6 மாதக் குழந்தையில் அரிதாரம்; குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது, குறுகிய காலத்தில் சூப்பர்ஸ்டார்: மறக்க முடியாத ‘அப்பு’
கன்னட திரையுலகின் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் புனித்ராஜ்குமார், திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 46 வயதில் அவரது திடீர் மரணம் சினிமா ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆறு மாதக் குழந்தையாக சினிமாவில் அறிமுகமாகி, மிகக் குறுகிய காலத்திலேயே அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்து கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் புனித் ராஜ்குமார்.
ரசிகர்கள் 'அப்பு' என்றும், 'பவர்ஸ்டார்' என்றும் செல்லமாக அவரை அழைக்கின்றனர். இவருக்கென்று மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 46 வயதில் திடீரென இன்று மாரடைப்பால் புனித் உயிரிழந்தது அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் எம்.ஜி.ஆர், தெலுங்கில் என்.டி.ஆர். போன்று கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்தான் புனித்ராஜ்குமார். கடந்த 1975ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். புனித்திற்கு ஆறு வயதாக இருக்கும் போது ராஜ்குமாரின் குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது.
அப்பா பிரபல நடிகர் என்பதால், கைக்குழந்தையாக இருக்கும் போதே நடிகராகும் வாய்ப்பு புனித்திற்கு எளிதாகக் கிட்டியது. ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போதே ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது தந்தையுடன் மட்டுமின்றி மற்ற நடிகர்களுடனும் நடித்தார்.
சிறுவயதிலேயே மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்த புனித், நான்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கர்நாடக அரசின் மாநில விருதுகளைப் பெற்றார்.
1985ம் ஆண்டு ஷெர்லி எல்.அரோராவின் ’வாட் தென் ராமன்’ நாவலை புனித்தை வைத்து பெட்டடா ஹூவு என்ற பெயரில் படமாக்கினார் இயக்குநர் லட்சுமிநாராயணன். இதில் ராமு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த புனித்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதோடு, 33வது தேசிய விருது விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றுத் தந்தது.
தனது டீன் ஏஜ்ஜிலேயே தேசிய விருது பெற்று மக்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்தார் புனித். குழந்தை நட்சத்திரமாக 1989ம் ஆண்டு வரை நடித்தவர், பிறகு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார்.
பின்னர், 2002ம் ஆண்டு பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ’அப்பு’ என்ற திரைப்படம் மூலம் கன்னட திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால், கன்னட மக்களின் அன்பிற்கு சொந்தக்காரர் ஆனார். ரசிகர்கள் அவரை செல்லமாக அப்பு என்றே அழைக்கத் தொடங்கினர்.
அப்புவைத் தொடர்ந்து அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், நம்ம பசவா, அஜய் என தொடர்ந்து அவர் நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 2007ம் ஆண்டு வெளியான அரசு படம் இவரது புகழை மேலும் உயர்த்தியது. இந்தப் படத்தில் நடித்ததற்காக கன்னட திரையுலகின் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை புனித் வென்றார்.
அதே ஆண்டு வெளியான ’மிலானா’ என்ற படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான சுவர்ணபிலிம் விருதும் கிடைத்தது.
தொடர்ந்து பிந்தாஸ், வம்சி, ராஜ், ஜாக்கி, குடுகாரு என வெற்றிப்படங்களாக கொடுத்ததால், அப்பாவைப் போலவே கன்னட உலகின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து புனித்திற்கு கிடைத்தது. புகழைப் போலவே ஒருபுறம் விருதுகளும் குவியத் தொடங்கியது. வம்சி மற்றும் ராஜ் படத்தில் நடித்ததற்காக சவுத்ஸ்கோப் விருதையும், ஜாக்கி படத்திற்காக சிறந்த நடிகருக்கான உதயாபிலிம் விருதையும், குடுகாரு படத்திற்காக கன்னட திரையுலகின் சிறந்த நடிகருக்கான சைமா விருதையும் பெற்றார்.
2012ம் ஆண்டு அவருக்கு வெற்றிகளைக் குவித்த ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே ஆண்டில் அவர் நடித்த அண்ணாபாண்ட், யாரே கூகதளி, பவர், ராணா விக்ரம், தூட்மனே குட்கா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. 2017ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ராஜகுமாரா படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன், லவ்லவிகே ரிடர்ஸ் சாய்சின் சிறந்த நடிகருக்கான விருது, ஜீ கன்னடாவின் ஹேமய்யா கன்னடிகா விருது, பிலிம்பேரின் சிறந்த நடிகருக்கான விருது, கன்னட திரையுலகின் சிறந்த நடிகருக்கான சைமா விருது என விருதுகளையும் குவித்தது.
தனது தந்தையைப் போலவே நடிப்பு மட்டுமின்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்தார் புனித். நாயகனாக தனது அறிமுகப்படமாக அப்பு, வம்சி உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் சூப்பர்டூப்பர் ஹிட்டாகின.
நாயகனாக மட்டுமின்றி ’மைத்ரி’ என்ற படத்தில் புனித் ராஜ்குமாராகவும், ஹம்பிள் பொலிடிசியன் நோகராஜ், மாயபஜார், பட்டே ஹூளி படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் புனித் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக ஏப்ரல் 1ம் தேதி ’யுவரத்னா’ என்ற படம் வெளியானது. இந்தப் படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது ஜேம்ஸ் மற்றும் த்வித்வா என்ற இரு படங்கள் நடித்து வந்தார்.
திரையுலகைப் பொறுத்தவரை தயாரிப்பாளராகவும் சிறந்த படங்களைக் கொடுத்துள்ளார் புனித். கவலுதாரி, மாயாபஜார் 2016, லா, ப்ரெஞ்ச் ப்ரியாணி, பேமிலி பேக், ஒன்கட் டூ கட் ஆன் ப்ளாவர் ஸ் கம் என்ற படங்களை தயாரித்துள்ளார். இதில் கடைசி இரு படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்துள்ளார் புனித். 2012ம் ஆண்டு பிரபல கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோட்யதிபதியைத் தொகுத்து வழங்கினார். உதயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெட்ரவதி தொடரை இவர்தான் தயாரித்துள்ளார்.
சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே 1999ம் ஆண்டு அஸ்வினி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் புனித். அவருக்கு வந்திதா மற்றும் த்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக விருப்பம் கொண்டவர் புனித். வழக்கமாக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது அவரது வாடிக்கை. அந்தவகையில்,
வழக்கம் போல் இன்று காலை ஜிம்மிற்கு சென்றுள்ளார் புனித். உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, திடீரென அசௌகரியமாக உணர்ந்துள்ளார். மற்றவர்கள் சுதாரிக்கும் முன் மயக்கமடைந்து விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனைக்கு வந்தபோதே புனித்தின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்ததால், ரசிகர்கள் பெரும் கவலை அடைந்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட புனித், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவலை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.
அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று புனித் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களும் புனித் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னணி நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிச்சயம் கன்னட திரையுலகில் புனித் ராஜ்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.