உங்கள் உருவத்தை குட்டி மினியேச்சர் பொம்மையாக்கித் தரும் ‘குல்போண்டா’ தம்பதி!
2018-ம் ஆண்டு ரித்விக் மெக்காயில், பல்லவி முரளீதரன் தம்பதி கேரளாவில் தொடங்கிய Gulbonda ஸ்டார்ட் அப் தயாரிக்கும் பொம்மைகள் த்ரிஷா, நஸ்ரியா, வித்யாபாலன் என ஏராளமான பிரபலங்களின் வீட்டை அலங்கரித்துள்ளன.
பரிசளிப்பது என்பது கொடுப்பவர், பெற்றுக்கொள்வர் என இருவருக்குமே மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும், பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் பரிசுகளுக்கு நிகரே இல்லை. அந்த வகையில் சிறிய வடிவத்தில் மனித உருவத்தையோ செல்லப்பிராணியையோ பொம்மையாக உருவாக்கிக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
ரித்விக் மெக்காயில், பல்லவி முரளீதரன் இருவரும் இதைத்தான் செய்கிறார்கள். 20-களில் இருக்கும் இவர்கள் இருவருக்குமே 'மினியேச்சர் பொம்மைகள்' வழங்கும் ஐடியா பிடித்திருந்தது. இவர்களது பொம்மைகள் மட்டுமல்ல இந்த பிராண்டின் பெயரும் தனித்துவமானது –
.“ரித்விக்கிற்கு செல்லப்பெயர் வைப்பது பிடிக்கும். என்னை போபோ என்றுதான் கூப்பிடுவார். Gulbonda என்கிற பெயருக்கான அர்த்தத்தை நீங்கள் டிக்ஷனரியில் தேடினாலும் கிடைக்காது. இது ரித்விக்கிற்குப் பிடித்தமான வார்த்தை. அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரது உணர்வுகளை இந்த வார்த்தையின் மூலம்தான் வெளிப்படுத்துவார். உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க இந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தோம்,” என்கிறார் பல்லவி.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இந்த இளம் தம்பதிக்கு சொந்தமான ஸ்டுடியோ செயல்படுகிறது. இங்கு சிறியளவிலான பொம்மைகள் பிரத்யேக தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன. வடக்கு கேரளாவில் 2019-ம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்த ஸ்டார்ட் அப் எத்தனையோ பிரபலங்களைக் கவர்ந்துள்ளது.
விஜய் சேதுபதி, த்ரிஷா கிருஷ்ணன் நடித்த 96 தமிழ் திரைப்படம் இவர்களை முதலில் பிரபலப்படுத்தியது. இதில் வரும் ராம், ஜானு ஆகிய இரு முக்கியக் கதாப்பாத்திரங்கள் போலவே இரண்டு பொம்மைகளை Gulbonda தயாரித்தது. த்ரிஷா இதுபற்றி இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் பகிர்ந்துகொண்டதும் ஒரே நாளில் Gulbonda ஃபாலோயர்கள் எண்ணிக்கை 2,185 ஆனது. நிறுவனர்கள் இருவரும் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து மம்முட்டி, மோகன்லால், வித்யா பாலன், ஷெஃபாலி ஷா, நஸ்ரியா நசீம், மேகனா சர்ஜா என பல்வேறு பிரபலங்களின் வீட்டை Gulbonda மினியேச்சர்கள் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
எளிமையான தொடக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரித்விக், பல்லவி இருவரும் வழக்கமான பணி நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ரித்விக் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பல்லவி ஆர்கிடெக்டாக இருந்தார். இருவருக்குமே தொழில்முனைவில் ஆர்வம் இருந்து வந்தது. அதை செயல்படுத்த விரும்பிய இருவரும் ஒருகட்டத்தில் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர்.
"2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சிறு வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மின்வணிக வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் வணிகம் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தாலும் நிதி நெருக்கடி காரணமாகவும் இந்த முயற்சி தோல்வியடைந்தது,” என்று பல்லவி நினைவுகூர்ந்தார்.
இருவரும் ஒரு முறை மைசூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்றனர். இது கைவினைஞர்கள் அதிகமிருக்கும் ஒரு கிராமப்பகுதி. இங்குள்ள பிரபல சன்னபட்னா பொம்மைகளைப் பார்த்தார்கள். இந்த வண்ணமயமான மர பொம்மைகள் சன்னபட்னா கிராமத்தில் இருக்கும் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுபவை.
இந்த பொம்மைகள் அவர்களை வெகுவாகக் கவரந்தது. அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் இந்த ஐடியாவைப் பற்றி பேசினார்கள்.
“தச்சு வேலை செய்பவரின் உதவியுடன் நாங்கள் சில பொம்மைகளின் முன்வடிவங்களை உருவாக்கினோம். பல கட்டங்களாக தர பரிசோதனை செய்தோம்,” என்கிறார் பல்லவி.
2018-ம் ஆண்டு ஜூலை மாதம் முழுமையாக கைகளால் தயாரிக்கப்பட்டு, பெயிண்ட் செய்யப்பட்ட Gulbonda என்கிற மர பொம்மையை உருவாக்கினார்கள். இதை பெங்களூரு இந்திராநகரில் உள்ள கைவினைப் பொருட்கள் சந்தையில் காட்சிப்படுத்தினார்கள்.
ஆனால், மக்களிடையே வரவேற்பு கிடைக்காததால் இருவரும் வருத்தப்பட்டனர். நண்பர் அறிவுறுத்தியதை அடுத்து இருவரும் கவலையை மறந்து 96 திரைப்படம் பார்க்கச் சென்றனர். இதிலிருந்து கிடைத்த உத்வேகம் வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றது.
இருப்பினும், ஏராளமான சவால்களையும் இந்தப் பயணத்தில் எதிர்கொண்டதாக பல்லவி குறிப்பிடுகிறார். மர பொம்மைகள் மக்களிடையே பிரபலமானாலும் இந்த வணிக மாதிரியை வளர்ச்சியடையச் செய்வது மிகவும் கடினமாக இருந்தது.
தயாரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் விரைவாக டெலிவர் செய்யவும் விரும்பினார்கள். இதற்காக சிறியளவிலான பொம்மைகளைத் தயாரிக்க மரத்திற்கு பதிலாக உயர்தர என்ஜினியரிங் மெட்டீரியல் பயன்படுத்தினார்கள்.
“இப்போது எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் ஐந்து அல்லது ஆறு வேலைநாட்களுக்குள் டெலிவர் செய்யப்படுகின்றன. 35,000-க்கும் மேற்பட்ட உருவச்சிலைகளை உருவாக்கியிருக்கிறோம். 26,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. செல்லப்பிராணிகளுக்கான உருவச்சிலைகளையும் தனித்தேவைக்கேற்ப தயாரிக்கிறோம்,” என்கிறார் பல்லவி.
இந்தியா முழுவதும் இலவசமாக ஷிப்பிங் செய்து வருகின்றனர். சர்வதேச ஆர்டர்களுக்கு கூடுதல் டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
தற்போது படம் வரைபவர், உள்ளடக்கம் உருவாக்குபவர், சமூக வலைதள மேலாளர், மின்வணிக செயல்பாடுகளை நிர்வகிப்பவர் என 10 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
தனித்தேவைக்கேற்ற ஃபிரிட்ஜ் மேக்னட், ஃப்ரேம் செய்யப்பட்ட போர்ட்ரெயிட், கார்ப்பரேட் கிஃப்ட் என பல்வேறு பிரிவுகளுடன் விரிவடைந்துள்ளனர். தனித்தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் மினியேச்சர் பொம்மையின் விலை 899 ரூபாயில் தொடங்கி 1,398 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா