12 ஆயிரம் ரூபாயுடன் தொடங்கி 200 கோடி ரூபாய் விற்றுமுதல் உட்புற வடிவமைப்பு நிறுவனம் நடத்தும் துஷார்!
2009-ம் ஆண்டு குருகிராமில் தஷார் மிட்டல் தொடங்கிய Studiokon Ventures நிறுவனம் 11 ஆண்டுகளில் 250 ஊழியர்களுடன் 200 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ள நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
துஷார் மிட்டல் 1982ம் ஆண்டு ராஜஸ்தானின் ருதாவல் பகுதியில் பிறந்தவர். உள்ளூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்தார். இவரது பெற்றோர் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தனர். உறவினர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கடன் வாங்கியிருந்தார்கள். அதைத் திருப்பியளிக்கமுடியாமல் தவித்தார்கள். கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள்.
குடும்ப வணிகத்தில் சேர்வதா அல்லதா மேற்படிப்பைத் தொடர்வதா என்கிற குழப்பம் தஷாருக்கு ஏற்பட்டது. குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு கடையில் வேலை செய்யத் தீர்மானித்தார்.
“மேற்படிப்பு படிக்கவேண்டும் என்கிற கனவு இருந்துகொண்டே இருந்தது. ஒரு திருமணத்திற்கு சென்றபோது உறவினர் ஒருவரை சந்தித்தேன். மேற்கொண்டு படிக்குமாறு என்னை ஊக்குவித்தார். படிப்பைத் தொடரவேண்டும் என்கிற வேட்கை என்னுள் இருந்ததால் பொறியியல் படிப்பை மேற்கொள்ள கோட்டா சென்றேன்,” என்று எஸ்எம்பிஸ்டோரி இடம் துஷார் தெரிவித்தார்.
கட்டிடக்கலை தொடர்புடைய நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்த 17 வயது துஷார் தனது படிப்புச் செலவுகளை தானே சமாளித்துக் கொண்டார். கட்டிடக்கலை நிறுவனத்தில் பணிபுரிந்தது உட்புற வடிவமைப்பு வணிகத்தில் அனுபவம் பெற உதவியது. பின்னாட்களில் இந்தப் பிரிவிலேயே சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கினார்.
துஷார் அவரது கிராமத்திலேயே பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிணை இன்றி கல்விக் கடன் பெற்ற முதல் நபர் ஆவார்.
“2001-ம் ஆண்டு காலகட்டத்தில் கடனுக்கு அனுமதி கிடைப்பது மிகவும் கடினம். அதிலும் என்னிடம் பிணை ஏதும் இல்லை. தொடர்ந்து மண்டல மேலாளரைத் தொடர்பு கொண்டு உதவியைப் பெற்றேன்,” என்றார்.
தொழில்முனைவு
துஷார் NICMAR-ல் கட்டுமான மேலாண்மையில் PGDM மற்றும் பிஈ (சிவில்) முடித்தார். அதன் பிறகு DLF நிறுவனத்தில் பணி கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டு பணியை விட்டு விலகி தனிப்பட்ட முறையில் செயல்படும் ஒப்பந்ததாரர் ஒருவருடன் இணைந்து பணியாற்றினார். அதன் பிறகே 2009-ம் ஆண்டு குருகிராமில் Studiokon Ventures (SV) நிறுவனத்தை நிறுவினார்.
துஷார் DLF நிறுவனத்தில் பணிபுரிந்த சமயத்தில் 12,000 ரூபாய் சேமித்திருந்தார். அந்தத் தொகையைக் கொண்டு SKV தொடங்கினார். அடுத்த 11 ஆண்டுகள் வெளியில் இருந்து நிதி ஏதும் சேகரிக்கவில்லை. 250 ஊழியர்களுடன் 200 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனமாக SKV நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
“முதலீட்டாளர்கள் யாரும் இல்லை. நிதி ஏதும் பெறவில்லை. சொந்த முதலீட்டுடனே நிறுவனத்தை நடத்தி வருகிறோம். அமேசான், கூகுள், ZS, பிரிட்டிஷ் கவுன்சில், அடிடாஸ், பெப்சிகோ, NTT, DLF, Tractebel போன்ற வாடிக்கையாளர்களின் 200-க்கும் மேற்பட்ட அலுவலகங்களுக்கு டர்ன்கீ இண்டீரியர் தீர்வுகள் உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
ஆரம்பகால தடைகள்
கட்டுமானம் மற்றும் உட்புற வடிவமைப்புத் துறை அமைப்பு சாராத துறையாகவே உள்ளது. இதில் நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன்கூடிய குழுவை உருவாக்குவதில் துஷார் சிரமங்களை சந்தித்துள்ளார்.
“அனைத்து பதவிகளுக்கும் துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்ட சரியான தொழிலாளர்களைக் கண்டறிவது சவாலாக இருந்தது. இதற்கான தீர்வாக வர்த்தகத் தேவைகளுக்கேற்ப எங்களது குழுவிற்கு திறன் பயிற்சி அளித்து எங்கள் தொழிற்சாலையையும் அதற்கேற்ப அமைக்கத் தொடங்கினோம். அவரவர்களுக்கான பிரத்யேகமான பொறுப்பை ஒதுக்கி குழுவை அமைக்க இந்த முன்னெடுப்புகள் உதவியது,” என்றார்.
மனேசர் பகுதியில் உள்ள SKV நிறுவனத்தின் 80,000 சதுர அடி தொழிற்சாலையில் தரமான இண்டீரியர் பிராஜெக்டுகளுக்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்த செயல்முறைகள் உட்புற வடிவமைப்பிற்கான கட்டுமான தளத்தில் மேற்கொள்ளப்படும்போது தரமானதாக அமையாது என்பது துஷரின் கருத்து.
“இவை தொலைதூரப் பகுதிகளில் தயாரிக்கப்படுவதால் பல நன்மைகள் உண்டு. தரமான இண்டீரியர் சரியான நேரத்தில் டெலிவர் செய்யப்பட உதவும். அதேபோல் செலவும் குறையும்,” என்று விவரித்தார்.
SKV நிறுவனத்தை நிறுவிய பின்னர் துஷார் Emerson நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இந்நிறுவனம் ஃபார்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களுடன் SKV இணைந்து செயல்பட்ட முதல் நிறுவனம் இதுதான். இதிலுள்ள இதர பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இதுவே ஆரம்பப்புள்ளியாக அமைந்தது,” என்றார்.
2012-ம் ஆண்டு SKV நிறுவனம் மெல்ல வளர்ச்சியடைந்து வந்த காலகட்டம். அந்த சமயத்தில் ஏராளமான ஆர்டர்கள் இருந்தன. ஆனால் அவற்றை மேற்கொள்ளப் போதுமான நிதி இல்லாமல் போனது. பணப்புழக்கத்தை கவனமாக நிர்வகித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது கடினமாக இருந்தது. அதேசமயம் ஊழியர்களையும் சேவை வழங்குவோர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.
“இந்தக் கடினமான காலகட்டத்தைக் கடப்பதில் நாங்கள் தீவிரம் காட்டிய சமயத்தில் எங்களது பார்ட்னர்கள், வென்டார்கள் மற்றும் சப்ளையர்கள் உறுதுணையாக இருந்தார்கள். எங்கள் நிலையைப் புரிந்துகொண்டார்கள். நாங்கள் இவர்களுடன் பொறுப்புணர்வுடனும் வெளிப்படைத்தனமையுடனும் நடந்துகொண்டோம். இதனால் எங்களிடையே நட்புறவு உருவானது. பிராஜெக்ட் டெலிவரி, பண நெருக்கடி போன்றவற்றை சமாளிக்கவும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும் இந்த சுமுகமான உறவே உதவியது.
சவால்களை சந்திப்பதற்கு ஆயத்தமாதல்
2017-ம் ஆண்டு அதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. மிகப்பெரிய வாடிக்கையாளர்களின் பிராஜெக்டுகளை டெலிவர் செய்யவேண்டியிருந்தது. பல வாடிக்கையாளர்கள் சுழற்சி முறையில் வெவ்வேறு இடைவெளியில் பணத்தை செலுத்தினார்கள். அதேசமயம் SKV வளர்ச்சிப் பாதையிலும் பயணித்து வந்தது.
“நிதியை முறையாக நிர்வகிக்கவேண்டிய பிரச்சனை இருப்பினும் ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் நல்ல நிலையில் இருப்பதாகவே உணர்ந்தோம். சிறந்த முறையில் செயல்பட்டதால் அதிக ஒத்துழைப்பும் கிடைத்தது,” என்றார்.
இத்தனை ஆண்டுகளில் SKV இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து போட்டியை சந்தித்தது. இந்தப் போட்டியாளரளைக் காட்டிலும் முன்னணியில் திகழ்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளையும் அனுபவங்களையும் வழங்க இந்நிறுவனம் வளங்களிலும் உள்கட்டமைப்புகளிலும் முதலீடு செய்துள்ளது.
“வடிவமைப்பு மற்றும் சேவை பிரிவிற்கு பரந்த அனுபவம் கொண்ட குழுவை உருவாக்கி நவீன வடிவமைப்பு ஸ்டூடியோவை அமைத்தோம். தற்போதைக்கு வெகு சில நிறுவனங்களே இத்தகைய சேவைகளை வழங்குகின்றன. அவ்வப்போதைய போக்குகள், தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய சூழலில் உள்ளோம்,” என்றார் துஷர்.
வருங்காலத் திட்டம்
இந்தத் துறையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், செயல்முறைகள் ஏதும் இல்லை என்கிறார் துஷர். இதனால் வணிக செயல்முறைகளை சீரமைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க பிரத்யேக தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டியிருந்தது.
SKV உட்புற வடிவமைப்பு மற்றும் சேவை வழங்கும் நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஃபர்னிச்சர் வகைகள் போன்றவை இணைக்கப்பட்டது.
“விரைவில் சிறந்த தரத்துடன்கூடிய எங்களது சொந்த ஃபர்னிச்சர் வகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம்,” என்றார் துஷார்.
இன்றைய நவீன தலைமுறையினரின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருப்பதாலும் நன்கு வடிவமைக்கப்பட்ட பணியிடங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் உட்புற வடிவமைப்புத் துறையில் SKV தொழில்நுட்பம் சார்ந்த மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க விரும்புகிறது.
இருப்பினும் தற்போதைய கோவிட்-19 பரவல் சூழலில் இது எளிதல்ல. SKV நிறுவனத்தின் பணப்புழக்கம், பிராஜெக்ட்ஸ் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
“சிறப்பாக செயல்படும் நிறுவனங்களின் தரப்பில் இருந்தே அலுவலகங்களுக்கான உட்புற வடிவமைப்பிற்கான தேவை இருக்கும். பல்வேறு சிக்கல்களுக்கான தீர்வுகளை உருவாக்குவது தொடர்பாக பணியாற்றி வருகிறோம். வருங்காலத் தேவைகளை சிறப்பாகப் புரிந்துகொள்வதில் தற்போதைய நேரத்தை பயன்படுத்தி வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் போக்கு மேலும் அதிகரிக்கும் என்பதால் சிறப்பான வாய்ப்புகளை எதிர்நோக்கி உற்சாகமாக காத்திருக்கிறோம்,” என்றார் துஷார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா