‘என்ன மாற்றத்தை பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த மாற்றமாகவே மாறிவிடுங்கள்’ – ஐபிஎஸ் அதிகாரி ஐஸ்வர்யா!
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு என பல்வேறு குற்றச்செயல்களை எதிர்த்துப் போராடுகிறார் ஐபிஎஸ் அதிகாரி ஐஸ்வர்யா தோங்ரே.
ஐஸ்வர்யா தோங்ரே திருச்சூர் ரூரல் காவல்துறை கண்காணிப்பாளர். எப்போதும் மிகவும் பரபரப்பாக, சுறுசுறுப்பாக சுழன்று பணியாற்றுகிறார். சாப்பிடும் வேலையைக்கூட அவசர அவசரமாக முடித்துவிட்டு பணியைத் தொடர்கிறார்.
யுவர்ஸ்டோரி நேர்காணலுக்காக ஐஸ்வர்யாவை சந்திக்க சென்றிருந்தபோது, உதவியாளர் சங்கீதாவுடன் அடுத்தடுத்து முடிக்கவேண்டிய பணிகளைப் பற்றி மலையாளத்தில் சரளமாக பேசிக்கொண்டிருந்தார்.
“மக்களுடன் நெருக்கமாக இணைந்திருக்கவேண்டுமானால் அந்தந்த உள்ளூர் மொழியில் பேசவும் புரிந்துகொள்ளவும் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டும். மொழிபெயர்ப்பு வாயிலாக புரிந்துகொள்ளும்போது அது முழுமையாக இருக்காது,” என்கிறார்.
ஐஸ்வர்யா முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார். அகில இந்திய அளவில் 196-வது ரேங்க் எடுத்தார். கேரளா கேடரில் இந்திய காவல் பணியில் (IPS) சேர்ந்தார்.
ஐஸ்வர்யா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். செயிண்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரம், அரசியல் அறிவியல் ஆகிய இரு பிரிவுகளிலும் பட்டப்படிப்பு முடித்தார். ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொண்டார். 22 வயதிலேயே பணியில் சேர்ந்துவிட்டார்.
பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு முக்கிய பொறுப்புகளை சிறப்பாக செய்து முடித்தார். இவரது மேற்பார்வையில் திருவனந்தபுரத்தில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் இதயம் வெறும் 35 நிமிடங்களில் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பெருந்தொற்று சமயத்தில் நிவாரணப் பணிகளை மேற்பாட்டையிட்டார்.
இன்று 27 வயதாகும் ஐஸ்வர்யா, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சைபர் குற்றச்செயல்களைக் கையாள்வதற்கும் தலைமை வகித்திருக்கிறார். இதுதவிர சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவற்றிற்கும் பொறுப்பேற்றிருக்கிறார்.
“ஒரு மாற்றத்தை நாம் கண்ணெதிரே பார்க்க நினைத்தோமானால் அத்தகைய மாற்றமாகவே நாம் மாறிவிடவேண்டும். இதை சாத்தியப்படுத்தும் வகையில் நான் பணியாற்ற விரும்பினேன். அடிப்படை விஷயங்களுடன் இணக்கமாக செயல்படும்போதும், அன்றாட நிர்வாகம், வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்டறிவது என முழுமையாக செயல்படமுடியும்,” என்கிறார்.
எதிர்நீச்சல்
2019-ம் ஆண்டில் முதல் இண்டிபெண்டண்ட் போஸ்டிங் கிடைத்தது. திருவனந்தபுரத்தில் சங்குமுகம் பகுதியில் காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களிலேயே கொரோனா பெருந்தொற்று பரவியது. திடீரென்று ஆழமான கடலில் தள்ளிவிட்டது போல் இருந்ததாகவும், அதேசமயம், இதே நிலையில் இருந்த பலருக்கும் உதவி முடிந்தது ஆறுதலாக இருந்ததாகவும் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
விமான நிலையம் இவரது கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்தது. எனவே வெவ்வேறு நாடுகளிலிருந்து மக்களை இந்தியா அழைத்து வந்த வந்தே பாரத் விமான ஏற்பாடுகளை இரவு பகலாக மேற்பார்வையிட்டார்.
“முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளித்து அழைத்து வந்தோம். அவர்களுடன் தொடர்பில் இருந்து நிலைமையைப் புரியவைத்தோம். இதில் பலர் ஒருங்கிணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது,” என்கிறார்.
அதுவரை பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு முன்னெப்போதும் கண்டிராத கொரோனா பெருந்தொற்று சூழலை சிறப்பாக சமாளித்தார்.
”இந்த அசாதாரண சூழலை எப்படியோ சமாளித்தேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆத்திரப்பட்டனர். அவர்களுடன் நான் ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்த அனுபவம் இருந்ததால் அவர்களுடன் இந்தியில் பேசி அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டேன்,” என்கிறார் ஐஸ்வர்யா.
கடமை தவறாதவர்
சங்குமுகம் பகுதியில் போஸ்டிங் முடிவடைந்த தருவாயில், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு இதயத்தை விமானத்தில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதுபற்றி அவர் விவரிக்கும்போது,
”நான் அப்போது காவல் உதவி ஆணையராக இருந்தேன். ஏர்போர்ட் என் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. மருத்துவமனையிலிருந்து ஏர்போர்ட் வரை ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றவேண்டியிருந்தது. கேரள காவல்துறை ஹெலிகாப்டரில் 35 நிமிடங்களில் இதயத்தை கொண்டு சேர்த்தோம். கடமையை செய்யவேண்டும் என்பதில் முழு ஈடுபாட்டு இருப்பதால், யாருடைய இதயம் என்பனபோன்ற மற்ற விவரங்கள் எதையும் நான் தெரிந்துகொள்ளவில்லை,” என்கிறார்.
ஐஸ்வர்யா திருவனந்தபுரத்தில் ஒன்றரை ஆண்டுகள் இருந்த பிறகு கொச்சி காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். சட்ட ஒழுங்கு, கிரைம், டிராஃபிக் போன்ற பிரிவுகளில் நகர்புறங்கள் மட்டுமல்லாமல் கடலோரப்பகுதிகளில் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் சைபர் செக்யூரிட்டி பிரிவிலும் பெண்கள் தொடர்பான மனுக்களுக்கும் இவர் பொறுப்பேற்றார்.
“மிகச்சிறப்பான குழு விசாரணைக்கு சனு மோகன் வழக்கை உதாரணமாக சொல்லலாம். இதில் ஜூனியர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. அனுபவமிக்கவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது எத்தனை சிறந்தது என்பது புரிந்தது,” என்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐஸ்வர்யா எஸ்பி ரூரல் பொறுப்புகளுடன் திருச்சூருக்கு மாற்றலாகியிருக்கிறார். போதைப் பொருட்கள் கடத்தலை எதிர்த்து மிகச்சிறப்பாக போராடினார். ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருட்களை இவரது குழு கைப்பற்றியிருக்கிறது.
”போதைப் பொருட்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் முக்கியமானது. பிரச்சனையில் இருக்கும் நபர் ஒருவர் எங்களை எளிதாக அணுகும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். ஒட்டுமொத்த கேரள காவல்துறையும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது. Nirbhaya போன்ற SOS பட்டன்களை தொடங்கியிருக்கிறோம். காவல்துறை சேவைகள் அனைத்தையும் Pol app என்கிற ஒரே மொபைல் செயலியில் ஒருங்கிணைத்திருக்கிறோம்,” என்கிறார்.
பாலினம் சார்ந்த புரிதல்
பாலினம் சார்ந்த புரிதலை மக்களிடையே ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்கிறார் ஐஸ்வர்யா.
”எத்தனையோ காலமாக இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன. இப்போது திருநங்கைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே பாலினம் சார்ந்த விஷயங்களை திறந்த மனதுடன் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும்போது, பெண் போலீஸ் அதிகாரி அதில் சம்பந்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இது தவறான கண்ணோட்டம். காவல்துறை எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரே மாதிரியாகவே எதிர்வினையாற்றும்,” என விவரித்தார்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதில் பெரும்பாலும் குடும்பத்தினரே சம்பந்தப்பட்டிருக்கின்றனர். குழந்தைகள் நல அமைப்பு போன்ற முயற்சிகளும் இந்தப் பிரிவில் பங்கு வகிப்போருடனான மாதாந்திர சந்திப்புகளும் துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட உதவுகின்றன.
குழந்தைகள் இதுபற்றி வெளிப்படையாக பேசுவது பாராட்டத்தக்கது என்கிறார் ஐஸ்வர்யா. கல்வித் துறையானது காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களையும் ஆலோசனைகளையும் பள்ளிகளில் வழங்குவதே இதற்கு முக்கியக் காரணம்.
சைபர் குற்றங்களை சமாளிக்க பள்ளிகளில் சைபர் செக்யூரிட்டி கிளப்கள் அமைக்கப்படுகின்றன. இதில் மாணவர் பிரதிநிதி, சைபர் செல்லுடன் அமர்வுகளில் பங்கேற்பார். கொச்சியில் ஐஸ்வர்யா ஒரு சைபர் சிமுலேஷன் ரூம் உருவாக்கியிருக்கிறார். சைபர் குற்றங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இதன் மூலம் அனிமேடட் வீடியோ கேம் வடிவில் புரிந்துகொள்ள முடியும்.
“இன்று காவல்துறையில் பல பெண்கள் இணைந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு சமமான கண்ணோட்டம் அவசியம். கேரள காவல்துறையின் ஜனமைத்ரி திட்டத்தின் ஒரு பகுதியாக நான் பல்வேறு பழங்குடியின பகுதிகளை பார்வையிட்டேன். காவல்துறை பெண் அதிகாரியைப் பார்த்ததும் அவர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுவதில்லை. தங்கள் அனுபவங்களை தயக்கமின்றி பகிர்ந்துகொள்கிறார்கள். பரிவு, இரக்கம் போன்ற குணாதிசயங்களை பெண்ணுடன் பொருத்திப் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கறேன்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ மொபைல் வாகனம் அறிமுகப்படுத்திய காவல் அதிகாரி!