சென்னையில் தொடங்கி இன்று இந்திய அளவில் பிரபலமான நோய் கண்டறியும் சேவை நிறுவனம் ‘Medall’
ராஜு வெங்கட்ராமன் 2009-ம் ஆண்டு தொடங்கிய Medall இன்று இந்தியாவின் மிகப்பெரிய நோய் கண்டறியும் சேவை நிறுவனமாக செயல்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டி வருவதால் நோய் கண்டறியும் சேவைகள் (Diagnostic services) வழங்கும் பிரிவில் செயல்படும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் நோய் கண்டறியும் சேவைப் பிரிவில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள 2009ம் ஆண்டு சென்னையில் Medall தொடங்கினார் ராஜு வெங்கட்ராமன்.
ரேடியாலஜி இமேஜிங் சேவைகள் உள்ளிட்ட நோய் கண்டறியும் சேவைகளை சிறந்த தரத்துடன் வழங்கி மருத்துவர்களின் நம்பிக்கைக்குரிய மையமாக செயல்படவேண்டும் என்பதே அவரது நோக்கம்.
Medall தற்போதைய சிஇஓ அர்ஜுன் ஆனந்த் கூறும்போது,
”பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜு Medall தொடங்குவதற்காக தனியார் பங்கு நிறுவனமான Peepul Capital உடன் இணைந்தார். சென்னையின் முன்னணி நோய் கண்டறியும் மையமான Precision Diagnostic நிறுவனத்தை ராஜு வாங்கிக்கொண்டபோது இந்நிறுவனம் தொடங்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் மக்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டும் போக்கு அதிகரித்திருப்பதுடன் நாள்பட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், துல்லியமான நோய் கண்டறியும் சேவைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சரியான சிகிச்சை வழங்கப்படுவதற்கு துல்லியமாக நோய் கண்டறிவது அவசியமாகிறது.
Medall இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய டயாக்னாஸ்டிக் சேவை வழங்கும் நிறுவனம். ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் சேவை வழங்குகிறது. 2,500 ஊழியர்களுடன் செயல்பட்டு நோய் கண்டறியும் சேவைகள் தொடர்பான தென்னிந்திய சந்தையில் 40 சதவீதம் பங்களிக்கிறது.
2009ம் ஆண்டு முதல் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைத்துள்ளார் ராஜு. ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான ராஜு, Medall தொடங்குவதற்கு முன்பு பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
Peepul Capital பிரதிநிதியாக நிர்வாகக் குழுவில் இணைந்திருந்த அர்ஜுன் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சிஇஓ-வாக பொறுப்பேற்றார். Medall பத்தாண்டு கால வளர்ச்சி குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
எஸ்எம்பிஸ்டோரி: எந்த மாதிரியான நோய் கண்டறியும் சேவைகளை வழங்குகிறீர்கள்?
அர்ஜுன் ஆனந்த்: நாங்கள் இரண்டு வகையான நோய் கண்டறியும் சேவைகளை வழங்குகிறோம். ஒன்று ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யும் முறை. அடுத்தது சிடி, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட முழு உடல் ஸ்கேன் சேவை. எங்கள் நிறுவனம் உட்பட பெரும்பாலான நோய் கண்டறியும் நிறுவனங்கள் நான்–இன்வேசிவ் முறையில் பரிசோதனைகள் மேற்கொள்கின்றன.
எஸ்எம்பிஸ்டோரி: நோய் கண்டறியும் மையங்களின் நெட்வொர்க்கை எவ்வாறு உருவாக்கினீர்கள்?
அர்ஜுன் ஆனந்த்: இந்தியா முழுவதும் ஒன்பது மாநிலங்களில் செயல்படுகிறோம். விரைவில் பத்தாவது மாநிலத்தில் செயல்பட இருக்கிறோம். நாடு முழுவதும் 1,600 இடங்களில் 180-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் செயல்படுகிறோம். மெட்ரோ மட்டுமல்லாமல் மெட்ரோ அல்லாத நகரங்களிலும் செயல்படுகிறோம். முதல் நிலை நகரங்கள் தொடங்கி நான்காம் நிலை நகரங்கள் வரை செயல்படுவதே எங்கள் திட்டம்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சென்னையில் மட்டுமல்லாது கன்னூர், மதுரை போன்ற நகரங்களிலும் செயல்படுகிறோம். அதேபோல் திருவண்ணாமலை, நாகப்பட்டினம் போன்ற சிறிய மாவட்டங்களிலும் மையம் அமைத்துள்ளோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் சேவை மையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
அர்ஜுன் ஆனந்த்: நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதைக் கண்டறிந்து தெரிவிப்பதே Medall நோய் கண்டறியும் மையத்தின் நோக்கம். மருத்துவர் நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைத்திருப்பார். நோயாளிகள் தங்களுக்கு என்ன பிரச்சனை என்பதைத் தெரிந்துகொள்ள நினைப்பார்கள். இந்த இரு காரணங்களுக்காகவே நோயாளிகள் மையத்திற்கு வருவார்கள்.
நாங்கள் நோய் கண்டறியும் பரிசோதனைகளை முடித்து முடிவுகளை அறிக்கைகளாக தயாரித்து நோயாளியிடம் கொடுத்துவிடுவோம். அதன் பிறகு அவர்கள் அவற்றை எடுத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவார்கள்.
பெரிய மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைகளுடன் நோய் கண்டறியும் சேவையும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் நாங்கள் நடுநிலையாக செயல்படும் விதம் எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.
இதுதவிர நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ரத்த மாதிரிகளை சேகரிக்கிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: மருத்துவ உபகரணங்களையும் நோய் கண்டறியப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் எங்கிருந்து வாங்குகிறீர்கள்?
அர்ஜுன் ஆனந்த்: கிட்டத்தட்ட அனைத்து உபகரணங்களுமே உள்நாட்டிலேயே வாங்கப்படுகின்றன. ஆனால் தற்போது சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் அதிகம் வாங்குகிறோம். Philips, Siemens, Mindray மற்றும் இந்தியாவில் செயல்படும் இதர நிறுவனங்களை உதாரணமாகக் காட்டலாம்.
நாங்கள் வாங்கும் உபகரணங்களைப் பொருத்து பரிசோதனை மையம் அமைக்கும் செலவு மாறுபடும். சில லட்சங்கள் தொடங்கி கோடிக் கணக்கில் செலவிடவேண்டியிருக்கும்.
எஸ்எம்பிஸ்டோரி: Medall வழங்கும் சேவைகளுக்கு எவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
அர்ஜுன் ஆனந்த்: நோய் கண்டறியும் சேவைகளை ஒரு தொகுப்பாக வழங்குகிறோம். உதாரணத்திற்கு புகை பிடிக்கும் நபர் ஒருவர் சில பரிசோதனகளை செய்யவேண்டியிருந்தால் இதற்கான பரிசோதனைகளை ஒரு தொகுப்பாக வழங்குகிறோம். மற்ற மையங்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் கட்டணம் குறைவாகவே இருக்கும்.
ஒரு சில பரிசோதனைகளுக்கு முதல் நிலை நகரங்களைக் காட்டிலும் இரண்டாம் நிலை நகரங்களில் கட்டணம் சிறியளவில் மாறுபடுவதுண்டு. ஆனால் பொதுவாக எங்கள் மையங்களில் அனைத்து சேவைத் தொகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணங்களே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எஸ்எம்பிஸ்டோரி: மையங்களை யார் நடத்துகிறார்கள்? உபகரணங்களை பராமரிக்கும் பொறுப்பு யாருடையது?
அர்ஜுன் ஆனந்த்: துறையில் தகுதி வாய்ந்த நபர்களை பணியமர்த்துகிறோம். எங்கள் உபகரணங்கள் நவீனமானவை. இன்றைய நவீன உபகரணங்கள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கிறோம்.
சாதனங்கள் அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM) அல்லது சப்ளையர்கள் மூலம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வாடிக்கையாளர்கள் யார்?
அர்ஜுன் ஆனந்த்: நோய் கண்டறியும் சேவைக்கான தேவை இருப்போர் அனைவருமே எங்கள் வாடிக்கையாளர்கள். தனிநபர்கள், கார்ப்பரேட், அரசு அமைப்புகள் மற்றும் இதர நிறுவனங்களை நாங்கள் கையாள்கிறோம். கார்ப்பரேட் திட்டங்கள் அல்லது அரசு திட்டங்களில் பங்களிப்போரும் எங்களை அணுகுவார்கள். நாங்கள் அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம்.
உதாரணத்திற்கு நாங்கள் ஜார்கண்ட் அரசாங்கத்துடன் இணைந்துள்ளோம். பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகிறோம். மேம்பட்ட ERP அமைப்பை நிறுவனத்திலேயே உருவாக்கி பயன்படுத்துகிறோம். நாங்கள் வழங்கும் ஒட்டுமொத்த சேவைகளையும் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் இது உதவுகிறது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிகத்தில் டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறீர்கள்?
அர்ஜுன் ஆனந்த்: ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் செயல்பட்டாலும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளவும் ரிப்போர்ட்களைப் பகிர்ந்துகொள்ளவும் இமெயில் பயன்படுத்துகிறோம்.
மெட்ரோ நகரங்களிலும் மெட்ரோ அல்லாத நகரங்களிலும் எங்கள் டிஜிட்டல் அணுகுமுறை சற்றே மாறுபட்டிருக்கும். உதாரணத்திற்கு கர்நாடகா அல்லது ஆந்திரப்பிரதேசத்தின் உட்புற பகுதிகளில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க வட்டார மொழியில் இருக்கும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: நிறுவனத்தின் பயணத்தில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களையும் கற்றலையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அர்ஜுன் ஆனந்த்: நாங்கள் பல்வேறு சவால்களை சந்தித்திருந்தாலும் திறம்பட எதிர்கொண்டிருக்கிறோம். நாங்கள் எந்த நிகழ்வுகளில் பங்கேற்றாலும் அதில் ஏதேனும் புதிய அம்சங்களைக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறோம்.
இதுபோன்ற தொடர் கற்றலே வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. வருங்காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எங்கள் அணுகுமுறையைத் தொடர்ந்து மேம்படுத்தி நோய் கண்டறியும் சேவைகளை வழங்குவோம். அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் வருவாயை இருமடங்காக அதிகப்படுத்த விரும்புகிறோம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா