குறைபாடால் மக்களால் ஒதுக்கப்பட்டவர், இன்று மக்கள் தொடர்பு பிரிவில் வெற்றிகர தொழில் முனைவர்!
பெருமூளை வாதம் பாதிப்பு காரணமாக சக மாணவர்களாலும் பணியமர்த்துவோராலும் நிராகரிக்கப்பட்டாலும் மக்கள் தொடர்பு பிரிவில் தொழில்முனைவு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சுமீத் அகர்வால்.
சுமீத் அகர்வால் குறைப் பிரசவமாக ஏழு மாதத்தில் பிறந்தார். இவருக்கு பெருமூளை வாதம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உடல் தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டது.
சுமீத் மற்ற குழந்தைகளைப் போல் தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என்பதில் அவரது அம்மா உறுதியாக இருந்தார். கொல்கத்தாவில் உள்ள சிறந்த பள்ளியில் சேர்த்தார். பள்ளியில் சக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள்கூட சுமீத்தைக் கிண்டல் செய்வார்கள். ஆனால் சுமீத்தின் அம்மா மனம் தளரவில்லை. சுமீத் மனதில் தொடர்ந்து நம்பிக்கையை விதைத்து ஆதரவாக இருந்துள்ளார்.
மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து விளையாடும்போது தனிமையில் பொழுதைக் கழித்துள்ளார் சுமீத். இதனால் புத்தகங்கள் படிப்பதில் நேரம் செலவிட்டுள்ளார். சுமீத்தின் அப்பா அவருக்காக நிறைய நேரம் ஒதுக்குவார். பல விஷயங்கள் குறித்து மகனுடன் விரிவாக விவாதிப்பார்.
சுமீத்திற்கு அடுத்தடுத்து நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு முறையும் சர்ஜரி பலனளிக்காமல் போகலாம் என்று அதிலுள்ள ஆபத்தை விளக்கியே அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
“என் அம்மா வழக்கறிஞராக இருந்தார். என்னைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக என் அம்மா வேலையை விட்டு விட்டார். மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறியபோதும் அம்மா தானும் நம்பிக்கை இழக்காமல் எனக்குள்ளும் நம்பிக்கையை ஊட்டி உறுதுணையாக இருந்துள்ளார். நான் படிக்கவேண்டும் என்பதற்காக எத்தனையோ போராட்டங்களைக் கடந்து என்னை சிறந்த பள்ளியில் சேர்த்தார்,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் சுமீத்.
பட்டங்கள் பெறமுடிந்தது - பணி வாய்ப்பு பெற முடியவில்லை
சுமீத் பிபிஏ படித்தார். அதைத் தொடர்ந்து மேலாண்மை பிரிவில் முதுகலைப் படிப்பு முடிப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள ICFAI வணிகப் பள்ளியில் சேர்ந்தார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்து வகுப்பிலேயே முதலிடம் பிடித்தார். இப்படி ஆர்வமாகப் படித்து பல்வேறு பட்டங்கள் பெற்றார்.
எத்தனை பட்டங்கள் பெற்றபோதும் கொல்கத்தாவில் ஒரு நிறுவனம்கூட சுமீத்திற்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வரவில்லை.
”நேர்காணலுக்கு செல்வேன். நான் படித்த பட்டங்களும் சான்றிதழ்களும் யாருக்கும் முக்கியமாகப் படவில்லை. என் தகுதியைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. என்னுடைய பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவேனா என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. நான் பேசத் தொடங்குவதற்கு முன்பே என்னைப் பற்றி அனைவரும் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டார்கள்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“கார்ப்பரேட் துறை அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்த முன்மாதிரிகள் அவசியம்,” என்றார்.
மக்களால் ஒதுக்கப்பட்டவர் மக்கள் தொடர்பில் செயல்பட்டார்
மற்றவர்கள் நம் திறமையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் என்ன? வாய்ப்பு வழங்காவிட்டால் என்ன? நாமே சொந்தமாக நிறுவனம் தொடங்கலாம் என சுமீத் தீர்மானித்தார். PR Signal என்கிற மக்கள் தொடர்பு நிறுவனத்தை நிறுவினார்.
”எனக்கு இருப்பது குறைபாடு இல்லை. என்னாலும் சாதிக்கமுடியும் என்று நிரூபிக்க நினைத்தேன். மற்றவர்கள் ‘நார்மல்’ என வரையறுக்கும் வட்டத்திற்குள் நாம் இல்லை என்பதால் நம்மால் சாதிக்கமுடியாது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. என்னைப் போன்றோருக்கு நானே முன்னுதாரணமாகத் திகழவும் நம்பிக்கையளிக்கவும் விரும்பினேன்,” என்கிறார்.
இன்று சுமீத் மக்கள் தொடர்பு பிரிவில் செயல்படும் பிரபல தொழில்முனைவர். ஊக்கமளிக்கும் பேச்சாளர். மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஆர்வலர். இப்படிப் பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்கிறார்.
இவரது ஏஜென்சி Digi-Ability 2018, TiECON 2018, Siege Art & Wine Carnival, Elite Conclave Launch Party, Inclov Social Spaces, Hair Pro Product Launch போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தியுள்ளது.
கல்யாணி லைஃப் இன்சூரன்ஸ், Shishur Sevay, ஆர்டெமிஸ் ஃபவுண்டன் ஃபவுண்டேஷன் போன்ற என்ஜிஓ-க்களின் மக்கள் தொடர்பு திட்டமிடல் பணிகளுக்கு சுமீத்தின் ஏஜென்சி ஆலோசனை வழங்கியுள்ளது.
“ஆரம்பகட்டத்தில் என்னுடைய சேவையைப் பெற்ற என்ஜிஓ-க்களில் ஒன்று டாக்டர் ஹாரிசன் தொடங்கிய Shishur Sevay. இந்த என்ஜிஓ-வின் பராமரிப்பு இல்லத்தில் கங்கா என்கிற சிறுமியைப் பார்த்தேன். அந்தச் சிறுமிக்கு குறைபாடு இருந்தது. இதனால் யாரும் பராமரிக்கவில்லை. டாக்டர் ஹாரிசன் மட்டுமே அடைக்கலம் கொடுத்துள்ளார். மூன்று நாள் கலை மற்றும் கைவினை கண்காட்சி ஏற்பாடு செய்து அதன்மூலம் நிதி உயர்த்த உதவினேன். Tobii Eye Tracker மூலம் கங்காவும் மற்ற சிறுமிகளும் அவர்களது தேவைகளையும் எண்ணங்களையும் பராமரிப்பாளர்களிடம் வெளிப்படுத்துகிறார்கள்,” என்றார்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்கிற கொள்கையுடன் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.
“மக்கள் எவ்வாறு உறவுமுறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள்? குறிப்பிட்ட விதத்தில் ஏன் நடந்துகொள்கிறார்கள்? அவ்வாறு அவர்கள் நடந்துகொள்ளக் காரணம் என்ன? சிறு வயதில் மருத்துவமனையில் நேரம் செலவிட்டபோதே இந்தக் கேள்விகளுக்கு விடைகாண்பதில் ஆர்வம் காட்டினேன். ஒவ்வொரு முறை அறுவை சிகிச்சை அறைக்குச் செல்லும்போதும் சாவின் வாயிலில் சென்று திரும்பினேன். அருகில் மருத்துவமனை ஊழியர்களும் மற்ற நோயாளிகளும் இருந்தது திருப்தியளித்தது. சமூக தொடர்பு இல்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினமாக இருந்தது,” என்கிறார்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க தங்களுக்கே உரிய பாணியைப் பின்பற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்த சுமீத் மக்கள் தொடர்பு பிரிவைத் தேர்வு செய்துள்ளார்.
“மக்கள் தொடர்பு துறையானது சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் இடையே உள்ள ஆழமான இணைப்பு தொடர்பானது. முன்பு நான் என்னுடைய தனிமை உணர்வை எதிர்த்துப் போராடினேன். இன்று ஒரு பிராண்டாக இதைத் தான் செய்கிறேன். மனிதர்கள் குறிப்பிட்ட செயலை ஏன் செய்கிறார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ள என் நெட்வொர்க் மூலம் உதவுகிறேன்,,” என்கிறார் சுமீத்.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா