தன் காரை விற்று ஜெய்பூரில் கவுரவ் தொடங்கிய ஆடம்பர வாட்ச் நிறுவனம்!
நண்பர்களிடம் கடன் வாங்கி கௌரவ் மேத்தா தொடங்கிய வாட்ச் நிறுவனம் இன்று ஓராண்டில் 1,700 ஆடம்பர கைக்கடிகாரங்களை விற்பனை செய்துள்ளது.
கௌரவ் மேத்தா யூகே-வில் பேரிடர் மேலாண்மை பிரிவில் முதுகலைப் படிப்பை முடித்தார். பின்னர் காப்பீட்டு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்தப் பணியில் அவர் திருப்தியடையவில்லை. அவருக்கு கைக்கடிகாரம் மற்றும் நாணயங்கள் மீது ஆர்வம் அதிகம். சிறு வயது முதலே வாட்ச் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் நாணயங்களையும் விரும்பி சேகரிப்பார். எனவே அந்தப் பிரிவில் செயல்பட விரும்பினார்.
கௌரவ் தனக்கு ஆர்வமுள்ள இரு பிரிவுகளையும் ஒன்றிணைத்து செயல்பட விரும்பினார். 2013-ம் ஆண்டு ‘ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனி’ தொடங்கினார். இந்த ஆடம்பர கைக்கடிகார பிராண்டின் தலைமையகம் ஜெய்ப்பூரில் உள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் கைக்கடிகாரங்களில் ஆடம்பரமும் பாரம்பரியமும் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்டு நாணயங்களைக் கொண்டு இந்த கைக்கடிகாரங்கள் வடிவமைக்கப்படுகிறது.
தொடக்கம்
கௌரவின் அப்பா பட்டயக் கணக்காளர். அவரது குடும்பத்தினர் யாருக்கும் உற்பத்தித் துறையில் செயல்பட்ட அனுபவம் இல்லை. இருப்பினும் கௌரவ் தனக்கு விருப்பமான பகுதியில் செயல்படுவதில் உறுதியாக இருந்தார்.
“நான் சுயமாகவே கற்றுக்கொண்டேன். என்னுடைய கைக்கடிகாரங்களில் உள்ள வெவ்வேறு பாகங்களை ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்,” என்றார்.
கௌரவ் இந்த வணிகத்தைத் துவங்கிய அனுபவம் குறித்து கூறும்போது, “இந்த வணிகம் முழுமையாக என்னுடைய ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் வணிக ரீதியாக அதிகம் திட்டமிடவில்லை. ஏற்கெனவே பலர் செயல்படும் சந்தையில் செயல்படத் தொடங்கும்போது வரக்கூடிய அபாயங்களை முறையாகக் கணிக்கவில்லை,” என்றார்.
கௌரவ் தேர்வு செய்த வணிகத்தை அவரது அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை. நிதி உதவியும் வழங்கவில்லை.
“என்னுடைய காரை விற்று 30 லட்ச ரூபாய் திரட்டினேன். என்னுடைய நண்பர்களிடமிருந்து கடன் வாங்கினேன். இந்தத் தொகையைக் கொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன்,” என்றார்.
அதன் பிறகு கௌரவ் பெங்களூருவில் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தார். இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூருவில் தொழிற்சாலையை அமைத்தது ஆடம்பர கைக்கடிகாரங்களை தயாரிக்கும் செயல்முறையை எளிதாக்கியது. தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வாங்கப்படுகிறது.
வாட்ச்களின் மூவ்மெண்ட் பாகம் ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து வாங்கப்படுகிறது. ஹாங்காங்கில் இருந்து கிரிஸ்டல் பெறப்படுகிறது. கைக்கடிகாரத்தின் ஸ்ட்ராப், பிரேஸ்லெட், டயல், கேஸ், க்ரௌன் போன்றவை உள்ளூரில் வாங்கப்படுகிறது அல்லது இந்நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படுகிறது.
சவால்கள்
கௌரவ் முதல் தலைமுறை தொழில்முனைவர் என்பதால் பல்வேறு சவால்களை சந்தித்தார். மூலதனம் அதிகம் தேவைப்படும் துறை என்பதால் நடப்பு மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வது சவாலாக இருந்தது. பணிக்குப் பொருத்தமான நபர்களைக் கண்டறிந்து வலுவான நெட்வொர்க்கை உருவாக்குவது அடுத்த சவாலாக இருந்தது.
இந்தியாவில் ஆடம்பர வாட்ச் பிரிவு சிறப்பு கவனம் பெறவில்லை. இதனால் இந்தத் துறையில் செயல்பாடுகளைத் தொடங்குவது அதற்கடுத்த சவாலாக இருந்தது.
“நான் உற்பத்தித் துறையில் செயல்படத் தொடங்கினேன். வர்த்தகத் துறையுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் துறையில் மூலதனம் அதிகம் தேவைப்படும். இருப்பினும் இந்தியாவில் தயாரிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார்.
இந்த சவால்களை சமாளிப்பதில் அவர் மேற்கொண்ட தீவிர ஆய்வுகளும் பயணங்களும் உதவியதாக கௌரவ் தெரிவிக்கிறார். இதன் மூலம் அவரால் சந்தையை சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிந்தது. தயாரிப்பிற்கான சிறந்த இயந்திரங்களை வாங்க முடிந்தது. வணிகத்தின் பல்வேறு செயல்பாடுகளை முறையாக நிர்வகிக்கக்கூடிய பொறுப்புமிக்க நபரைக் கண்டறிய முடிந்தது.
கைக்கடிகாரங்கள் தயாரான பிறகு Tata Cliq Luxury என்கிற மின்வணிக தளத்தில் கௌரவ் விற்பனையைத் தொடங்கினார். அதன் பின்னர் டிஜிட்டல் மார்க்கெடிங் மூலம் சிறப்பாக விற்பனை செய்ய முடிந்ததாகவும் ஆரம்பகட்டத்தில் அதிகளவு விற்பனை ஃபேஸ்புக் வாயிலாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இன்று கௌரவ் தான் எடுத்த முடிவை நினைத்துப் பெருமை கொள்கிறார்.
“2018-19 ஆண்டுகள் 1,200 கைக்கடிகாரங்கள் விற்பனை செய்தோம். 2019-20 ஆண்டுகளில் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்தது. இந்தக் காலகட்டத்தில் சுமார் 1,700 கைக்கடிகாரங்கள் வரை விற்பனை செய்துள்ளோம்,” என்றார்.
இந்த வணிகத்தில் சில்லறை வர்த்தகம் இன்றியமையாதது என்கிறார் கௌரவ். டெல்லியின் செலக்ட் சிட்டி வாக் ஷாப்பிங் மையத்தில் இந்நிறுவனத்தின் சில்லறை வர்த்தக ஸ்டோர் ஒன்று செயல்படுகிறது. ‘தி ஓபராய்’ ஆடம்பர ஹோட்டலின் பிராண்டான Tijori உட்பட எட்டு விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு தாஜ் ஹோட்டல்ஸ் பிராண்டான Khazana மூலமாகவும் சில்லறை விற்பனை செய்யப்பட்டது.
வளர்ந்து வரும் சந்தை
இந்திய கைக்கடிகாரத் துறை வளர்ந்து வருகிறது என்கிறார் கௌரவ். இதன் சந்தை மதிப்பு 10,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட கைக்கடிகாரங்களை வாடிக்கையாளர்கள் விரும்பும் போக்கினை கௌரவ் கவனித்துள்ளார்.
“வாட்ச்களின் ஸ்டைல் எதுவாக இருப்பினும் அதன் அளவு தொடர்ந்து மாறி வருகிறது. இந்த போக்கினை நான் கவனித்தேன். நாங்கள் 39 மி.மீ அளவு கொண்ட கைக்கடிகாரங்களை விற்பனை செய்யத் தொடங்கினோம். ஒன்றரை ஆண்டுகள் விற்பனை சிறப்பாக இருந்தது. அதன் பிறகு பெரிய அளவில் இருக்கும் கைக்கடிகாரங்களை வாடிக்கையாளர்கள் அதிகம் கேட்கத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து 43 மி.மீ அளவில் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தினோம். பின்னர் அதைக் காட்டிலும் பெரிய அளவுகளுக்கான தேவை எழுந்தது,” என்றார்.
இந்தப் போக்கானது சுழற்சி முறையில் இருப்பதாக கௌரவ் தெரிவிக்கிறார். மக்கள் மீண்டும் சிறிய அளவில் இருக்கும் கைக்கடிகாரங்களைக் கேட்கின்றனர். இந்த பிராண்ட் விரைவில் இந்தத் தேவைகளை பூர்த்திசெய்ய உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறித்து கௌரவ் கூறும்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது ஆரம்பத்தில் பதட்டமாகவே இருந்ததாவும் விரைவிலேயே வணிக செயல்பாடுகள் மந்தநிலைக்குச் செல்லாமல் தடுக்க உதவும் உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.
“ஊரடங்கு பிறப்பிக்கத் தவறியிருந்தால் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே இது தவிர்க்கமுடியாதது. இதை சமாளிக்க எங்கள் உற்பத்தி செலவுகளைக் குறைத்துக் கொண்டுள்ளோம். அத்துடன் கைக்கடிகாரங்களின் பாகங்களை தயாரித்து விற்பனை செய்வது தொடர்பாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சில நிறுவனங்களை அணுகவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா