அடுப்பூதும் பெண்களை சிறு, குறு தொழில் முனைவராக்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் உஷா உரான்!
சிறுகிராமத்தில் பிறந்து அடுப்பூதியே காலந்தள்ளிய உஷா உரான், பருவநிலைமாற்றம் குறித்த நிகழ்ச்சியில் கலந்த பின் அடுப்பிலிருந்து வெளியேறும் புகை சூழலுக்கும், உடல்நலத்துக்கும் விளைவிக்கும் தீங்கினை உணர்ந்து சுத்தமான சமையலை மேற்கொள்ள, பெண்களுக்கு வருமானத்துக்கு வழிவகைச் செய்து வாழ்க்கையை மாற்றி வருகிறார்
சிறு கிராமத்தில் பிறந்து நான்கு சுவருக்குள் வாழ்க்கையை அடக்கி அடுப்பூதியே காலந்தள்ளிய உஷா உரான், பருவநிலைமாற்றம் குறித்த நிகழ்ச்சியில் கலந்த பின் அவருள் மாற்றம் ஏற்பட்டு, அதை சமூகமும் பின்பற்ற வலியுறுத்தி வருகிறார்.
ஆம், அடுப்பிலிருந்து வெளியேறும் புகை சூழலுக்கும், உடல்நலத்துக்கும் விளைவிக்கும் தீங்கினை உணர்ந்து சுத்தமான சமையலை மேற்கொள்ள, பெண்களுக்கு வருமானத்துக்கு வழிவகைச் செய்து வாழ்க்கையை மாற்றி வருகிறார்.
நெடுங்காலமாக விறகைப் பயன்படுத்தி பெண்கள் அடுப்பு ஊதி, சமையல் செய்வது சிரமமாக மட்டுமே கருதப்பட்ட நிலையில், அடுப்பிலிருந்து வெளியேறும் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் கண்டுக் கொள்ளப்படாமலும், பெரிதாக பார்க்க படாமலுமே இருந்து வந்தது.
விறகு அடுப்பின் புகையை சுவாசிக்க நேரும்போது, மூச்சுக்குழாய் வழியாக நச்சு கலந்த காற்று நுரையீரலைச் சென்றடைகிறது. நாளடைவில் இது மூச்சுக்குழாயைப் பாதிக்கிறது.
சிலிண்டர்களின் வருகையால் பல சமையலறைகளில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்றும் சில பகுதிகளிலும், கிராமங்களிலும் இந்நிலை நீடித்தே வருகிறது. அது போன்றதொரு, கிராமத்தில் பிறந்து நான்கு சுவருக்குள் வாழ்க்கையை அடக்கி அடுப்பூதியே காலந்தள்ளியவர் உஷா உரான்.
பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், அடுப்பிலிருந்து வெளியேறும் புகை சூழலுக்கும் எத்தகைய தீங்கினை ஏற்படுத்துகிறது என்பதனை உணர்ந்து சுத்தமான சமையலை பெண்கள் மேற்கொள்ள விழிப்புணர்வு செய்து வருகிறார்.
சிலிண்டர்களின் விலையே பெண்களை விறகு அடுப்பு உபயோகிக்க செய்கிறது என்பதால், முதலில் அந்நிலையை மாற்றி பெண்களை வருவாய் ஈட்ட வழி செய்து பின், அடுப்பூதுவதை நிறுத்தி வருகிறார். இதுவரை அவரது பகுதியில் 4 பஞ்சாயத்தை உள்ளடக்கிய 347 பெண்களை சுத்தமான சமையல் முறைக்கு மாற்றியுள்ள உஷாவின் செயல்பாடுகள், கவனித்து பாராட்டத்தக்கது மட்டுமல்ல, அவரை பின்பற்றி நடப்பதற்கும் ஊக்குவிக்கிறது.
ஜார்க்கண்டின் லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள காக்பர்தா கிராமத்தைச் சேர்ந்த உஷா ஓரான், குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி அயலாரிடமும் பேசிடாத பெண்ணாக இருந்துள்ளார். பருவநிலைமாற்றம் குறித்த நிகழ்ச்சியில் கலந்த பின் அவருள் மாற்றம் ஏற்பட்டு, அதை சமூகமும் பின்பற்ற வலியுறுத்தி வருகிறார். இல்லத்தரசியாக இருந்து பின் அடித்தள மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வழிகாட்டியாக மாறியது வரையிலான அவரது பயணத்தை உஷா பகிரத் தொடங்கினார்..
"அடிப்படைக் கல்வியைப் பெற்றிருந்தாலும், என் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் மட்டுமே இருந்தது. எனது மூன்று மகன்களை கவனித்துக் கொண்டும், வீட்டு வேலைகளைச் செய்வதிலும் நாட்கள் கழிந்தோடின. 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜார்க்கண்ட் மாநில வாழ்வாதார மேம்பாட்டு சங்கமும் 'ஹோப்' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பருவநிலை மாற்றம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.
முதன்முறையாக, மேடையில் நின்று என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. எல்லோர் முன்னிலையிலும் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனென்றால், என் குடும்பத்தைத் தாண்டி மற்றவர்களிடம் பேசுவதற்கு தைரியம் எப்போதும் இருந்ததில்லை.
கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்களைப் போலவே, நானும் விறகு அடுப்பிலே சமைத்து வந்தேன். எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகம் மற்றும் விறகு அடுப்பில் சமைப்பதற்கு தேவையான எரிப்பொருள்கள் எளிதில் கிடைக்கும் என்பதால் அதையே பயன்படுத்தினேன். பருவநிலை மாற்றம் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் தான் பயோமாஸின் தொடர்ச்சியான பயன்பாடு பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்தேன்.
இந்தப் பிரச்சினை முக்கியமானது என்பதை உணர்ந்தேன். எல்பிஜி போன்ற தூய்மையான எரிபொருளுக்கு பெண்கள் ஏன் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்காக, தொண்டு நிறுவனம் ஒன்று மாவட்டத்தில் உள்ள வீடுகளின் எரிபொருள் பயன்பாட்டை கணக்கீடும் கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதில் நானும் பங்கெடுத்து கணக்கீட்டேன்.
சர்வதேச மேம்பாட்டுக்காக 'அசார்' மற்றும் 'ஹோப்' ஆகிய இரு தொண்டு நிறுவனங்களும் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி'யின் நிதியுதவி பெற்று செயல்படுத்திய 'கிளீனர் ஏர் பெட்டர் ஹெல்த்' எனும் திட்டத்தில் 'பர்தானா' (ஓரான் மொழியில் 'முன்னோக்கி நகர்தல்' என்று பொருள்) திதியாக பணியாற்றத் தொடங்கினேன்.
கிராமத்தில் உள்ள பெண்களிடம் பேசுகையில் எல்பிஜி சிலிண்டர் வாங்க முடியாததால் அவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். பெண்கள் அதிகம் சம்பாதித்தால், குடும்ப உறுப்பினர்களை சமதானம் செய்து சுத்தமான சமையலுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் மாதாந்திர செலவுகளில் சிலிண்டர் வாங்குதற்கு பணத்தை ஒதுக்க முடியும் என்று எண்ணினேன்.
அதன்பின், என்னைப் போன்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்களின், அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதே நோக்கமாக்கினேன். எளிய கருவிகளைப் பயன்படுத்தி எனது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினேன். என்னுடைய செயல்பாடுகளின் காரணமாக, ஜார்க்கண்ட் மாநில வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட தொகுதியின் தலைவராக நியமிக்கப்பட்டேன்.
மக்களின் வாழ்வாதார விருப்பங்களைப் பற்றி விவாதிக்க கூட்டங்களை நடத்தினோம். பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் அரசின் திட்டங்களில் பெண்களை பயன்பெற செய்தேன். கால்நடை வளர்ப்பு போன்ற சிறு தொழில்களை பெண்கள் தொடங்க அவர்களுக்கு உதவினேன்.
கடந்தாண்டு ஜூன் மாதம் பன்றி வளர்ப்பில் ஈடுபட இரு பெண்களுக்குக் கடன் உதவி பெற்று தந்தோம். அவர்கள் இரண்டு பன்றிக்குட்டிகளை வாங்கி, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு தங்குமிடம் கட்டித் தொழிலை தொடங்கினர். பன்றி வளர்ப்பில் கிடைத்த வருமானத்தில், ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கி, விறகு அடுப்பிலிருந்து மாறிவிட்டனர். ராம்பூர், திக்ரா, பாகா மற்றும் பட்கிஜ்ரி ஆகிய நான்கு பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 374 பெண்களை கேஸ் அடுப்புக்கு மாற்றியுள்ளேன். அவர்களுடன் தொடர்ந்து கண்கானித்து அவர்கள் சுத்தமான சமையல் முறையில் ஈடுப்படுகிறார்களா என்று கவனித்து வருகிறேன்.
நானும் முற்றிலும் கேஸ் அடுப்புக்கு மாறிவிட்டேன். ஒவ்வொரு பெண்ணும் சுத்தமான காற்றை சுவாசிப்பதோடு, விரைவில் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாக இருப்பர் என்று நம்புகிறேன்," என்று மனநிறைவுடன் கூறிமுடித்தார்.
துபாய் COP28 மாநாட்டில் கோமியம், வேப்பிலையின் மகிமையை பேசி அசத்திய இரு பெண் விவசாயிகள்!