குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ மொபைல் வாகனம் அறிமுகப்படுத்திய காவல் அதிகாரி!
தெலுங்கானா மெஹ்பூப்நகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ரெமா ராஜேஸ்வரி கொரோனா பரவல் சமயத்தில் குடும்ப வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. வீடுகளுக்குள்ளேயே இருப்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவேண்டியுள்ளது. இதனால் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் குடும்ப வன்முறை சம்பவங்கள் இருமடங்காக அதிகரித்துள்ள்தாக தேசிய மகளிர் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
தெலுங்கானா மெஹ்பூப்நகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ரெமா ராஜேஸ்வரி 'மொபைல் பாதுகாப்பு வாகனம்’ அறிமுகம் செய்ய இதுபோன்ற வன்முறை சம்பவங்களே காரணம். குடும்ப வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் கான்பூரில் இருந்து ஒரு பெண் ராஜேஸ்வரியை அழைத்துள்ளார். அந்தப் பெண்ணின் சகோதரியின் நிலை குறித்து விவரித்துள்ளார். அவரது கணவர் அடித்துத் துன்புறுத்துவதாக 'ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ இடம் தனது முயற்சி குறித்து கூறும்போது இந்த அதிகாரி விவரித்துள்ளார்.
“நாங்கள் ஒரு குழுவை அனுப்பினோம். அந்தப் பெண் மிகவும் மோசமான நிலையில் இருந்தார். இந்தச் சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது. பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. மூன்று நாட்களாக அந்தப் பெண் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை. வலியால் துடித்துக்கொண்டிருந்தார்,” என்றார் எஸ்பி.
அந்தப் பெண்ணை மீட்ட பின்னர் காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் தனது கணவர் பற்றி காவல்துறையிடம் புகாரளித்ததாக, 'தி லாஜிக்கல் இந்தியன்’ தெரிவித்துள்ளது.
“அந்த சம்பவம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்னும் ஏராளமானோர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் புகாரளிக்கவும் முடிவதில்லை,” என்றார் ராஜேஸ்வரி.
இதேபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் மற்ற பெண்களுக்கு உதவ ராஜேஸ்வரி மொபைல் பாதுகாப்பு வாகனம் ஒன்றை அமைத்தார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் உதவி பெறலாம்.
“இவர்களுக்கு உதவ மொபைல் பாதுகாப்பு வாகனத்தை நிறுவினேன். மாவட்டம் முழுவதும் இந்த வாகனத்தில் என் குழு உறுப்பினர்கள் ரோந்து செல்கின்றனர். இரண்டு வாரங்களில் 40 புகார்கள் வந்துள்ளன. பொதுமக்களுக்கு உதவ மேலும் பலர் என் குழுவில் இணைந்துள்ளனர்,” என்று ராஜேஸ்வரி விவரித்தார்.
ராஜேஸ்வரி இந்த முயற்சி மட்டுமின்றி தனது குழுவுடன் இணைந்து நெடுஞ்சாலைகளின் வழியே உணவு வங்கிகளையும் அமைக்கத் தொடங்கியதாக என்டிடிவி தெரிவிக்கிறது. வீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்குவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
“ரயில்கள் செயல்படத் தொடங்கியதும் 15 நாட்களில் 11,000 தொழிலாளர்கள் வீடு திரும்ப உதவினோம். என் குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவினார்கள்,” என்று குறிப்பிட்டார்.
இந்தக் காவல் அதிகாரி தனது முயற்சி குறித்த தகவல்களை ஆகஸ்ட் 6-ம் தேதி பகிர்ந்துகொண்டது முதல் இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் 38,000 லைக்குகளும் ஃபேஸ்புக்கில் 18,000 லைக்குகளும் பெற்றுள்ளன.
கட்டுரை: THINK CHANGE INDIA