‘15வயதில் கழுத்துக்கு கீழ் முடங்கிப் போன வாழ்க்கை’ - மாற்றுத் திறனாளிகளின் மாற்றமாய் மாறிய விராலி!

By YS TEAM TAMIL
August 29, 2022, Updated on : Mon Aug 29 2022 06:01:32 GMT+0000
‘15வயதில் கழுத்துக்கு கீழ் முடங்கிப் போன வாழ்க்கை’ - மாற்றுத் திறனாளிகளின் மாற்றமாய் மாறிய விராலி!
திடீரென்று ஸ்தம்பித்த வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொண்ட விராலி மோடி ஊக்கமளிக்கும் பேச்சாளர், மாடல், மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் என பரிணமித்திருக்கிறார்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

வாழ்க்கை கடினமான சூழல்களை நம்மைத் தள்ளும்போது நாம் நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். ஆனால், நம்பிக்கை மட்டுமே அதிலிருந்து மீள்வதற்கான வழி என்பதைப் பின்னரே புரிந்துகொள்வோம்.


15 வயது விராலி மோடி திடீரென்று ஸ்தம்பித்துவிட்ட வாழ்க்கையை நம்பிக்கை இழக்காமல் எதிர்கொண்டு மீண்டு வந்திருக்கிறார். உடல் முடங்கிப்போனாலும் ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் மாடலாகவும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடும் ஆர்வலராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

virali-1

விராலி தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். சில நாட்கள் தங்கி செல்வதற்காக இவர்கள் இந்தியா வந்திருந்தனர். இந்தியா வந்ததும் 2006ம் ஆண்டு விராலிக்கு காய்ச்சல் வந்துள்ளது. மருத்துவர்களை சந்தித்தும் குறையவில்லை. மாறாக காய்ச்சல் அதிகமாகிக்கொண்டே இருந்தது.


பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிவிட்டார்கள். எத்தனையோ மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றாகிவிட்டது. விதவிதமான மருந்து மாத்திரைகள். அவ்வப்போது தென்படும் அறிகுறிகளை இந்த மாத்திரைகள் குணப்படுத்திவிடும். ஆனால் நிரந்தரத் தீர்வு இல்லை.


ஒருகட்டத்தில் திடீரென்று அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மருத்துவர்களால் நோயைக் கண்டறிந்து தீர்மானத்திற்கு வரமுடியாமல் போனது. வெண்டிலேட்டரிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டார்.

ஆரம்பத்தில் கழுத்திற்குக் கீழே உடல் முழுவதும் முடமாகிவிட்டது. பல வகையான தெரபிக்கள் கொடுக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து உடலின் மேற்பகுதியில் அசைவுகள் மீட்கப்பட்டன.

குடும்பத்தினர், நண்பர்கள் என சமூகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியே இருக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.

கடினமாக சூழலை ஏற்கப் பழகிக்கொண்டார்

விராலி தன்னுடைய உடல்நிலை மோசமானதை நினைத்து வருத்தப்பட்டார். ஆனால், அப்படியே முடங்கிவிடவில்லை. உடலளவில் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை மனதளவில் ஏற்றுக்கொள்வது அத்தனை சுலபமல்ல. இருப்பினும் அவர் பழகிக்கொண்டார். தன் நிலைமையை ஏற்றுக்கொண்டார். எல்லாவற்றிகும் மேலாக தன்னையே விரும்பத் தொடங்கினார். மற்றவர்களும் இதையே பின்பற்ற அறிவுறுத்துகிறார்.

virali-2
“எல்லோரையும் விட உங்களுக்கு நீங்கள் முக்கியம். மொத்த கவனத்தையும் உங்கள் மீது செலுத்துங்கள். சமூகத்தை திருப்திப்படுத்த முயற்சி செய்தால் பலன் கிடைக்காது. உங்களில் கவனம் செலுத்திக்கொள்ளும்போது உங்களுக்குள் மகிழ்ச்சி பிறக்கும். நம் குறைபாடுகள் நாம் யார் என்பதைத் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. நம் குறைபாடுகளைக் கொண்டு மற்றவர்கள் நம்மை அடையாளப்படுத்தவும் அனுமதிக்கக்கூடாது,” என்கிறார்.

அவரிடம் இருந்த சக்கர நாற்காலியைக் காட்டிலும் இந்த தன்னம்பிக்கைதான் அவர் முடங்கியிருந்த இடத்திலிருந்து முன்னேறிச் செல்ல உதவியிருக்கிறது.


கடந்த பத்தாண்டுகளில் அவரது தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 2014ம் ஆண்டு ’மிஸ் வீல்சேர் இந்தியா’ போட்டியில் வென்று இரண்டாம் இடம் பிடித்தார்.

Quora தளத்தில் தனது வாழ்கையில் கிடைத்த அனுபவங்களை எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். இதில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

”நான் மோடிவேஷனல் ஸ்பீக்கர் ஆனேன். மக்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். இதுபோன்ற பாராட்டுகள் எனக்குள் நம்பிக்கையை மென்மேலும் வலுக்கச் செய்தது. மாடலிங், ஆக்டிங் என திறமைகளை மெருகேற்றிக் கொண்டேன். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, என் எழுத்துக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கினேன்,” என்கிறார்.

திருப்புமுனை

2008-ம் ஆண்டு ஆயுர்வேத சிகிச்சைக்காக விராலி தனது அம்மாவுடன் இந்தியாவிற்கு மாற்றலானார். இது அவரது வாழ்க்கையில் ஒரு புதிய துவக்கத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவில் தங்கியிருந்த நாட்களில் இங்குள்ள கட்டமைப்பு வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

சக்கரநாற்காலியில் முடங்கியிருக்கும் பெண்ணாக பல்வேறு சிரமங்களை அவர் சந்தித்திருக்கிறார். ரயிலில் ஏறி இறங்குவதுகூட சிரமமாக இருந்துள்ளது. ரயில் போக்குவரத்தை மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் மாற்றியமைக்கவேண்டும் என்றும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தார்.

அப்போது change.org தளத்தில் #MyTrainToo என்ற இந்திய ரயில்வே மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையைப் பதிவிட்டார்.

விராலியின் லெட்டர் வைரலானது. அவர் பிரதமர் அலுவலகத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் புகார் எழுதினார். ஆனால் இரண்டு அலுவலகங்களிலிருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

virali-3

இருப்பினும் இவரது கோரிக்கைகள் கேரள ரயில்வே அதிகாரியின் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு கேரளாவின் எர்னாகுளம், கொச்சி, திருச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன.


அதைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் போன்ற இதர நகரங்களும் இதை செயல்படுத்த முற்பட்டு ரயில்வே நிலையங்களில் தேவையான மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன.

”வீல்சேர் செல்லும்படி ரயில்நிலையங்களில் நிரந்தர ரேம்ப் அமைக்கப்பட்டது. ரயில் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ பயிற்சியளிக்கப்பட்டது. ஓய்வறை, கழிப்பறைகள் போன்றவை சக்கரநாற்காலிகள் பயன்படுத்துவோருக்கு ஏற்றதாக மாற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்கள்,” என்கிறார்.

மாற்றம் தேவை

சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் பெரியளவில் மாற்றம் தேவைப்படுவதை விராலி சுட்டிக்காட்டுகிறார்.

“குறைபாடுகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை,” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.

பொது இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்கிற கருத்தை கடந்த சில ஆண்டுகளாகவே விராலி முன்வைத்து வருகிறார். சமீபத்தில் விராலி ஒரு ரெஸ்டாரண்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரெஸ்டாரண்ட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என மனு பதிவிட்டிருக்கிறார். இந்த மனுவிற்கு 1.5 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா