குமரியில் பிறந்து சென்னையில் நிறுவனம் தொடங்கி ரூ.700 கோடி டர்ன்ஓவர் வணிகத்தை கட்டமைத்த Dr.வேலு!
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த வேலு தனது ஐந்தாண்டு கால சேமிப்பைக் கொண்டு சிறியளவில் தொடங்கிய நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் வணிகங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
Dr.ஜிஎஸ்கே வேலு, பிட்ஸ் பிலானி பட்டதாரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர். குடும்பத்தில் யாருக்கும் தொழில் செய்த அனுபவமில்லை. வேலு மருத்துவர் ஆகவேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தார். ஆனால் அவர் தொழில்முனைவராக உருவெடுத்தார்.
இன்று இவர் நிறுவிய Trivitron நிறுவனத்தின் விற்றுமுதல் 700 கோடி ரூபாய். மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான Trivitron சென்னையைச் சேர்ந்த நிறுவனம்.
”ஹெல்த்கேர் பிரிவில் தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் தோல்வியில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்கிறேன். வெற்றியில் இருந்து பாடம் கற்பது கடினம். ஒருவர் தனக்கு ஆர்வம் இருக்கும் பகுதியில் செயல்படத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தடைகளைத் தகர்த்தெறிந்தால் பணம் தானாக வந்து சேரும்,” என்கிறார் 52 வயதான வேலு.
ஊழியராக இருந்து தொழில்முனைவர் ஆனார்
1984-ம் ஆண்டு பார்மசி பிரிவில் இளநிலை பட்டம் படிப்பதற்காக பிட்ஸ் பிலானியில் சேர்ந்தபோதே ஹெல்த்கேர் பிரிவில் செயல்படத் தொடங்கிவிட்டார். 1988-ல் பட்டப்படிப்பை முடித்தார். அப்போது அவருக்கு வயது 19.
பிறகு மருத்துவ உபகரணங்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த IMI நிறுவனத்தில் சேர்ந்தார்.
“இந்தியாவின் மருத்துவச் சாதனங்கள் துறையில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை கவனித்தேன். விலை நிர்ணயம், சந்தையில் நிலைநிறுத்திக்கொள்ளுதல், தயாரிப்பு வகைகள் போன்றவை இந்நிறுவனங்களின் பிரத்யேகக் கட்டுப்பாட்டில் இருந்தன,” என்கிறார்.
இதுவே உள்நாட்டு மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான தேவை இந்தியாவில் இருப்பதை உணர்த்தியது என்கிறார் வேலு.
குறைந்த செலவில் ஹெல்த்கேர் தீர்வுகளை வழங்கத் தீர்மானித்த வேலு 1997-ம் ஆண்டு Trivitron Healthcare தொடங்கினார். ஐந்தாண்டுகளாக வேலை செய்து சேர்த்து வைத்திருந்த 25 லட்ச ரூபாயைக் கொண்டு இந்த முயற்சியைத் தொடங்கினார்.
”சென்னையில் மருத்துவ உபகரணங்களை ட்ரேடிங் செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆனால் மருத்துவத் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருந்து வந்தது,” என்கிறார்.
ஆரம்பத்தில் தனியாகவே வணிக செயல்பாடுகளைக் கையாண்டு வந்த வேலு, விரைவில் ஒரு குழுவை உருவாக்கி பயிற்சியும் அளித்தார்.
“ஊழியர்கள்தான் எனக்கு மிகப்பெரிய பலம். எனவே குழுவை உருவாக்குவதற்கு அதிக நேரத்தை முதலீடு செய்தேன்,” என்கிறார்.
சந்தை நிலவரம்
மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தையில் வேலுவால் எளிதாக வணிக செயல்பாடுகளைத் தொடங்கிவிட முடியவில்லை.
“திறமைசாலிகளை தேர்வு செய்து பணியமர்த்துவது, பிராஜெக்ட் உருவாக்குவது, ஆர்&டி என ஒவ்வொன்றிலும் அதிக கவனம் செலுத்தினேன். கிராமப்புற சந்தைகளில் தொடங்கி படிப்படியாக மற்ற பகுதிகளில் விரிவடைய திட்டமிட்டேன்,” என்கிறார் வேலு.
ஹெல்த்கேர் பிரிவில் செயல்படும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முகாமிடத் தொடங்கின. இந்த போக்கினை வேலு கவனித்தார். ட்ரேடர்கள் அல்லது இடைத்தரகர்களை சார்ந்திருக்காமல் இந்நிறுவனங்கள் சுயாதீனமாக செயல்பட விரும்பின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டு உற்பத்தி பார்ட்னராக செயல்படத் தீர்மானித்தார்.
”எங்கள் சேவையைப் பெறும் கிளையண்ட் பலர் இந்தியாவில் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என விரும்பினர். இந்தத் தேவைகளையும் வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்து ட்ரேடிங் பிரிவில் இருந்து தயாரிப்புப் பிரிவிற்கு மாறினேன்,” என்று விவரிக்கிறார்.
2010-ம் ஆண்டு வேலுவின் நிறுவனம் பார்ட்னர் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய கூட்டு முயற்சியில் இணைந்தது. Aloka Japan நிறுவனத்துடனான கூட்டு முயற்சியால் சென்னைக்கு அருகில் Trivitron Medical Tecnology Park (TMTP) பூங்காவில் Aloka Trivitron Medical Technology Ltd உருவானது.
இதே தொழில்நுட்பப் பூங்காவில் Biosystems நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் Biosystems Trivitron Diagnostic Ltd தொடங்கப்பட்டது.
“இந்த கூட்டு முயற்சிகளால் சில ஹெல்த்கேர் வணிகங்களையும் தொழிற்சாலைகளையும் கையகப்படுத்த முடிந்தது,” என்கிறார் வேலு.
வளர்ந்து வரும் சந்தை
உலகளவில் செயல்படும் நிறுவனங்களுடன் Trivitron இணைந்து செயல்பட்டதால் தொழில்நுட்ப ரீதியாக நிபுணத்துவம் பெற்றவர்களை அணுக வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்- விட்ரோ டயாக்னாஸ்டிக்ஸ், இமேஜிங் பிராடக்ட்ஸ், கிரிட்டிக்கல் கேர் சாதனங்கள் என மூன்று பிரிவுகளாகத் தயாரிப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
“நாங்கள் செயல்படும் இடத்திற்கு ஏற்ப எங்கள் தயாரிப்புகளின் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. அதிக கவனத்துடன் விலை நிர்ணயிக்கபடவேண்டும். விலை அதிகமாக இருந்தால் நல்ல வாடிக்கையாளர்களை இழந்துவிடும் அபாயம் உள்ளது. விலை குறைவாக நிர்ணயித்தால் தயாரிப்பின் தரத்தில் நம்பிக்கை ஏற்படுவதில்லை,” என்கிறார்.
வேலு சர்வதேச அளவில் இருக்கும் தொடர்புகளைப் பயன்படுத்தி 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோக நெட்வொர்க் உருவாக்கினார்.
இந்திய சந்தையிலும் ஆப்பிரிக்க சந்தையிலும் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இதைத் தடுப்பதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கவலை தெரிவிக்கிறார் வேலு.
கலப்பு வணிக மாதிரி
மருத்துவத் தொழில்நுட்ப உபகரணங்களைப் பொருத்தவரை தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு கையாளப்படவேண்டும். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் விலையுயர்ந்த சாதனங்களை சரிசெய்வதற்கு அதிகம் செலவாகும்.
“எங்கள் கிளையண்ட்களுக்கு உதவும் வகையில் தொழில்முறை நிபுணர்கள் 200 பேர் கொண்ட குழுவை உருவாக்கினேன். இவர்கள் 24X7 சேவையளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது,” என்கிறார்.
இன்று Trivitron விநியோகஸ்தர் நெட்வொர்க்கில் 10,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தயாரிப்பு, விநியோகம் இரண்டும் கலந்த வணிக மாதிரியின் மூலம் 50 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பிலும் 50 சதவீதம் சர்வதேச தயாரிப்பிலும் வேலு கவனம் செலுத்த உள்ளார். இதனால் விலையைக் குறைத்து மேலும் பல மருத்துவமனைகளைச் சென்றடைய முடியும் என்கிறார் வேலு.
இந்தியாவை மருத்துவச் சாதனங்கள் உற்பத்தி செய்யும் மையமாக மாற்றவேண்டும் என்கிற இந்திய அரசின் நோக்கத்துடன் இந்தத் தொழில்முனைவரின் லட்சியம் ஒன்றியுள்ளது. Trivitron சர்வதேச அளவில் செயல்பட திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான பணிகள் திட்டமிடப்படும் என்கிறார் வேலு.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா