இணையத்தை கலக்கும் ’விமானத்தில் டாக்டர்’ மீம்கள்!
இணையத்தில் வலம் வரும், விமானத்தில் டாக்டர் இருக்கிறாரா? எனும் கேள்வியை அடிப்படையாக கொண்ட மீம்கள், நகைச்சுவை மிக்கதாக அமைந்திருப்பதோடு, பணி வாழ்க்கை தேர்வு தொடர்பான பெற்றோர் எதிர்பார்ப்புகளையும் மென்மையான நையாண்டி செய்வதாக அமைந்துள்ளன.
நீங்கள் தேர்வு செய்த பணி வாழ்க்கையில் உங்கள் பெற்றோருக்கு அதிருப்தி இருப்பதாக நினைக்கிறீர்களா? நீங்கள் வழக்கறிஞராகவோ, பத்திரிகையாளராகவோ ஜொலித்துக் கொண்டிருந்தாலும், பெற்றோருக்கு நீங்கள் டாக்டராகவில்லை என்ற குறை இருப்பதாக கருதுகிறீர்களா? எனில், உங்கள் பங்கிற்கு ஒரு விமானத்தில் டாக்டர் இருக்கிறாரா? எனும் மீமை உருவாக்கி உலாவ விடுங்கள். ஏனெனில் இணையத்தில் பெரும்பாலானோர் இதை தான் செய்து கொண்டிருக்கின்றனர்.
நகைச்சுவை மிளிரும் இந்த மீம்கள் உற்சாகம் அளிப்பதோடு, பணி வாழ்க்கை தேர்வு தொடர்பான பெற்றோர் மற்றும் இளம் தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளன. எனவே இவை ரசிக்க வைப்பதோடு, சமூக யதார்த்தம் தொடர்பாக சிந்திக்கவும் வைக்கின்றன.
அதென்ன விமானத்தில் டாக்டர் இருக்கிறாரா, மீம்?
இந்த கேள்வி தான் மீமின் அடிப்படையாக அமைந்து, பலவிதமான பதில்களை வரவைத்து, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துக் கொண்டிருக்கின்றன. விமான பயணங்களின் போது, யாரேனும் பயணிக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டால், விமான பணிப்பெண், விமானத்தில் டாக்டர் இருக்கிறாரா? என கேட்பார் அல்லவா? பயணிகளில் டாக்டர் இருந்தால், மருத்துவ உதவி அளிக்க முன்வருவார்.
இந்த சூழ்நிலையை கற்பனையாக உருவாக்கிக் கொண்டு தாங்கள் விரும்பிய பதில் அளிப்பது தான், விமானத்தில் டாக்டர் இருக்கிறாரா? மீமாக உருவானது. விமான பணிப்பெண் இந்த கேள்வியை கேட்டதை அடுத்து, பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான உரையாடல் வடிவில் மீம் அமைந்திருந்தது.
இது நீயாக தான் இருக்க வேண்டும் என அப்பா கேலியாக கூறுவது போலவும், அதற்கு மகன் / மகள், இது அவசர உதவி தேவைப்படும் நிலை என்று பதில் கூறுவதாகவும், உடனே அப்பா, மகன் வேலையின் தன்மையை சுட்டிக்காட்டி, அது இந்த சூழலில் பயனற்றது என்று நையாண்டி செய்வது போலவும் பெரும்பாலான உரையாடல்கள் அமைந்துள்ளன.
உதாரணமாக இந்த உரையாடலை பார்க்கலாம்:
லாரா கவோ என்பவர் இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
விமானத்தில் டாக்டர் யாரேனும் இருக்கிறீர்களா? என விமான பணிப்பெண் கேட்கிறார்.
அப்பா: (கையால் இடித்தபடி) : அது நீயாக தான் இருக்க வேண்டும்.
நான்: இப்போது வேண்டாமே அப்பா.
அப்பா: அவர்கள் ஒன்றும் திட்ட மேலாளர் உதவியை கேட்கவில்லை பார்.
நான்: அப்பா, இது மருத்துவ உதவி தேவைப்படும் அவசர நிலை.
அப்பா: ஃபாலோ அப் மீட்டிங் ஏதேனும் தேவைப்படுமா? என்று போய் பார்.
எல்லா மீம்களும் இதே டெம்பளேட்டில் அமைந்திருக்கின்றன. விமான பணிப்பெண் டாக்டர் உதவியைக் கேட்பதாகவும், அப்பா அல்லது அம்மா, உடனே தங்கள் பிள்ளையை பார்த்து நீ தான் அது என கேலியாக கூறுவதாகவும், அதைக்கேட்டு அவர்கள் சங்கடத்தில் நெளிய தொடர்ந்து அவர்கள் வேலையின் தன்மையை நையாண்டி செய்வதாகவும் இந்த மீம்கள் அமைந்திருக்கின்றன.
யூடியூப் வல்லுனரில் துவங்கி, பத்திரிகையாளர், வழக்கறிஞர், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர் என பலவிதமான துறைகளை சேர்ந்தவர்களை பெற்றோர் நையாண்டி செய்வது போல விதவிதமாக மீம்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பத்திரிகையாளர் மகனை நெளிய வைக்கும் அப்பா, சரி போய், இரண்டாவது சோர்ஸ் உதவியாக இருக்குமா? கேட்டுப்பார் என்கிறார். வழக்கறிஞர் மகனிடம், இந்தச் சூழலில் எல்லாம் வாய்தா வாங்க முடியாது என்கிறார். நிதி வல்லுனரிடம், நிதி கணிப்பு தேவைப்படுமா? கேட்டுப்பார் என்கிறார். இப்படியாக மீம்கள் நீள்கின்றன.
இந்த மீம்கள் எல்லாமே, பிள்ளைகள் தொழில் வாழ்க்கை தொடர்பாக பெற்றோர்க்கு இருக்கும் மனக்குறையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்றாலும், இந்திய சூழலுக்கு இன்னும் கச்சிதமாக பொருந்தும்.
எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளை டாக்டராக வேண்டும் என எதிர்பார்ப்பதை அழகாக உணர்த்தும் இந்த மீம்களில் அப்பா (அம்மா) பிரதானமாக வந்தாலும், இந்த மீம்களை பகிர்பவர்கள் மகன்களும், மகள்களும் தான். இதன் மூலம் இளைய தலைமுறை பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மற்றும் சமூக நெருக்கடியை அழகாக பகடி செய்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
இளம் தலைமுறை தங்கள் தொழில் வாழ்க்கை தேர்வை தாங்களே நையாண்டி செய்து கொள்வதாகவும் கூட இந்த மீம்களை கருதலாம்.
இணையத்தில் டிவிட்டர் மூலம் அதிகம் பகிரப்படும் இந்த மீம்கள் மட்டும் அல்ல அவற்றின் தோற்றம் பற்றிய கதையும் சுவாரஸ்யமாக இருக்கிறது.]
கடந்த 2018ம் ஆண்டில், Bob Vulfov எனும் டிவிட்டர் பயனாளி, விமான பயணத்தின் போது, அம்மா தன்னை டாக்டராகாமல் கோட்டைவிட்டதற்காக நையாண்டி செய்ததாக ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.
விமான பணிப்பெண்: விமானத்தில் டாக்டர் இருக்கிறீர்களா?
அம்மா: மகனே, எங்களை ஏமாற்றாமல் ஒழுங்காக படித்திருந்தால், இது நீயாக இருந்திருக்கலாம்.
அதன் பிறகு, இந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி , தி டேட் எனும் டிவிட்டர் பயனாளி இதே பாணியில் ஒரு மீமை உருவாக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். யூடியூப் சேனல் நடத்தும் அவரிடம், மகனே பார் அவர்கள் யூடியூபர் உதவியை கேட்கவில்லை என அப்பா கூறுவதாக இந்த மீம் அமைந்திருந்தது.
இந்த மீம் பரவலாக பகிரப்பட்டு வரவேற்பை பெறவே மேலும் பலர் இதே பாணியில் டாக்டர் இருக்கிறாரா மீமை உருவாக்கத் துவங்கிவிட்டனர். லாரா கவோ என்பவரின் வெளியிட்ட மீம் தான் இதற்கு துவக்கப்புள்ளி என்று வேறு கட்டுரை தெரிவிக்கிறது.
ஆரம்பம் எதுவோ, இந்த மீம்கள் பணி வாழ்க்கை தேர்வு தொடர்பான சமூக எண்ணங்களை அழகாக படம் பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளன.
-