60 ஆண்டு வரலாற்றை மாற்றிய கவிதா கோபால்: ஜனாதிபதி விருது பெற்ற முதல் சென்னை ஐஐடி மாணவி!
சென்னை ஐஐடியின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக கவிதா கோபால் என்ற மாணவி ஒருவர் ஜனாதிபதி விருது உட்பட மூன்று உயரிய விருதுகளைப் பெற்று புதிய சாதனை புரிந்துள்ளார்.
உலகின் தலைச் சிறந்த நிறுவனங்களுக்கு பல நல்ல ஊழியர்களை, தலைவர்களைக் கொடுத்த பெருமை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடிக்கு உண்டு. அதன் 56வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
இதில், 2,140 பேருக்கு, 2,585 பட்டங்கள் வழங்கப்பட்டன. 10க்கும் மேற்பட்டவர்கள், தங்கப் பதக்கம் பெற்றனர். அவர்களில் கவிதா கோபால் என்ற 21 வயது பி.டெக் மாணவி ஜனாதிபதி விருது உட்பட மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 60 ஆண்டு கால சென்னை ஐஐடி வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்துள்ளார் கவிதா. ஏனென்றால் இதுவரை இந்த விருதை மாணவிகள் யாரும் பெற்றதில்லை. தொடர்ந்து மாணவர்கள் மட்டுமே பெற்று வந்தனர்.
இந்த விருதோடு விஸ்வேஸ்வரய்யா விருது மற்றும் ரவிச்சந்திரன் விருதையும் கவிதா பெற்றுள்ளார். மூன்று விருதுகளைப் பெற்ற அந்த மாணவிக்கு முதல் ஆளாக பதக்கம் அணிவித்து, பாராட்டி பட்டமளிப்பு விழாவைத் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.
படிப்பில் சிறந்து விளங்கியதற்காக கவிதாவிற்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 9.95 என்ற சிஜிபிஏ (CGPA) பெற்றிருந்ததற்காக அவருக்கு மற்ற இரண்டு விருதுகள் தரப்பட்டது. கடந்த கல்வியாண்டில் அவர் தனது பி.டெக் படிப்பை முடித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் மென்பொருள் பொறியாளராக பெங்களூருவில் பணி புரிந்து வருகிறார்.
“இந்த விருதுகளைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐஐடி மெட்ராஸில் பட்டம் பெறுவது என்ற என் கனவு தற்போது நிஜமாகி விட்டது. எனது எதிர்காலத்திற்கான சில திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். குறிப்பாக கோடிங் (Coding) முறையில் சில திட்டங்கள் உள்ளது,” என தி நியூஸ் மினிட்டிற்கு அளித்த பேட்டியில் கவிதா குறிப்பிட்டுள்ளார்.
அனுபுரம் அணுசக்தி மத்திய பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த கவிதா, அதனைத் தொடர்ந்து கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தார். அங்கு கணினி அறிவியல் பாடத்தை ஒரு பகுதியாக படித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு சென்னை ஐஐடியில் பி.டெக் சேர்ந்தார். அங்கும் தனது கணினி அறிவை நிரூபித்த கவிதா, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் தட்டிச் சென்றுள்ளார்.
சென்னை ஐஐடியில் தான், சி++, ஜாவா மற்றும் பைதான் உள்ளிட்ட மென்பொருள்களைக் கற்றுத் தேர்ந்து, நிபுணரானார்.
“எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் படிப்பைப் போலவே மற்ற பொழுது போக்குகளுக்கும் சரியாக நேரத்தை திட்டமிட்டு செலவழிப்பேன். அதனாலேயே கூடைப்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்த முடிந்தது. தேசிய விளையாட்டு கழகத்தின் ஒரு பகுதியாக நான் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டேன்,” என்கிறார் கவிதா.
பொதுவாக ஸ்டெம் (STEM - Science, Technology, Engineering and Mathematics ) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவு தான் என்ற கருத்து பரவலாக உள்ளது. கவிதாவின் ஐஐடி வகுப்பில் கூட 60 மாணவர்களும், பத்து மாணவிகளும் தான் இருந்துள்ளனர். இதிலிருந்தே இத்தகைய துறைகளில் ஆண், பெண் பாலின விகிதம் எப்படி உள்ளது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
சமூகம், பாலின பாகுபாடு, கணிதம் மற்றும் பொறியியல் துறையின் சூழல் போன்றவையே இந்தத் துறையில் பெண்கள் அதிகம் முன்வராததற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக இத்துறைகளில் மாணவிகளின் பங்களிப்பும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இனி வரும் காலங்களில் இந்த நிலை இன்னும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தகைய மாற்றத்திற்கு தான் ஒரு முன்னோடி ஆகி இருக்கிறோம் என்பதை கவிதா அறிந்திருக்கவில்லை. ஆனால், நிச்சயம் இனி இத்துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு கவிதா நல்ல ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
“கணினி துறையில் இனி நிறைய பெண் நிபுணர்கள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏனென்றால் எதிர்காலத்தில் கணினி துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. குறிப்பாக ஆர்ட்டிபிசியல் இண்டலிஜெண்ட் (Artificial Intelligence) துறையைச் சொல்லலாம்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் கவிதா.