ஐஏஎஸ் அதிகாரி ஆன ‘மாடல்’ - தஸ்கீனின் தனி வழிப் பயணம்!
மாடல் ஆக இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஆன தஸ்கீன் கான், ‘மிஸ் இந்தியா’ கனவையும் துறந்து லட்சியப் பாதையில் முன்னேற்றம் கண்டவர்.
தொழில் ரீதியாக ‘மாடல்’ ஆக இருந்த தஸ்கீன் கான் தன் விடாமுயற்சியால் ஐஏஎஸ் அதிகாரியானதை வியத்தகு பயணம் என்றே சொல்லலாம்.
அழகும் அறிவும் ஒருமித்தவர் என்று தன்னை நிரூபித்து, பொழுதுபோக்கு துறையில் உள்ள எவரும் இந்தியாவின் கடினமான ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் தஸ்கீன் கான் .
யுபிஎஸ்சி (UPSC) மிகவும் கடினமானது. அனைவராலும் எளிதில் தேர்ச்சி பெற முடியாதது. அறிவுபூர்வமாக சவாலானது என்று கருதப்படுகிறது. யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், சமூகவியல் உளவியல், வரலாற்றியல் போன்ற துறைகளில் கெட்டிக்கார மாணவர்கள் மட்டுமே தயாராக முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
பொழுதுபோக்குத் துறையில் உள்ள எவரும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஐஏஎஸ் தஸ்கீன் கான் நேரடி உதாரணமாகத் திகழ்கிறார்.
யார் இந்த தஸ்கீன் கான்?
குழந்தைப் பருவத்திலிருந்தே புத்திசாலித்தனமானவர் தஸ்கீன். பல திறமை கொண்ட பெண். தஸ்கீன் ‘மிஸ் டேராடூன்’ மற்றும் ‘மிஸ் உத்தராகண்ட்’ ஆகிய பட்டங்களை வென்றவர். அவர் ஒரு வெற்றிகரமான மாடலாகவும் இருந்தார். வசீகரமான புத்திசாலி பெண்ணான தஸ்கீனுக்கு சமூக ஊடகங்களில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
தஸ்கீன் கூடைப்பந்து சாம்பியனாகவும், ஒரு தொழில்முறை மாடல் மற்றும் நடிகராகவும் இருந்ததைத் தவிர, தேசிய அளவிலான விவாத வீரராகவும் இருந்தார். அவர் பள்ளிக்குப் பிறகு NIT-இல் சேர்க்கைக்கு தகுதி பெற்றார். ஆனால், அவரது பெற்றோரால் கட்டணம் செலுத்த முடியாததால் மதிப்புமிக்க அந்த நிறுவனத்தில் சேர முடியவில்லை.
‘மிஸ் இந்தியா’ போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்டார். இருப்பினும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆர்வத்தை அவர் நிறைவேற்ற வேண்டியிருந்தது.
மாடலிங் தவிர, அவர் தனது UPSC தேர்வுக்காக தன்னை தயார்படுத்துவதில் முனைப்புக் காட்டினார்.
இருப்பினும், அவரது இந்தப் பாதையில் ரோஜாக்கள் விரிக்கப்பட்டிருக்கவில்லை. மூன்று முறை தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும், தஸ்கீன் மனம் தளரவில்லை. அவரது கடின உழைப்பு பலனளித்தது, இறுதியாக 2020ல் தனது நான்காவது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்றார்.
தங்கள் பலத்தின் மீதே அவநம்பிக்கை கொள்ளும் அனைத்து மக்களுக்கும் தஸ்கீன் ஒரு பெரிய உத்வேகமாக நிற்கிறார்.
ஒரு நேர்காணலில், தஸ்கீன் கான் தான் கல்வியில் சிறந்த மாணவி அல்ல, ஆனால், விளையாட்டில் சிறந்து விளங்குவதாக வெளிப்படையாக நேர்மையுடன் ஒப்புக் கொண்டு தன்னடக்கத்தையும் வெளிப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அவரது இந்த உத்வேகம் பற்றி கேட்டபோது பகிர்ந்த தகவல்:
“ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த என்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் ஒருவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் ஜாமியாவின் இலவச பயிற்சியைப் பெற்று, தேர்வுக்குத் தயாராவதற்காக டெல்லி சென்றவர்.”
இன்ஸ்டா நம் வாழ்க்கைக்கு இன்ஸ்பிரேஷனையும் தேடித் தருவதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
‘ஐஏஎஸ் அதிகாரியான மளிகைக் கடைக்காரர் மகள்’ - ஸ்வேதா அகர்வால் யுபிஎஸ்சி தேர்வில் வென்றது எப்படி?
Edited by Induja Raghunathan