‘தகர வீட்டில் கண்ட கனவு’ - குடும்ப வறுமையை கிரிக்கெட் பேட்டால் தூக்கி நிறுத்திய ரோவ்மன் போவெல்!

By Chitra Ramaraj
October 22, 2022, Updated on : Sat Oct 22 2022 10:31:31 GMT+0000
‘தகர வீட்டில் கண்ட கனவு’ - குடும்ப வறுமையை கிரிக்கெட் பேட்டால் தூக்கி நிறுத்திய ரோவ்மன் போவெல்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரராக, ஜூனியர் ஆண்ட்ரூ ரூசெல்லாக கொண்டாடப்படுபவர் ரோவ்மன் போவெல். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தனது சொந்த வாழ்க்கையிலும் கடும் போராட்டங்களைக் கடந்து தனக்கான இடத்தை அவர் உருவாக்கிய கதை மற்றவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தந்தையால் கைவிடப்பட்டு, தாயாரால் வளர்க்கப்பட்டு, ஏழ்மையில் உழன்று, சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு... என சொந்த வாழ்க்கையில் சிறுவயது முதல் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் போவெல்.


தன் குடும்பத்தின் வறுமையை போக்கி, சொந்த வீடு கட்டி, தன் தாய்க்கும், சகோதரிக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்து தருவது மட்டுமே சிறுவயது முதலே போவெல்லின் கனவாக இருந்தது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்ததுதான் கிரிக்கெட்.

rovman

தன்னம்பிக்கை தந்த தாய்

1993ம் ஆண்டு ஜமைக்காவில் பிறந்தார் போவெல். அவர் கருவில் இருக்கும்போதே, அக்கருவை அழித்துவிடும்படி அவரது தாயாரான ஜோவான் ப்ளுமரிடம் கூறியிருக்கிறார் போவெல்லின் தந்தை. ஆனால், அவரது தாய் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட, ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறினார் போவெல்லின் தந்தை. இதனால், குடும்பப் பொறுப்பு முழுவதும் போவெலின் தாயார் தலையில் வீழ்ந்தது.


ஆனால், கொஞ்சமும் மனம் தளராமல் பல்வேறு வேலைகளைச் செய்து தன் மகனையும், மகளையும் வளர்த்தெடுத்தார் ஜோவான் ப்ளூமர். சிறுவயது முதலே தாயின் வைராக்கியத்தையும், கடின உழைப்பையும் பார்த்து வளர்ந்ததால், தன் குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்துவதே தன் தலையாய பொறுப்பு என்பதை ஆழ்மனதில் உறுதிமொழியாக்கிக் கொண்டார் போவெல்.

கிரிக்கெட் ஆர்வம்

விளையாட்டைப் போலவே படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்துள்ளார் போவெல். அவரது கிரிக்கெட் திறமைகளை, குறிப்பாக பவர் ஹிட்டர் என்ற திறமையைக் கண்டுப்பிடித்தவர் அவரது உடற்கோப்பு ஆசிரியர்தான். அவர்தான் போவெலை கிரிக்கெட்டுக்குள் கொண்டு வந்தார்.


2016ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமானார் போவெல். ஆனால், அப்போது அவரால் தொடர்ந்து அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க இயலவில்லை. ஆனாலும் துவண்டு விடவில்லை பவல். தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றவும், தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையை மாற்றவும் மேலும் கடுமையாக உழைப்பது என முடிவெடுத்தார்.

powell

அதன்பலனாக, கடந்த 2 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரராக, தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து அருமையாக விளையாடி வருகிறார். அது மட்டுமின்றி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அதிரடியை வெளிப்படுத்தும் இவர் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

மோசமான தந்தை

எனது தந்தையை நான் நேரில் பார்த்ததே கிடையாது. நான் என் தாயின் கருவில் இருந்தபோதே என்னை கலைக்குமாறு என் தந்தை என் தாயை துன்புறுத்தினார். ஆனால் எனது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்து அவருடன் சண்டையிட்டு என்னை வளர்த்தார்கள். அதன் காரணமாக எனது தந்தை எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவர் இத்தனை ஆண்டுகளில் மீண்டும் எங்களிடம் வரவே இல்லை.

"என்னையும் என் சகோதரியையும் வளர்க்க என் தாய் மிகவும் கஷ்டப்பட்டார். என்னுடைய தாய் எனக்கு செய்த உதவிகளை கூறுவதற்கு வார்த்தை போதாது. நான் எப்போதெல்லாம் மனம் தளர்ந்து இருப்பேனோ அப்போதெல்லாம் எனது தாயை நினைத்து கொள்வேன். அவருக்காகவும், என் சகோதரிக்காகவும் நான் எதையும் செய்ய நினைக்கிறேன்.” என உருக்கமாகக் கூறுகிறார் போவெல்.
powell

2017ம் ஆண்டு ஐபிஎல்-இல் கேகேஆர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போவெல், அதன்பின்னர், ஐபிஎல்லில் எந்த அணியிலும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. காரணம் அந்தப் போட்டியில் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட அவர், ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.


எனினும். மனம் தளராத அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி ஒன்றில் சதம் விளாசி மிரட்டினார். மேலும், இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியிலும் மிரட்டியதைத் தொடர்ந்து, பல வருட இடைவெளிக்குப் பின்னர், ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கு டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக போவெல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அப்போது ஒரு போட்டியின் இடையே பவலின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசினார் வர்ணனையாளர் இயன் பிஷப். அதில்,

‘பவல் சிறுவயதில் ஏழ்மையில் வாடியது, தனது குடும்பத்தை ஏழ்மையிலிருந்து மீட்பேன் என தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்தது’ போன்றவற்றை உருக்கமாக ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். இது பவலை கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி, மக்களிடம் மேலும் நெருக்கமாக்கியது.

கிரிக்கெட் ஆர்வம் விதைத்தவர்கள்

சிறுவயதில் போவெல்லிற்கு கிரிக்கெட் ஆர்வத்தை ஊட்டியவர்கள் அவரது தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும் தான். தினமும் இரவு வேளையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பொற்காலக் கதைகளை போவெலுக்கு அவர் கதைகளாக கூறினார்கள்.


ரோஹன் கன்ஹாய், எவர்டன் வீக்ஸ், ரோவ், ராய் பிரெடெரிக்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், ஆல்வின் காளிச்சரன், கிளைவ் லாய்ட், டெரிக் முர்ரே, ஜெஃப் டியூஜான், ராபர்ட்ஸ், கார்னர், கிராஃப்ட், ஹோல்டிங், மார்ஷல், வான்பன் ஹோல்டர், பெர்னர்ட் ஜூலியன், கீத் பாய்ஸ் என பல வெற்றியாளர்களின் கதைகளை தினமும் கேட்டு வளர்ந்தார் போவெல்.

powell

தந்தை விட்டுச் சென்று விட்டதால், தனி மனிஷியாக போவெல்லையும், அவரது சகோதரியையும் வளர்த்தெடுத்தார் போவெல்லின் தாயார். கூலி வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தில் குழந்தைகளுக்கு சாப்பாடும் கொடுத்து, போவெலுக்கு கிரிக்கெட்டிற்கு தேவையான பேட், ஷூ போன்றவற்றையும் அவர் வாங்கிக் கொடுத்தார். தாயார் வேலைக்குச் சென்ற பிறகு தன் இளைய சகோதரியைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் போவெலுடையது தான்.

கனவு இல்லம்

ஜமைக்கா கிங்ஸ்டனில் உள்ள ஓல்ட் ஹார்பரின் பானிஸ்டரில்தான் போவெலின் வீடு இருந்தது. மழை பெய்தால் கடுமையாக ஒழுகும் தகரக் கூரை கொண்ட சிறிய வீடு அவர்களுடையது.

‘வீட்டில் மழை பெய்யும் போதெல்லாம் தாயும், தங்கையும் உறங்கும் இடத்துக்கு மழை நீர் சென்று நனைத்து விடாமல் இரவு முழுவதும் கண்விழித்து பார்த்துக் கொள்வேன்.’ என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் போவெல்.

அந்த இரவுகளில் எல்லாம், ‘நல்ல ஒழுகாத வீடு ஒன்றை கட்டித் தன் தாய்க்கு தருவதையே தனது கனவாக விழிகளைத் திறந்தபடியே கண்டிருக்கிறார் போவெல். விழித்துக் கொண்டே காணும் கனவென்பதால், தனது கனவை நிறைவேற்ற பணம் என்ற கேள்வியும் கூடவே அவருக்கு தோன்றியிருக்கிறது. அப்போது,

‘என் உழைப்பின் மூலம் நான் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவேன்’ என்பதையே திரும்பத் திரும்ப தனக்குள் கூறி இருக்கிறார் போவெல். தற்போது அதனை செய்தும் காட்டியுள்ளார்.

“கிரிக்கெட்டுக்கு வந்தவுடன், தேவையான பணம் சேர்த்ததும் நான் செய்த முதல் வேலை என் தாயாருக்கு விருப்பமான வீட்டை கட்டித் தந்ததுதான்,” என பெருமையுடன் குறிப்பிடுகிறார்.


அதோடு, தாயாருக்கு கார் ஒன்றையும் அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். இப்போது மெர்சிடஸ் புதிய கார் வாங்கி இருப்பதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் போவெல்.

powell
“எங்களில் சிலர் எங்களுக்கான செல்வத்தை நாங்களே ஈட்ட உந்தப்பட்டோம். எனவே நாங்கள் சிறிய விஷயங்களைச் சாதித்ததற்காகக்கூட, எங்களை நாங்களே கொண்டாடினால் எங்களைப் பொறுத்தருளுங்கள்,” என தன் கொண்டாட்டங்களுக்கான தன்னிலை விளக்கத்தையும் இன்ஸ்டாகிராம் பதிவில் போட போவெல் மறக்கவில்லை.

தான் வாழ்வில் வெல்ல நினைத்த ஏழ்மையை வெல்வதற்கு போவெலுக்கு மிகவும் உதவியது அவரது கிரிக்கெட் திறமைதான். இயற்கையாகவே மிக எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவர் போவெல். அந்தத் திறமை பவுலர்களை கதிகலங்க வைக்கும் ஒன்றாக தற்போதும் உள்ளது என்பதை மறுக்க இயலாதது.


தனது கிரிக்கெட் விளையாடும் திறமையால் வறுமையை வென்றெடுத்து விட்டார் போவெல். நிச்சயம் இனி வரும் ஆண்டுகளில் அவரது திறமைக்கு தகுந்தபடி அவரது வருமானமும் மேலும் அதிகரிக்கும்.


எனவே, அவர் சிறுவயதில் கண்களைத் திறந்து கொண்டு கண்ட கனவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதை, அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கண் சிமிட்டால் பார்ப்பார்கள் என்பது நிச்சயம். தனது தாய்க்கு செய்த சத்தியத்தையும், தனது வெற்றி மூலம் நிறைவேற்றிவிட்டார் ரோவ்மன் போவெல்.