இன்போசிஸ் வேலைக்குச் செல்லாமல் காய்கனிகள் ஆன்லைன் விற்பனையில் கலக்கும் கரூர் கணினி பட்டதாரி!
22 வயதே ஆன மகேஷ்வரன் ஓர் கணிப்பொறியியல் பட்டதாரி. இவர் தனக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறிவிட்டு, இன்று ஆன்லைன் மூலம் காய்கனிகளை விற்பனை செய்து கரூரையே கலக்கி வருகிறார். தனது தந்தையின் காய்கனி மொத்த வியாபாரத்தை ஆன்லைனில் டோர் டெலிவரி செய்து இன்று அவர் பலருக்கு வேலை அளித்து வருகிறார்.
காய்கனிகளை சாலைகளில் கூவி விற்ற காலம்போய், இன்று கணினியில் கூவி விற்கும் காலம் வந்துவிட்டது. கொரோனா ஊரடங்கும் அதற்கு ஓர் காரணமாகி விட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாட்ஸ்அப் மூலம் காய்கனி விற்பனை, ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனை என வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வியாபாரத்தை வணிகர்களும் வளர்த்து வருகின்றனர்.
22 வயதே ஆன ஓர் இளம் கணிப்பொறியியல் பட்டதாரி தனக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறிவிட்டு, இன்று ஆன்லைன் மூலம் காய்கனிகளை விற்பனை செய்து கரூரையே கலக்கி வருகிறார்.
ஜெகதீஸ் காய்கனி கடை என்ற பெயரில் அவரது தந்தை நடத்தி வந்த மொத்த காய்கனி விற்பனையகத்தில், சிறு வயதில் இருந்தே தந்தைக்கு உதவியாக விற்பனையில் ஈடுபட்டு வந்தார் மகேஸ்வரன். அவர் யாரிடமோ கைகைட்டி நின்று வேலை செய்து ஊதியம் பெறுவதற்கு பதிலாக, தான் கற்ற கல்வியின் மூலம் தந்தையின் வியாபாரத்தையே மேம்படுத்தி, சொந்தக் காலில் நின்றால் என்ன என்று யோசித்து, கரூரிலேயே முதல் முறையாக ஆன்லைனில் காய்கனிகளை ஆர்டர் பெற்று, இலவசமாக டோர் டெலிவரி செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது, நான் கோவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, காய்கனி உள்பட அனைத்துப் பொருள்களும் ஆன்லைன் மூலமே விற்பனை செய்யப்படுவதை பார்த்து வியப்படைந்தேன். இந்நிலையில்,
”கல்லூரிக் கல்வியை நிறைவு செய்த எனக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் மைசூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தது. அப்போது குடும்பச்சூழலை கருத்தில் கொண்டு பணியில் சேர்வதா வேண்டாமா என சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு, எனது தந்தையில் தொழிலான காய்கனி விற்பனையை ஆன்லைன் மூலம் செய்தால் என்ன என்ற சிந்தனை தோன்றியது,” என்கிறார்.
இதையடுத்து, அவரது சொந்த ஊரான கரூரில் யாராவது ஆன்லைனில் காய்கனி விற்பனை செய்கிறார்களா எனத் தேடிய போது அவ்வாறு யாரும் செய்யவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து,
2 ஆப்-களை தேர்வு செய்து அதன் மூலம் காய்கனி விற்பனையைத் தொடங்கியுள்ளார் மகேஷ்வரன். 2019 நவம்பரில் இவர் வியாபாரத்தைத் தொடங்க, அடுத்த 4 மாதங்களில் கொரோனா பெருந்தொற்று தொடங்கிவிட்டது. இந்நிலையில்தான் இவரது ஆன்லைன் காய்கனி வியாபாரமும் நன்கு விரிவடையத் தொடங்கியுள்ளது.
நான் வியாபாரத்தை ஆன்லைனில் தொடங்கிய 4 மாதங்களில் கொரோனா தொற்று ஏற்படவே, கரூர் நகராட்சி நிர்வாகமே என்னிடம் காய்கனிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் பொறுப்பை அளித்தனர். மேலும்,
“நானும் வாட்ஸ்அப் மற்றும் ஆப்ஸ் மூலம் வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டேன். மாதமொன்றுக்கு சுமார் 700 முதல் 800 வாடிக்கையாளர்கள் வரை நான் காய்கனிகளை விற்பனை செய்துள்ளேன்,” என்கிறார்.
இவர் காய்கனிகளை மற்ற வியாபாரிகளைப் போல எக்ஸ்ட்ரா லாபம் வைத்து விற்காமல், தங்களது மொத்த விற்பனை கடையில் என்ன விலைக்கு விற்பனை செய்கிறார்களோ, அதே விலைக்குத்தான் ஆன்லைனில் ஆர்டர் எடுத்து, டெலிவரி பாய் மூலம் டோர் டெலிவரி செய்து வருகிறார் என்பதுதான் சிறப்பம்சமே.
10 கிலோ வாங்கும் வாடிக்கையாளருக்கு என்ன விலையோ, அதே விலைதான் அரை கிலோ காய் வாங்கும் வாடிக்கையாளருக்கும். இதனால் இவரது வியாபாரத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், இவர் தனது இ-காமர்ஸ் தளம் மூலமூம் தனது வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், எல்லா தொழிலிலும் இருப்பதைப் போல இத்தொழிலிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன. மற்ற உணவுப் பொருள்களை போல் அல்ல காய்கனிகள். சிலருக்கு காய் பிடிக்கும், சிலருக்கு கனிந்தது பிடிக்கும். சிலருக்கு பெரிய காய்கனிகள் பிடிக்கும். சிலருக்கு சிறிய காய்கனிகள் பிடிக்கும்.
நாம் என்னதான் கவனமாக எடுத்தாலும், சில நேரங்களில் காய்கனிகள் கலந்து விடும். பேக்கிங் செய்யும்போது, சில காய்கள் சேதமாகிவிடும் என சில சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கின்றன என்கிறார் மகேஷ்வரன்.
மகேஷ்வரனைப் பார்த்து, அவரிடம் ஐடியா கேட்டு நிறைய பேர் திருப்பூர், சேலம் பகுதிகளில் இதே போல் ஆன்லைனில் காய்கனி விற்பனை செய்வதைத் தொடங்கியுள்ளனராம். காய்கனி விலை தினசரி மாறுபடும் என்பதால் பெரிய அளவில் லாப நஷ்ட கணக்கெல்லாம் பார்க்கமுடியாது. மேலும், அவற்றுக்கு மட்டுமே பணம் வசூலிக்கும் மகேஷ்வரன், டோர் டெலிவரிக்கென தனியாக பணம் ஏதும் வாங்காமல் இலவசமாக செய்து வருகிறார்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோள். மேலும், எதிர்காலத்தில் மளிகை, பழங்கள், பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை டோர் டெலிவரி செய்யவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன்.
மேலும், தற்போது கரூர் நகரத்தில் மட்டுமே ஆன்லைன் விற்பனை செய்து வருகிறேன். எங்களது ஆன்லைன் காய்கனி விற்பனையை கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே எனது தற்போதைய குறிக்கோள் என்கிறார்.
கணிப்பொறி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால் என்ன ஊதியம் கிடைத்திருக்குமோ, அதை விட தற்போது கூடுதலாகத்தான் சம்பாதித்து வருகிறேன். டெலிவரி பாய்ஸ் 4 பேர், கடையில் 6 பேர் என சிலருக்கு நான் வேலை அளித்துள்ளேன். தினசரி புதிதுபுதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. நிறைய புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது.
முழு மனத் திருப்தியோடு இத்தொழிலை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வேன் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் மகேஷ்வரன்.