‘பிறந்து 3 மாதத்தில் இறந்துவிடுவாள்’ - மரணத்தை வென்று 33 வயதில் ஆசிரியர் ஆக ஜொலிக்கும் ரம்யா!
33 வயது ரம்யாவிற்கு பிறவிலேயே ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பெர்ஃபெக்டா (OI) என்கிற அரிய வகை மரபணு குறைபாடு இருந்தும் எத்தனையோ போராட்டங்களைக் கடந்து இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார்.
33 வயது ரம்யா Association of People with Disability (APD) நடத்தும் பள்ளி ஒன்றில் கன்னடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றுகிறார். பிறவி குறைபாடு காரணமாக இவரது வாழ்க்கை சக்கர நாற்காலியிலேயே முடங்கிவிட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் மனநிலையை இவரைவிட வேறு யாரால் சிறப்பாகப் புரிந்துகொள்ளமுடியும்?
ரம்யாவிற்கு பிறவியிலேயே ஏற்படும் ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பெர்ஃபெக்டா (OI) என்கிற அரிய வகை மரபணு குறைபாடு இருந்தது. ரம்யா பிறந்ததுமே முன்று மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், முப்பதாண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்டன. இந்தப் பயணத்தில் ரம்யா எத்தனை விதமான தடைகளையும் போராட்டங்களையும் கடந்திருப்பார் என்பது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.
ரம்யா வீடியோ கால் மூலம் ஹெர்ஸ்டோரி உரையாடலில் பங்கேற்றார். இதில் பெங்களூருவில் கிராப்புறத்தில் வளர்ந்த நாட்கள் முதல் தான் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொண்டார்.
சிறுவயது நாட்கள்
பள்ளிப் படிப்பின் ஆரம்ப நாட்களிலேயே ரம்யா பிரச்சனைகளை எதிர்கொண்டார்.
”சிறு வயதில் மிகவும் சிரமப்பட்டேன். பள்ளியில் நண்பர்கள் யாருடனும் எந்த விளையாட்டும் விளையாட முடியாது,” என்கிறார்.
பள்ளியில் சேர்வதே மிகப்பெரிய போராட்டமாக இருந்துள்ளது. எந்த பள்ளியும் ரம்யாவை சேர்த்துக்கொள்ள சம்மதிக்கவில்லை. அவரை தனியாக கவனித்துக்கொள்வது சிரமம் என்று கூறி பலர் மறுத்துள்ளனர்.
ரம்யாவின் குடும்பச் சூழலும் ஏழ்மை நிலையிலேயே இருந்தது. ரம்யாவின் அம்மா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வகுப்பெடுத்து வருமானம் ஈட்டி வந்தார். இப்படிப்பட்ட சூழலிலும் அரசு ஆரம்பப் பள்ளியில் ரம்யா படிப்பதற்காக ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் ரம்யாவின் அம்மா.
“பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர்க்கவேண்டிய நேரம் வந்தது. வீட்டிற்கு அருகில் இருந்த அரசு கலைக் கல்லூரியில் என்னை சேர்த்துக் கொள்ள அம்மா அனுமதி கேட்டார். அவர்கள் மறுத்துவிட்டனர். அம்மா தொடர்ந்து மன்றாடினார். அவர்கள் சம்மதிக்கவில்லை. அம்மாவை அந்த நிலைமையில் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தது. அதேசமயம் இங்கு சீட் கிடைக்காமல் போனாலும் வேறு நகருக்கு சென்றால், சரியான வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இருந்தது,” என்கிறார் ரம்யா.
ரம்யாவிற்கு 17 வயதானபோது அம்மாவுடன் கோலார் மாவட்டத்தில் இருந்த உறவினர் ஒருவரது வீட்டிற்கு இடம் மாறினார்கள். அங்கு முல்பகல் பகுதியில் இருந்த அரசுக் கல்லூரியைத் தொடர்பு கொண்டார்கள்.
”படிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தை அங்கிருந்த அதிகாரிகள் புரிந்துகொண்டார்கள். உங்களைப் போன்றோருக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப்போகிறோம் என்றனர். சக மனிதர்கள் மீது அன்பு காட்டுவோரும் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை பிறந்தது,” என்கிறார்.
ரம்யா கல்லூரியில் படித்த மூன்றாண்டுகளும் அவருக்கு பலவகையான உதவிகள் கிடைத்துள்ளன. நோட்ஸ் எடுக்க உதவியுள்ளனர். அசைன்மெண்ட் முடிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. ரம்யாவும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நன்றாக படித்து பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து அஞ்சல் வழி கல்வியாக பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் முடித்தார்.
சிவில் சர்வீஸ் கனவு
முதுகலைப் பட்டம் முடித்த பிறகு ரம்யாவிற்கு போட்டித் தேர்வுகள் எழுதவேண்டும் என்று தோன்றியது.
“என் நிலைமையில் இருக்கும் மற்றவர்களுக்கும் உதவ விரும்பினேன்,” என்கிற ரம்யாவின் தேர்வு எழுதிய அனுபவம் அத்தனை உற்சாகமாக இருக்கவில்லை.
ரம்யா பெங்களூருவில் இருக்கும் பிரபல அரசுக் கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதவேண்டியிருந்தது.
“தேர்வு எழுதவேண்டிய அறை மூன்றாம் மாடியில் இருந்தது. அங்கு லிஃப்ட் வசதி இல்லை. எனக்காக பிரத்யேக ஏற்பாடு ஏதாவது செய்யமுடியுமா என்று கேட்டுப் பார்த்தேன். சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். என் அம்மா என்னைக் கஷ்டப்பட்டு மூன்றாவது மாடிக்கு கூட்டி சென்றார்,” என்கிறார்.
அத்துடன் சிவில் சர்வீஸ் தேர்வெழுதவேண்டும் என்கிற கனவை ரம்யா கைவிட்டார். இது எளிதாக இருக்கப்போவதில்லை என்பது புரிந்தது. குறிப்பாக அதற்கும் மேல் அம்மாவைக் கஷ்டப்படுத்த அவர் விரும்பவில்லை.
ஆசிரியர் பயிற்சி
2017ம் ஆண்டு ரம்யா முல்பகல் பகுதியில் இருக்கும் சாரதா கல்லூரியில் பிஎட் புரோக்கிராமில் சேர விண்ணப்பித்தார். இந்த வகுப்பறை அனுபவம் உற்சாகமாக இருந்துள்ளது. இந்த புரோக்கிரம் நிறைவடைந்ததும் Association of People with Disability (APD) மூலம் பெங்களூருவின் லிங்கராஜபுரத்தில் இருக்கும் அவர்களது பள்ளியிலேயே ரம்யாவிற்கு வேலை கிடைத்தது.
தற்போது ரம்யா பள்ளிக்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்குகிறார். எலக்ட்ரிக் வீல்சேரில் பள்ளிக்கு சென்று திரும்புகிறார். நான்கு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கன்னடம் கற்றுக்கொடுக்கிறார்.
“என் வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பதால், சில சமயம் மாணவர்களை சமாளிப்பது கஷ்டமாக இருக்கும். மொத்தத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது சிறப்பான அனுபவமாகவே இருக்கிறது. அவர்களது நிலைமையை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகம். இந்தப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றபடி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன,” என்கிறார் ரம்யா.
மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புகிறார் ரம்யா.
“5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட எத்தனையோ அரசுத் திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் பலனடையலாம். ஆனால் பலருக்கு இந்தத் தகவல்கள் சென்று சேருவதில்லை. இதுபோன்ற திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் பலரை சென்றடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்கிறார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, சமீபத்தில் ஒருநாள் விழிப்புணர்வு முயற்சியை லால்பாக் பொடானிக்கல் கார்டனில் APD ஏற்பாடு செய்திருந்தது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம். பொது இடங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற ரம்யா முதல் முறையாக பொடானிக்கல் கார்டன் வருவது உற்சாகமாக இருப்பதாக அந்நிகழ்வில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
”நான் அதிகம் வெளியில் சென்றதில்லை. APD நண்பர்கள் உதவியுடன் லால்பாக் சென்றது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. தோட்டத்தை சுற்றிப் பார்த்தோம். மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் இருக்கிறதா என்பதை கவனித்தோம். என்னைப் போன்ற மற்றவர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது,” என்கிறார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பல விஷயங்களை பெற்றோர் அறிமுகப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“மாற்றுத்திறனாளிகளால் எங்கும் செல்லமுடியாது. பெற்றோரால்தான் இதற்கு தீர்வளிக்க முடியும். அவர்கள் தயங்காமல் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புது அனுபவங்களை வழங்கினால் அவர்கள் மற்ற குழந்தைகளைப் போன்றே உணர்வார்கள்,” என்கிறார்.
கற்றுக்கொடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை மட்டுமல்ல சமைப்பது, கலை மற்றும் கைவினை வேலைப்பாடுகள் போன்றவற்றில் ரம்யாவிற்கு ஆர்வம் அதிகம்.
“என் இடது கை வலுவாக இருக்கும். என்னால் காய்கறிகளை நறுக்கி சமைக்க முடிகிறது. சப்பாத்தி போன்ற ஒருசில டிஷ் தவிர மற்றவற்றை சமைக்கிறேன். பேப்பர் கிராஃப்ட் வேலைகூட என்னால் செய்ய முடிகிறது,” என்று ரம்யா புன்னகைத்தவாறே குறிப்பிடுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா
‘15வயதில் கழுத்துக்கு கீழ் முடங்கிப் போன வாழ்க்கை’ - மாற்றுத் திறனாளிகளின் மாற்றமாய் மாறிய விராலி!