‘இது மகளிருக்கான உரிமைத்தொகை; உதவித்தொகை அல்ல’ - பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இத்திட்டத்தை தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றியுள்ளது.

‘இது மகளிருக்கான உரிமைத்தொகை; உதவித்தொகை அல்ல’ - பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Friday September 15, 2023,

3 min Read

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இத்திட்டத்தை தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றியுள்ளது.

இதற்கான அறிவிப்பை, இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் இத்திட்டத்திற்கு ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என பெயர் சூட்டப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறது.

Stalin

செப்.15 முதல் மாதம் ரூ.1000

முதற்கட்டமாக மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. அதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2 கட்டங்களாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சுமார் 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முன்னோட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அரசு சார்பில் ஒரு ரூபாய் அனுப்பி பரிசோதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 அனுப்பப்பி வருகிறது தமிழ்நாடு அரசு.

இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டுள்ள நிலையில்,

இன்னும் 5 நாட்களில் அதாவது, செப்டம்பர் 20ம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
CM

காஞ்சிபுரத்தில் கோலகல தொடக்கம்:

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற விழாவில், 10 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்கி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இந்தத் திட்டம் குறித்த கையேடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதில், பணத்தை சேமிப்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

“ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தனது குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்கவும் பெண்கள் தினமும் எவ்வளவு நேரம் உழைத்திருப்பார்கள். அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது. ஆனால், House Wife என சாதாரணமாக சொல்கிறார்கள். உங்கள் மனைவி வேலைக்குச் செல்கிறார்களா? என்றால் வீட்டில் சும்மா தான் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால், மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இது மகளிருக்குக் கொடுக்கப்படும் உரிமைத்தொகை உதவித்தொகை அல்ல,” என்றார்.

விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தற்காக, “முதலமைச்சருக்கு நன்றி” என்ற பதாகைகளையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000/- தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்திகளையும் காண்பித்து மகளிர் நன்றி தெரிவித்தனர்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்

வீட்டில் நெசவு தொழில் செய்து வரும் பெண்மணி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,

“நானும், எனது கணவரும் நெசவுத் தொழில் செய்து வரும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகிறோம். ஆனால், இப்போது என் மூலமாக எனது குடும்பத்திற்கு மாதம் ரூ.1000 கிடைக்கவுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இப்படி யாராலும் செய்யமுடியாத ஒரு புதுமையான திட்டத்தை கையில் எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பரமக்குடியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் அளித்த பேட்டியில்,

“மிகவும் ஏழ்மையான எனது குடும்பத்தில் கணவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் ஏரியாவில் முதல் நபராக எனக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது உறவினர்கள் அனைவருக்கும் போன் பண்ணி தெரியப்படுத்தினேன். இந்த பணம் மருத்துவச் செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி,” என்றார்.

சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழாவை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் நுழைவு வாயிலில் 15 டன் எடையுள்ள மணல் கொண்டு பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருவுருவத்தை மணலில் வடிவமைத்து வரும் சென்னையைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் கஜேந்திரன் கைவண்ணத்தில் செய்யப்பட்டு வருவது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.