அமேசான் சி.இ.ஓ. பதவியில் இருந்து விலக ஜெப் பெசோஸ் முடிவு!
அமேசான் துவங்கப்பட்ட 1995 ம் ஆண்டு முதல் அதன் சி.இ.ஓ ஆக பதவி வகித்து வரும் நிறுவனர் ஜெப் பெசோஸ் இந்த ஆண்டு இறுதியில் இந்த பொறுப்பில் இருந்து விலகி கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
இ-காமர்ஸ் சாம்பிராஜ்யமான அமேசான் நிறுவனத்தை நிறுவிய ஜெப் பெசோஸ் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகி, செயல் தலைவர் பொறுப்பை ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அமேசான் வெப் சர்வீசஸ் தலைவரான ஆண்டி ஜேஸி (Andy Jassy) சி.இ.ஓவாக பொறுப்பேற்க உள்ளார்.
“அமேசான் சி.இ.ஓ ஆக இருப்பது, மிகப்பெரிய பொறுப்பு மற்று அதிக நேரத்தை கோருவது. இது போன்ற பொறுப்பில் இருக்கும் போது வேறு எவற்றிலும் கவனம் செலுத்துவது கடினம். செயல் தலைவராக, அமேசான் முக்கிய முயற்சிகளில் நான் தொடர்பு கொண்டிருக்கும் அதே நேரத்தில் டே 1 பண்ட், தி பெசோஸ் எர்த் பண்ட், புளு ஆரிஜன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றில் கவனம், செலுத்த தேவையான ஆற்றலை பெற்றிருப்பேன். இந்த அளவு ஆற்றலுடன் நான் இருந்ததில்லை, நிச்சயம் ஓய்வு பெறப்போவதில்லை. இந்த அமைப்புகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளேன்,” என்று அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இது தொடர்பான வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமேசானில் நீண்ட காலமாக பணியாற்றும் Andy Jassy இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சி.இ.ஓ ஆக பொறுப்பேற்பார்.
சி.இ.ஓ பதவியில் இருந்து விலக பெசோஸ் முடிவு செய்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. 1994 ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தை அவர் துவக்கினார். ஆன்லைன் புத்தகக் கடையில் இருந்து மிகப்பெரிய இ-காமர்ஸ் ஜாம்பவனாக நிறுவனம் வளர்ந்திருக்கிறது.
“செயல் தலைவராக, புதிய சேவைகள் மற்றும் புதிய முயற்சிகளில் எனது கவனத்தையும், ஆற்றலையுல் செலுத்துவேன். ஆண்டி நிறுவனத்திற்குள் நன்கறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக இருப்பவர். அவர் மிகச்சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர்,” என பேசோஸ் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தில் நிறுவனர்கள் விலகிக் கொண்டு, நிறுவனர் அல்லாத நபர்கள் சி.இ.ஒ பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் அமேசானும் சேர்ந்துள்ளது.
நிறுவன எதிர்காலம் பற்றி பெசோஸ் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.
“எதிர்காலத்திற்கு இதைவிட சிறந்த நிலையில் இருக்க முடியாது. உலகம் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் நேரத்தில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய சேவைகள் காத்திருக்கின்றன,என்று அவர் கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர் சிம்மன்