2 லட்சம் சதுரடி; 8 தளங்கள்; 6 லட்சம் புத்தகங்கள்: ‘கலைஞர் நினைவு நூலகம்’ சிறப்பம்சங்கள் இதோ!
மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். ‘அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள, கலைஞர் நினைவு நூலகத்தில் என்னன்ன வசதிகள், தொழில்நுட்பங்கள் வடி
மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
‘அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை,’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள, கலைஞர் நினைவு நூலகத்தில் என்னன்ன வசதிகள், தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளன என விரிவாகப் பார்க்கலாம்...
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில்,
மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டது. கலைஞர் நினைவு நூலகம் என்ற பெயரில், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்கள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடமாக நூலகம் அமையும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டது. முகப்பில் கலைஞர் கருணாநிதி உருவத்துடன் ‘கலைஞர் நினைவு நூலகம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நவீன கட்டிடத்தின் மாதிரி உருவம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
நேற்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார்.
பலர் ஆவலுடன் காத்திருந்த கலைஞர் நினைவு நூலகத்தில் தற்போது 8 தளங்களில் என்னென்ன பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
நூலகத்தின் முக்கிய சிறம்பம்சங்கள்:
- கலைஞர் நினைவு நூலகம் மொத்தம் 6 லட்சம் புத்தங்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு புத்தகங்களுக்காக மட்டுமே 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
- கலைஞர் நினைவு நூலகம் 27 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி நூல்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு உட்பட, ஆங்கில புத்தகங்கள், சைவம், வைணவம், சங்க இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள், காலமுறை இதழ்கள், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தத்துவவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், சட்டம் , மொழியியல், வரலாறு, புவியியல், கலாச்சாரம், சுயசரிதை, கணிதம், இலக்கியம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை, விளையாட்டு என தனித்தனி பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன.
- குழந்தைகளை கவரும் வண்ணம் புத்தகங்கள் மட்டுமின்றி டிஜிட்டல் அறை, ஒலி மற்றும் ஒளி காட்சி கூடம் அமைக்கப்பட உள்ளது.
- ஒரே நேரத்தில் 600 பேர் வரை அமர்ந்து படிக்கக் கூடிய இந்த நூலகத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வாசிப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி அமைப்புடன் கூடிய பேசும் புத்தகங்கள் கொண்ட பிரத்யேக பிரிவும் உருவாக்கப்பட உள்ளது.
- நூலகத்தில் வாசிப்பிற்காக வருபவர்கள் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள மெல்லிசையுடன் கூடிய தோட்டம், செயற்கை தாவரங்கள், உணவகம், வைஃபை போன்ற அதிநவீன வசதிகளும் செய்யப்பட உள்ளன.
எத்தனை தளங்கள், என்னென்ன வசதிகள்?
தரைத்தளம்: வரவேற்புப் பிரிவு, உறுப்பினர் சேர்க்கை அறை, அஞ்சல் பிரிவு, வலைதள கட்டுப்பாட்டு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம் மற்றும் உணவருந்தும் அறை ஆகியன அமைய உள்ளது.
முதல் தளம்: பருவ இதழ் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், கலைஞர் பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு அமைக்கப்பட உள்ளது.
இரண்டாவது தளம்: 3 ஆயிரத்து 110 சதுர மீட்டர் அளவிலான இடத்தில் தமிழ் நூல்களுக்கு மட்டுமான பிரத்யேக பிரிவு அமையவுள்ளது.
மூன்றாவது தளம்: 2 ஆயிரத்து 810 சதுர மீட்டரில் ஆங்கில நூல்களுக்கான பிரிவு அமைக்கப்படும்.
நான்காம் தளம்: ஆயிரத்து 990 சதுர அடி பரப்பளவில் ஆங்கில குறிப்புதவி நூல்கள் பிரிவும், அமரும் வசதியுடன் கூடிய திறந்தவெளி மாடித்தோட்டமும் அமைய உள்ளது.
ஐந்தாம் தளம்: ஆயிரத்து 990 சதுர அடி பரப்பளவில் மின் நூலகம், ஆராய்ச்சி இதழ்கள் மற்றும் போட்டித் தேர்வு நூல்கள் பிரிவு அமைய உள்ளது.
ஆறாம் தளம்: நூல் பகுப்பாய்வு மற்றும், நூலகத்துக்கான ஸ்டுடியோ, மிண்ணணு உருவாக்கப் பிரிவு, நுண்படச்சுருள், நுண்பட நூலக நிர்வாக பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு மற்றும் நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமைய உள்ளது.
மதுரையின் மற்றொரு பிரம்மாண்ட அடையாளமாக சர்வதேச தரத்துடன் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.