ராணுவ வீரர்களை காக்க ’அயர்ன் மேன்’ பாதுகாப்புக் கவசம் வடிவமைத்த இளைஞர்!
அயர்ன் மேன் கதாபாத்திரத்தால் கவரப்பட்ட வாரனாசியைச் சேர்ந்த ஷ்யாம், ராணுவ வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உலோகத்தால் ஆன கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
நாம் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு சூப்பர்ஹீரோவைக் கண்டு உந்துதல் பெற்றிருப்போம். நாம் மேலும் கடினமாக உழைத்து முன்னேற இவர்கள் தூண்டுதலாக அமைந்திருப்பார்கள்.
மார்வெல் கதாபாத்திரங்களான அவெஞ்சர்ஸ் மற்றும் அயர்ன் மேன் அனைத்து ரசிகர்களையும் தொடர்ந்து கவர்ந்து வரும் நிலையில் நம் நாட்டைப் பாதுகாக்கும் உண்மையான ’அயர்ன் மேன்’ ராணுவ வீரர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும்.
சமீபத்தில்கூட பாகிஸ்தான் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தாக்குதல்கள் நடந்தது. இந்திய ராணுவத்திற்கு படைத்தளவாடங்கள், கண்காணிப்பு சாதனங்கள், ஆளில்லா விமானம் (UAV) போன்றவை இருக்கும் நிலையில் இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார் ஷ்யாம் சௌராசியா.
வாரனாசியில் உள்ள அசோகா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரியில் பகுதி நேரமாக பணிபுரியும் இவர் ’அயர்ன் மேன்’ கதாப்பாத்திரத்தால் கவரப்பட்டு நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக ’அயர்ன் மே ஆடை’ முன்வடிவத்தை உருவாக்கிள்ளார். ஏஎன்ஐ உடனான உரையாடலில் ஷ்யாம் கூறும்போது,
“இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது தீவிரவாதிகள் மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் ஒரு உலோகக் கவசத்தை வடிவமைத்துள்ளேன். தற்போது உருவாக்கியுள்ள இந்தக் கவசம் ஒரு முன்வடிவம் மட்டுமே. போர்க்களத்தில் இது நிச்சயம் ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருக்கும்,” என்றார்.
’Jugaad’ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கவசம் கியர்கள், மோட்டார்கள், மொபைல் இணைப்பு, சென்சார் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. எதிரிகள் பின்புறம் இருந்து தாக்க முற்பட்டால் சென்சார் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
எதிரிகளுடனான தாக்குதலின்போது இந்திய ராணுவ வீரர்கள் சந்திக்கும் ஆபத்துகளை இது நிச்சயம் குறைக்கும் என ஷ்யாம் நம்புகிறார்.
”பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இத்தகைய மாதிரிகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) போன்ற அரசு அமைப்புகளும் இது போன்ற வடிவமைப்பை உருவாக்குவதில் தீவிரம் காட்டவேண்டும். ராணுவ வீர்ர்களின் உயிர் விலைமதிப்பற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் இதர அமைப்புகளும் இதில் ஆர்வம் காட்டவேண்டும் என்பதற்காகவே நான் இத்தகைய முயற்சியை எடுத்துள்ளேன்,” என்று ஷ்யாம் தெரிவித்ததாக என்டிடிவி குறிப்பிடுகிறது.
அயர்ன் மேன் கவசம் நம் ராணுவ வீரர்களை பாதுகாப்பதில் நிச்சயம் உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஷ்யாம் இதை முழுவீச்சில் உருவாக்க நிதியுதவி தேவைப்படும் என்கிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA