ஒரு கை இல்லை; ஆனால் நம்பிக்கை தளரவில்லை – 'ஆஃப் தி ரோட்’ தன்னம்பிக்கை நாயகன் அப்துல்லா!
ஜம்மு- காஷ்மீர் அதிசியம் அப்துல்லா!
ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்தவர் சாயர் அப்துல்லா. அவர் 11 வயதிருக்கும்போது, விபத்தில் தனது வலது கையை இழந்தார். தன் வாழ்நாள் முழுவதுதம் ஒரு கையுடனே வாழ வேண்டிய கட்டாயம் அப்துல்லாவுக்கு ஏற்பட்டது.
ஆனால் அது ஒருபோதும் அவரது கனவுகளை எட்டிப்பிடிக்கவும், நினைத்ததை செய்து முடிக்கவும் தடையாக இருக்கவில்லை. பெரிய உயரங்களை அடைய அது முட்டுக்கட்டையாக இல்லை. வாகனம் ஒட்டுவது மற்றும் சாகசங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டக்கூடியவர் அப்துல்லா.
தன்னை 'ஒரு கை ராஜா' என்று குறிப்பிடுகிறார் அப்துல்லா. மேலும் மனம் தளராமல், ஒரு கையால் எப்படி வண்டி ஓட்டுவது என்பதையும் அவர் கற்றுக்கொண்டார். கிரேட்டர் காஷ்மீர் செய்தி நிறுவனத்துக்கு பேசிய அவர்,
"குழந்தை பருவத்திலிருந்தே நான் வாகனம் ஓட்டுவது மற்றும் சாகசம் செய்வதில் அதீத ஆர்வமாக இருந்தேன். விபத்துக்குப் பிறகு, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு கையால் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டேன், விரைவில் அதிக தூரம் ஓட்ட ஆரம்பித்தேன். 4x4 காரை ஓட்டுவது எப்போதுமே எனக்கு 'அட்ரினலின் ரஷ்' கொடுத்தது. எனது மாருதி ஜிப்சி காரை நான் 'பனிப்புயல்' என்றுதான் அழைப்பேன்,” என்கிறார்.
மேலும், அது ‘எனது ஆளுமைக்கு ஏற்றது. எனது ஆர்வத்தை வேறு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்போதுதான். 'காஷ்மீர் ஆஃப் ரோடு' என்று அழைக்கப்படும் ஒரு குழுவைப் பற்றி கேள்விப்பட்டேன். அது அட்வெஞ்சரில் ஈடுபடும் நபர்களுக்கானது. 4x4 கார்களில் மாநிலத்தைச் சுற்றியுள்ள கடினமான மலைப்பாதைகளில் ஓட்டச் செல்லும் குழு அது.
அறியப்படாத இடங்களை சென்றடைவது, சாலை சாகச நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதை பார்த்தால், இந்த தீவிர விளையாட்டை நோக்கி எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது,” என்கிறார். இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் அலி சஜித்,
"சாயர் எப்போதுமே வாகனம் ஓட்டுவதில் உள்ள தனது ஆர்வம் மற்றும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பதையே என்னிடம் அதிகமாக பேசிக்கொண்டிருப்பான். அவனுக்குள் ஒரு தனித்திறமை இருக்கிறது,” என்றார்.
சையர் அப்துல்லாவைப் பொறுத்தவரை, சக்கரத்தின் பின்னால் இருப்பது அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அது அவருக்கு 'நிறைவை தருகிறது'. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கு ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் குடும்பத்தினருக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தகவல் உதவி: greater kashmir | தமிழில்: மலையரசு