துபாய் COP28 மாநாட்டில் கோமியம், வேப்பிலையின் மகிமையை பேசி அசத்திய இரு பெண் விவசாயிகள்!
இதுவரை தனது சொந்த ஊரை கூட விட்டு வெளியே சென்றிராத குஜராத்தை சேர்ந்த இரு பெண் விவசாயிகள், துபாயில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அவர்கள் ஆற்றிய பங்கு என்ன?
உலகெங்கும் உள்ள நாடுகளுக்குப் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் அதன் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், COP28 எனும் பருவநிலை மாற்றம் குறித்த 28-வது உச்சி மாநாடு துபாயில் இரு வாரங்களாக நடைபெற்று கடந்த 12ம் தேதி நிறைவடைந்தது. பூமியின் வெப்பநிலை 2050ம் ஆண்டுக்குள் 1.5டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் உயராமல் தடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
புவியின் வெப்பநிலை அதிகரிப்பதை தடுப்பதற்காக உலகத் தலைவர்களே ஒன்றுகூடி இருக்கிறார்கள் என்றால் அதன் தீவிரத்தை உணர்ந்தே ஆக வேண்டும். ஆனால், இப்பெண்டிர் இருவரும் அதனை நன்கு உணர்ந்துள்ளனர்.
ஆம், இதுவரை தனது சொந்த ஊரை விட்டு வெளியே சென்றிராத குஜராத்தை சேர்ந்த இரு பெண் விவசாயிகள், துபாய் மாநாட்டில் பங்கேற்று, உலக மேடையில் அவர்கள் கண்டறிந்த எளியத் தீர்வினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் நாகனாமோத்தைச் சேர்ந்த சங்கீதாபென் ரத்தோட் மற்றும் சிமேஜை கிராமத்தைச் சேர்ந்த ஜசுமதிபென் ஜெதாபாய் பர்மர் ஆகிய இரு பெண் விவசாயிகளும், பருவநிலை மாற்றத்தை கட்டுபடுத்தும் வகையில், வேப்பிலை மற்றும் மாட்டு கோமியத்தை பயன்படுத்தி பாரம்பரியமான உரம் மற்றும் பூச்சிக் கொல்லியினை தயாரித்துள்ளனர்.
சில ஆண்டுகளாக அவர்கள் பின்பற்றி வரும் பழக்கத்தின் மூலம், அவர்களது பயிர்கள் சேதமடையவதிலிருந்து தடுத்ததுடன், இப்போது இந்தியா முழுவதும் உள்ள பெண் விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரசாயன உரங்களுக்கு நிலையான மாற்றாக உள்ளது.
"பருவநிலை மாற்றத்தால் பெரும் இழப்புகளைச் சந்தித்த பிறகே அதன் காரணகாரியங்கள் பற்றியும் அதற்கான தீர்வினையும் தேட ஆரம்பித்தேன். 2019ம் ஆண்டு நிலத்தில் பயிரிட்ட கோதுமை பயிர்களை பூச்சித் தாக்கி, மொத்த பயிரும் பாழாகியது. ரூ.1.5 லட்சத்துக்கும் மேலான பயிர்கள் பூச்சிகள் இரையாகின. பிரச்னையை உற்றுநோக்கியதில், மாறிவரும் பருவநிலையாலும், வணிக பூச்சிக் கொல்லிகளின் செயல்திறன் தோல்வியடைந்தாலும் பூச்சித் தாக்குதலகள் கணிசமாக அதிகரித்து இருந்ததை உணர்ந்தோம். அப்போதுதான் எங்களது முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய தீர்வான வேப்ப இலைகள் மற்றும் மாட்டு கோமிய பூச்சிக் கொல்லி நினைவுக்கு வந்தது," என்றார் 28 வயதான சங்கீதா.
மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச அதிகாரிகளின் ஃபார்மல் உடைகளுக்கு மத்தியில் புடவை அணிந்து வலம்வந்த அவர்கள் பசுவின் கோமியம் மற்றும் வேப்பிலை கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி பற்றியும் அது அளித்துள்ள எதிர்வினைகள் பற்றியும் உரக்க பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உலகளாவிய மேடையில் அவர்கள் செயல்படுத்திய தீர்வுகளை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததுடன், பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் பெண்கள் பாதிக்கப்படுவதையும், அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் தேவை என்பதையும் மாநாட்டின் பேச்சுவார்த்தையாளர்கள் உணர்ந்துள்ளனர் என்று நம்புவதாகவும் சங்கீதா கூறினார்.
இரு பெண் விவசாயிகளும் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் தங்களது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து, காலநிலை அதிர்ச்சிகளால் இந்திய பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் விளக்கிக் கூறினர்.
சுயதொழில் புரியும் பெண்கள் சங்கத்தின் (SEWA) இயக்குனர் ரீமா நானாவதி, பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளால், தெருவோர வியாபாரம் செய்வோர், கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு மிகுந்த தொழில்களில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரித்தார்.
''வெளித்தோற்றத்தில் நமது பராம்பரிய வழக்கங்கள் எளிமையானவை தெரிந்தாலும் அவை, எதிர்காலத்திற்கான திறவுகோலைக் கொண்டுள்ளன,'' என்று பகிர்ந்தார் ஜசுமதிபென்.
சம்பளப் பணத்தில் ஹாக்கி பயிற்சி; கிராமப் பெண்களின் வாழ்வை மாற்றும் பஞ்சாயத்து தலைவி!