சமூக ஆர்வலர்: தன் ஊரை தூய்மைப் படுத்தும் தேஜஸ்வி!
ஹைதராபாத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான ஓங்கோல் பகுதியில் தூய்மைப்பணிகள் தொடர்பான 80 ப்ராஜெக்டுகளை நிறைவு செய்துள்ளார்.
அனைத்து இந்திய நகரங்களிலும் சுத்தம் மற்றும் சுகாதாரம் முக்கியப் பிரச்சனையாக இருந்து வருகிறது. நகரங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வரும் நிலையில் நகரங்களிலும் கிராமங்களிலும் காணப்படும் மனசாட்சியுள்ள குடிமக்கள் பலரும் தங்களால் இயன்ற வகையில் பங்களித்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு மென்பொருள் பொறியாளரான 23 வயது தேஜஸ்வி தனது வருவாயில் இருந்து 70 சதவீதத்தைத் தூய்மைப் பணிகளுக்காக ஒதுக்குகிறார். இந்த சமூக ஆர்வலர் தனது வழக்கமான பணியுடன் ’பூமி அறக்கட்டளை’ என்கிற அரசு சாரா நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இந்த அரசு சாரா நிறுவனம் ஓங்கோல் மற்றும் ஹைதராபாத் நகரங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஐடி ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், நடுத்தர வயதினர் உள்ளிட்ட 700 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவுடன் தேஜஸ்வி 80-க்கும் அதிகமான ப்ராஜெக்டுகளை நிறைவு செய்துள்ளார். பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் இந்த ப்ராஜெக்டுகளில் அடங்கும்.
அத்துடன் குப்பைகள் மற்றும் வகைப்படுத்தப்படாத கழிவுகள் சட்ட விரோதமாக கொட்டப்பட்டிருந்த பகுதிகளையும் சீரமைத்துள்ளார். ஓங்கோலில் 700 இடங்களையும் ஹைதராபாத்தில் 70 இடங்களையும் இவ்வாறு சீரமைத்துள்ளார்.
தேஜஸ்வி நான்காண்டுகளுக்கு முன்பு தனிநபராக சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இவரது முயற்சி எளிதாக இருக்கவில்லை. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
“நான் ஓங்கோலைச் சேர்ந்தவள். இங்கு சுகாதார நிலை மோசமாக இருக்கும். 2015-ம் ஆண்டு ஸ்வச் பாரத் அபியான் திட்டம் தொடங்கப்பட்டபோது நான் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட தீர்மானித்தேன். பத்து தன்னார்வலர்களுடன் என்னுடைய நிறுவனத்தைத் தொடங்கினேன்,” என்றார்.
சுவர்களிலும் மரங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. இந்த சுவரொட்டிகள் அகற்றப்படும்போது அந்த இடத்தில் திட்டுக்கள் மிஞ்சுகிறது. இவை பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பதால் இவற்றை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
அதன் பிறகு இவரது முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்கத் தொடங்கினார்கள். ஹைதராபாத்தில் பணி கிடைத்தபோதும் தேஜஸ்வியின் ஆர்வம் குறையவில்லை.
மாநிலத்தில் தலைநகரில் பணிபுரிந்தார். இது ஓங்கோலில் இருந்து 300 கி.மீ தொலைவில் இருந்தது. ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் தனது சொந்த பகுதிக்கு பயணம் செய்து தூய்மைப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார்.
தேஜஸ்வி தனக்குக் கிடைத்த ஆதரவு குறித்து ’டெக்கான் க்ரோனிக்கில்’ உடனான உரையாடலில் கூறும்போது,
“எங்களுக்கு நிதியுதவு எதுவும் கிடைப்பதில்லை. தேவையான நிதியை என் அப்பா வழங்கினார். எனினும் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். முக்கிய சாலைகளை பூந்தொட்டிகளால் அலங்கரிக்க அந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொண்டோம். புத்தாண்டு தினத்தன்று யாரோ அவற்றை சேதப்படுத்திவிட்டனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த பதிலும் இல்லை,” என்றார்.
பலர் இவரது முயற்சியை விமர்சித்தபோதும் தேஜஸ்வி தனது தூய்மைப்பணிகளைத் தொடர்ந்தார். மக்கள் குப்பை போடுவதை நிறுத்தும்வரை பிரச்சனையுள்ள பகுதிகளை தொடர்ந்து சுத்தப்படுத்தி வந்தார்.
விரைவில் நிலைமை மாறியது. தூய்மைப்படுத்துவதில் இவர் காட்டும் அக்கறையை அருகில் இருந்த நகரின் நகராட்சி அலுவலகங்கள் கவனித்தன. தங்களது நகரங்களிலும் இத்தகைய முயற்சியை மேற்கொள்ள பூமி அறக்கட்டளையை அழைத்தன. தற்போது இந்நிறுவனம் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து வருகிறது. தேஜஸ்வி விவரிக்கும்போது,
“எங்களுடன் எம்.எல்.ஏ-வும் இணைந்துகொண்டார். நாங்கள் எந்தவித நிதியும் கேட்பதில்லை. நாங்களே அனைத்தையும் மேற்கொள்கிறோம். அதிகாரிகள் எங்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே போதும். அந்த வகையில் எங்களுக்கு உதவி கிடைத்தது. இதுதவிர வேறு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.
அரசாங்கம் தாமாக முன்வந்து தேஜஸ்வியின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளது. உதாரணத்திற்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேஜஸ்விக்கு ஸ்வச் ஆந்திரா விருதினை வழங்கினார். 2017-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச அரசாங்கத்தால் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக ஓங்கோல் அறிவிக்கப்பட்டது.
உங்களது நாட்டில் நீங்கள் மாற்றத்தைக் காண விரும்பினால், முதலில் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அடுத்து உங்கள் நகரை மாற்றவேண்டும், அதற்கடுத்து உங்கள் மாநிலத்தை மாற்றவேண்டும். இதன் மூலம் நாடு முழுவதும் மாற்றத்தை காணமுடியும்,” என தெரிவித்ததாக தி லாஜிக்கல் இண்டியன் குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA