உங்கள் செல்ஃபியை 3டி மினியேச்சராக வடிவமைத்துத் தரும் புதுமை நிறுவனம்!
புகைப்படத்தை அச்சிட்டு பரிசளிப்பது அவுட்-டேட் ஆகிவிட்டது;, அதற்கு பதில் இந்நிறுவனம் புகைpபடத்தை ’3டி வடிவில்’ பொம்மையாக தயாரித்து விற்கிறது.
தொழிநுட்பம் வளர வளர நாம் செய்யும் தொழிலும் நம் தேவைகளும் அதற்கு ஏற்ப மாறி விடுகிறது. படிப்பை முடித்ததும் இளைஞர்கள் வேலை தேடி அலையும் நாட்கள் மாறி; தற்பொழுது பலர் ஸ்டார்ட்-அப் தொழிலில் ஈடுபடுகின்றனர். அதில் பொறியாளர் ஜகதேஷ் கோடீஸ்வரன் விதிவிலக்கல்ல. இவரும் தற்பொழுது இருக்கும் டிரெண்டில் சுய தொழில் தொடங்கி ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராய் முன்னேறி வருகிறார்.
’3டி செல்ஃபி’ என்னும் நிறுவனத்தின் நிறுவனர் ஜகதேஷ்; பெயரிலே புதுமை கொண்டுள்ள இந்நிறுவனம் தனது தயாரிப்பிலும் புதுமையை புகுத்தி தனித்து நிற்கிறது. பரிசு பொருளும் நாம் மற்றவர்களை மகிழ்விக்கும் விதமும் காலத்திற்கு ஏற்றார் போல் மாறிவிட்டது. அதாவது புகைப்படத்தை அச்சிட்டு பரிசளிப்பது அவுட்-டேட் ஆகிவிட்டது; அதற்கு பதில் இந்நிறுவனம் புகைபடத்தை ’3டி வடிவில்’ பொம்மையாக தயாரித்து விற்கிறது.
“பரிசுப் பொருளை பொறுத்தவரை எப்பொழுதும் மாற்றம் தேவை ஃபோட்டோ ஃபிரேம், 2டி கிரிஸ்டல் எல்லாம் பழையதாகி விட்டது, இதில் புதுமையை ஏற்படுத்த புகைப்படத்தை மினியேச்சராக உருவாக்கும் யோசனை வந்தது,”
என பேசத் துவங்குகிறார் ஜகதேஷ். 2012-ல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர் அனைவரையும் போல ஒரு பெரும் நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தார் அதற்கிடையில் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடனும் இணைந்து பணிபுரிந்துள்ளார். ஆனால் தொழில் தொடங்கும் சிந்தனை நித்தமும் அவர் மனதில் இருந்து வந்தது.
“18 வயசு முதலே ஓர் தொழில்முனைவர் ஆக வேண்டும் என கனவு இருந்தது. அதனால் கல்லூரி படிக்கும் பொழுதே பல ஸ்டார்ட்-அப் போட்டியில் கலந்து கொள்வேன்...” என்கிறார் ஜகதேஷ்.
தொழில் துவங்கும் கனவோடு இருந்த இவர் மினியேச்சர் புகைப்பட தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்து தான் வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதே 3டி செல்ஃபி என்னும் பெயரில் இணைய முகவரியை பெற்றுக்கொண்டார். ஆனால் 2016 ஜனவரி மாதமே இந்நிறுவனத்தை முகநூல் மூலம் துவங்கினார். ஃபிப்ரவரி காதலர் தினத்தை முன்னிட்டு பல ஆர்டர்கள் முக நூல் மூலம் ஏற்பட்டது. அதிலிருந்து நல்ல வளர்ச்சியை கண்டு இன்று இரண்டு வருடத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது 3டி செல்ஃபி.
“துவக்கத்தில் ஃப்ரீலான்ஸ் முறையில் வடிவமைப்பாளர்களை பெற்று இருந்தேன். நானே ஆர்டர்களை பெறுவதில் இருந்து விநியோகம் செய்யும் வரை சகலத்தையும் பார்த்துக்கொண்டேன்..”
ஆனால் தற்பொழுது 3டி செல்ஃபி நிறுவனத்தில் 7 பணியாளர்கள் உள்ளனர். தொழில் துவங்கி சில மாதத்திலே சொந்தமாக பணியாட்களை பணியில் அமர்த்திக்கொண்டார். வீட்டில் இருந்து செய்து வந்த இவர் தற்பொழுது சிறிய அலுவலகத்தையும் நிறுவியுள்ளார். வடிவமைப்பாளர்கள் புகைப்படத்தை டிஜிட்டலில் 3டி-யாக செதுக்கி அதன் பின் 3டி அச்சு இயந்திரத்தில் அச்சிட்டு இறுதி தயாரிப்பு வெளி வருகிறது.
3டி அச்சு இயந்திரத்தை சொந்தமாக பெற அதிக முதலீடு தேவை என்பதால் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார். தற்பொழுது நல்ல தொழில் முன்னேற்றம் இருப்பதால் சொந்தமாக வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் ஜகதேஷ்.
“ஆரம்பத்தில் அதிக முதலீட்டில் ஈடுபட்டிருந்தால் இந்த அளவு லாபம் ஈட்ட முடிந்திருக்காது. இது போன்ற தயாரிப்புக்கு இது ஆரம்பம் என்பதால் இதற்கு மிக குறைந்த மார்கெட் இலக்கு தான்,”
என தெளிவான தொழில்முனைவராய் விளக்குகிறார். சென்னையில் மட்டும் ஒரு மாதத்திற்கு 2000 திருமணத்துக்கு மேல் நடக்கிறது, அதில் 10 பேர் இந்த பரிசுப் பொருளை தேர்ந்தெடுத்தாலே நிச்சயம் இந்தத் துறை வளர்ச்சி அடையும் என்கிறார். ஒரு மாதத்துக்குள் ஒரு கோடிக்கு வணிகம் செய்வதே தனது குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் ஜகதேஷ்.
“என் நிறுவனத்தை முன்னேற்றும் எண்ணம் இருந்தாலும் அதிக மக்கள் வாங்கக் கூடிய விலையிலே எனது தயாரிப்பு அமையும். ஒன்று அல்லது இரண்டு உருவங்களை மட்டும் தயாரிக்கும் நாங்கள் கூடிய விரைவில் அதிக நபர்களை கொண்ட மினியேச்சரை உருவாக்க உள்ளோம்,” என முடிக்கிறார்.