தமிழ் மண் பற்றாளர்; ஊழலுக்கு என்றும் நோ: புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு பற்றி இதோ!
ஊழலுக்கு எப்போதும் 'நோ'.. கவனிக்க வைக்கும் இறையன்பு நியமனம்!
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவரின் நியமனம் பல்வேறு தரப்பிடமிருந்தும், மக்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. காரணம், இறையன்பு ஐஏஎஸ் அவரின் பண்புகள் தான்.
யார் இந்த இறையன்பு?
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு, சேலம் நகரில் 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி ஒரு நடுத்தரக் குடும்பத்தில் தனது பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார். தமிழ் மறுமலர்ச்சி தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் பிறந்ததால் அவருக்கு தமிழ்ப் பெயராக, இறையன்பு என்று வைக்கப்பட்டது.
சிறு வயதிலேயே மேடையில் பேசும் பயிற்சி தரப்பட்டதால் மாவட்டத்தில் நடக்கிற பேச்சுப் போட்டிகளிலெல்லாம் அவருக்கே அத்தனை பரிசுகளும் வந்து சேரும். அப்படி துளிர்விட்டதே அவரின் பேச்சு மற்றும் படிப்புத்திறமை. அவர், தமிழில் படித்ததால் தாய்மொழியில் பேசவும், எழுதவும் சிக்கலில்லாத திறனை வளர்த்துக்கொள்ள முடிந்தது.
கல்லூரிப் படிப்பை கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இறையன்பு தாவரவியல் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கல்லூரியை முடித்ததும் அரசின் வேளாண் துறையில் வேளாண் அலுவலராக ராயக்கோட்டையில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருக்கும் சிற்றூர்களுக்குச் செல்லும்போது வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டால்தான் ஓரளவு சமூகப் பங்களிப்பு நிகழும் என்பதை உணர்ந்தார். அப்போதுதான் குடிமைப் பணித் தேர்வு எழுத முடிவெடுத்தார்.
1987 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த இவர், இந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று ஐஏஎஸ் ஆகி பல இடங்களில் அதிகாரியாக பரிணமித்தார்.
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளில் நீண்ட அனுபவம் கொண்டவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக பார்க்கப்படும் நபர்களில் மிக முக்கியமானவர் இறையன்பு. இவர் ஒரு தீவிர படிப்பாளியும் கூட. குடிமைப் பணிக்குத் தேர்வானபோது 1980-களில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் தேர்ச்சி பெறாத நிலையை அவர் கண்டார். தகுதியும், திறமையும் இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதை உணர்ந்த அவர், பணியாற்றும் இடங்களில் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதைவிட, இவர் நல்ல ஒரு எழுத்தாளரும்கூட. தன்னம்பிக்கை நூல்கள், ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராக விரும்புவோருக்கான வழிகாட்டி நூல்கள் என இதுவரை 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். சிறந்த பேச்சாளரும் ஆன இறையன்பு, தமிழிலும், ஆங்கிலத்திலும் பல கூட்டங்களில், மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றி இருக்கிறார். இதயம் பேசுகிறது இதழில் ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’ என்ற தொடரை எழுதினார். அது பரவலாக ஏற்படுத்திய தாக்கம் அவரைச் சிந்திக்க வைத்தது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பதவி முதல் முதல்வர் செயலகத்தின் கூடுதல் செயலாளர் வரை தமிழக அரசில் இதுவரை 10க்கும் மேற்பட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வந்தவர். வழக்கமாக செயல்படும் மற்ற ஆட்சியாளர்களை விட சற்று வித்தியாசமானவர் இறையன்பு.
ஆம், இதுவரை எந்த ஊழலுக்கும் அவர் துணைபோனதில்லை. ஊழல் விவகாரத்தில் எப்போதும் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பார். இதுவரை இவர் மீது எந்த சர்ச்சையும் வந்தது இல்லை. இதன்காரணமாக என்னவோ, கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் ஓரம்கட்டப்பட்டு வந்தவர், இன்று ஸ்டாலின் முதல்வர் ஆனதும், தலைமைச் செயலாளர் பொறுப்பை பெற்று இருக்கிறார்.
தமிழ் மண்ணைச் சேர்ந்த தமிழகத்தைப் பற்றி அதிகம் அறிந்த நபர்களில் ஒருவர் இறையன்பு அவர்கள். இதனால் அவரின் நியமனம் இயல்பாகவே எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருக்கிறது.
இனி, தமிழகத்தில் பல முக்கிய முடிவுகளை இவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே, முதல்வர் ஸ்டாலின் எடுக்க இருக்கிறார். தற்போது தமிழகத்தை ஆட்டிப்படைத்து வரும், கொரோனா தொடங்கி தமிழகத்தில் பல முக்கிய நிர்வாக முடிவுகளை இவர் சிறப்பாகக் கையாள்வர் என விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
ஏற்கனவே இவரின் நியமன அறிவிப்புக்கு முன்னதாக ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் போன்ற நேர்மையான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டது பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தாம் எழுதிய 'வையத் தலைமை கொள்' என்ற நூலை பரிசளித்து அசத்தினார் இறையன்பு அவர்கள்.
வாழ்த்துக்கள் சார்!