அமெரிக்க துணை அதிபராக பதவியேற்று வரலாறு படைக்கவுள்ள முதல் தெற்காசிய பெண் கமலா ஹாரிஸ்!
கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நிலையில், இந்தப் பதவி வகிக்கும் முதல் கருப்பின பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்க பெண் என்கிற பெருமை கமலா ஹாரிஸுக்குக் கிடைக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதிபராக பதிவியேற்கப் போவது யார் என்பதை உலகமே ஆவலுடன் உற்று நோக்கியுள்ளது.
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றி இலக்கை நெருங்கி வருகிறார்.
ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருந்தார்.
கமலா ஹாரிஸ் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தும் வகையில் அவரது மூதாதையர் கிராமமான தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தின் துலசேர்ந்திரபுரம் கிராம மக்கள் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அன்னதானம் போன்றவற்றை நடத்தியுள்ளனர்.
கிராம மக்கள் பலர் தங்கள் வீட்டு முன்பு கமலா ஹாரிஸை வாழ்த்தி வண்ணக் கோலங்கள் போட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். டெல்லியில் வசிக்கும் கமலா ஹாரிஸ் உறவினர் மற்றும் அவரின் மாமாவான ஜி பாலசந்திரன்,
“அமெரிக்கா இன்று இக்கட்டான சூழலில் உள்ளது. ஜோ பைடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்கிற எண்ணம் கொண்டுள்ளார். துரதிர்ஷ்ட்டவசமாக ட்ரம்ப் இத்தகைய கருத்தாக்கம் கொண்டவராக செயல்படவில்லை. ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் கடவுள்தான் அமெரிக்காவைக் காப்பாற்றவேண்டும். ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்பதே என்னுடைய கணிப்பு,” என்று பேட்டி அளித்துள்ளார்.
முதல் கருப்பின தெற்காசிய அமெரிக்க பெண்
கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நிலையில், இந்தப் பதவி வகிக்கும் முதல் கருப்பின பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்க பெண் என்கிற பெருமை கமலா ஹாரிஸுக்குக் கிடைக்கும்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை கருப்பின பெண் துணை அதிபராக பதவி வகித்ததில்லை. ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்கும் நிலையில் அதிபரின் நிர்வாக முடிவுகள், வகுக்கப்படும் செயல்திட்டங்கள் போன்றவற்றில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலா ஹாரிஸ் 2016ம் ஆண்டு செனட் சபைக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு வழக்கறிஞராக செயல்பட்டார். கலிபோர்னியா அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார்.
பொய் குற்றம்சாட்டுகளுக்கு எதிராகவும் காவல்துறையினரின் துப்பாக்கி சூடு சம்பவங்களை விசாரிக்க அமைக்கபட்ட ஆணையங்கள் குறித்தும் கலிபோர்னியாவின் அடார்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் எடுத்த நிலைப்பாடுகள் கவனிக்கத்தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருந்தன.
கமலா ஹாரிஸ் ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களிடமும் நீதிமன்ற உயர் அதிகாரிகளிடமும் செனட் சபையில் அச்சமின்றி கூர்மையான கேள்விகளை எழுப்பினார். இதுபோன்ற நிலைப்பாடுகளே துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட உதவின.
கமலா ஹாரிஸ் தனது வாதத் திறமையாலும் துணிச்சலான செயல்பாடுகளாலும் மற்ற பெண்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கிறார்,
தொகுப்பு: ஸ்ரீவித்யா