மாணவர்களுக்கான கூட்டு செயற்கைகோள் திட்டம் - இந்திய அமைப்புடன் இலங்கை பல்கலை ஒப்பந்தம்!
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, இலங்கையில் வடக்கு பகுதியில் மாணவர்களுக்கான செயற்கைகோள் கூட்டு முயற்சி திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன், இலங்கை கல்வி நிறுவனம் நார்த்தன் யூனி கையெழுத்திட்டுள்ளது.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, இலங்கையில் வடக்கு பகுதியில் மாணவர்களுக்கான செயற்கைகோள் கூட்டு முயற்சி திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன், இலங்கை கல்வி நிறுவனம் நார்த்தன் யூனி கையெழுத்திட்டுள்ளது.
அகமதாபாத்தின் Inspace இயக்குனர் டாக்டர்.பிரபுல்ல குமார் ஜெயின், SLIIT நார்த்தன் யூனி தலைவர் இண்டி பத்மநாதன், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனர், சி.இ.ஓ., டாக்டர்.ஸ்ரீமதி கேசன், உலக விண்வெளி வாரம் செயல் இயக்குனர் ஆல்மா ஒகாபலேப், கல்வியாளர் டாக்டர்.சரண்யா ஜெயகுமார் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டம், இலங்கையின் வடக்கு பகுதி- யாழ்பாணத்தில் உள்ள நார்த்தன் யூனி மற்றும் அரசு பள்ளிகளின் மாணவர்கள், இந்திய மாணவர்களுடன் இணைந்து, கூட்டாக செயற்கைகோள் வடிவமைக்க வழி செய்யும். இந்த செயற்கைகோள், வெளி மண்டலம் மற்றும் தகவல் தொடர்பு நுட்பங்களை ஆய்வு செய்யும் கருவிகளை கொண்டிருக்கும்.
இந்த திட்டம் இரு நாட்டின் மாணவர்களின் தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்துவதோடு, அறிவியல் ஆய்வுகளுக்கான பயனுள்ள தரவுகளையும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாணவர்களுக்கு செயற்கைகோள் அனுபவத்தை நேரிடையாக அளிக்கும்.
மேலும், செயற்கைகோள் உருவாக்கம், தரவுகள் அலசல், அறிவியல் துறை எதிர்காலத்திற்கு தயார் செய்தல் ஆகிய பலன்களை இந்த திட்டம் மாணவர்களுக்கு அளிக்கும்.
"அறிவியல் கூட்டு முயற்சி மற்றும் பரஸ்பர புதுமையாக்கம் தொடர்பான கலச்சாரத்தை உருவாக்குவதில், இந்தியா, இலங்கை இரு நாடுகளுக்கும் இந்த திட்டம் முக்கியமாக அமையும். செயற்கைகோள் நுட்பங்களை அறிவதன் மூலம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் கல்வி முறைகளைச்சேர்ந்த மாணவர்களின் கூட்டு முயற்சிக்கு இந்த திட்டம் வழிவகுக்கும்,” என நார்த்தன் யூனி தலைவர் இண்டி பத்மநாதன் கூறினார்.
"இந்த திட்டம் இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டு தொலைநோக்கை கொண்டுள்ளது. கல்வி, தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றை மக்களை இணைக்கும் கருவிகளாக பார்ப்பதாக இது அமைகிறது. இரு நாட்டு மாணவர்களையும் திட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம், எதிர்கால தலைமுறையினர் மத்தியில் உலக சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சியின் விதைகளை விதைக்கிறோம்” என ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனர், சி.இ.ஓ., ஸ்ரீமதி கேசன் கூறினார்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்கள் கொண்டது. முதல் கட்டம், மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும். இலங்கையின் 50 மாணவர்கள், இந்தியாவின் 10 மாணவர்கள், 50 கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். செயற்கைகோள் மற்றும் விண்வளி திட்ட அடிப்படைகள் விளக்கப்படும்.
இரண்டாம் கட்டத்தில், இலங்கை மாணவர்கள், செயற்கைகோள் உருவாக்கத்தில் நேரடியாக பங்கேற்பார்கள். இந்திய மாணவர்கள், வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கையின் நார்த்தன் யூனி பல்கலை, மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் சார்ந்த பாடங்களின் கவனத்தோடு கல்வி வழங்கி வருகிறது. இந்தியாவின் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, விண்வெளி கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
Edited by Induja Raghunathan