துாக்கியெறியும் கொட்டாங்குச்சியை வருவாய் அளிக்கும் தொழிலாக்கிய அப்பா-மகள்!
கொட்டாங்குச்சி எனப்படும் சிரட்டைகளில் கிண்ணங்கள் உட்பட அழகிய பொருட்களை தயாரித்து, ஓராண்டில் 8,000 சிரட்டைத் தயாரிப்புகளை விற்று, 'தேங்கா' என்ற பிராண்ட்டை உருவாக்கி அசத்தியுள்ளார் இளம் ‘ஸ்டார்ட்அப்’பர்.
கேரள மாநிலத்தின் முதன்மை பயிர் தேங்காய். நாட்டின் முக்கிய தேங்காய் உற்பத்தியாளர்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது கேரளம். தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் பலனளிக்கக்கூடியவை என்றாலும் கேரளத்தில் தேங்காய்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மட்டுமே பிரதான தயாரிப்பாக உள்ளது.
அதன் சிரட்டைகள் எரிப்பொருளாக வீணடிக்கப்படுவதை கண்ட கேரளத்தைச் சேர்ந்த 26 வயதான மரியா குரியகோஸ், கொட்டாங்குச்சி எனப்படும் சிரட்டைகளில் கிண்ணங்கள் உட்பட அழகிய பொருட்களை தயாரித்து, சந்தையில் அதற்கான இடத்தையும் ஏற்படுத்தி ’தேங்கா' ‘Thenga' என்ற பிராண்ட்டை உருவாக்கியுள்ளார்.
திருச்சூரைப் பூர்விகமாக கொண்ட மரியா, மும்பையில் இளங்கலை பட்டமும், ஸ்பெயினில் முதுகலை பட்டமும் பெற்றவர். பட்டம் முடித்தவுடன் கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்துள்ளார். ஆனால், மக்களுக்காக பணிபுரிய விரும்பிய அவர் அப்பணியை விட்டு விலகினார்.
குடிசைப்பகுதியில் வாழும் மக்களுடன் இணைந்து நிலையான சானிட்டரி பேட்களை தயாரித்துவந்த ஒரு சமூக நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவமும், அவரது நீண்டகால தொழில்முனைவர் கனவும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பை லாக்டவுன் காலம் நல்கவே, 'தேங்கா' பிராண்ட் உருவாகியது.
"சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது என் குழந்தைப்பருவ கனவு. ஆனால், அது என்ன என்பது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இருந்ததில்லை. ஊருக்கு திரும்பிய பிறகு ஒருநாள், தேங்காய் சிரட்டைகள் அதிகளவில் குப்பைகளாக அகற்றப்படுவதை பார்த்தேன். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலோ தென்னையின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இங்கு தேங்காய் சிரட்டைகள் இப்படி வீணடிக்கப்படுகிறதே என்று இது எதற்காக பயன்படுகின்றன என்று தேடத் துவங்கினேன். அவை அக்டிவேடட் சார்கோல் செய்வதற்கும், எரிப்பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை அறிந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன்போ, பல கைவினைக் கலைஞர்கள் சிரட்டைகளை அழகியப் பொருட்களாக மாற்றிவந்துள்ளனர். ஆனால், அந்த தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு இல்லாததால், வேறுவழியின்றி கட்டுமானத் தொழில் போன்ற வேறு வேலைகளை தேடிச் சென்றுவிட்டனர். தொழில் தொடங்கவேண்டும் என்பது என் கனவு என்றாலும், சமூக நிறுவனத்தை உருவாக்குவதே என் நோக்கம்.
மக்களுக்கு தரமான சூழலுக்கு உகந்த தயாரிப்பினை வழங்கி அவர்களை உபயோகிக்க வைக்க தேங்காய் ஓட்டினை மதிப்புக்கூட்டி அழகிய பொருட்களாக்கி விற்பனை செய்ய முடிவெடுத்தேன், என்று தொழில்முனைவு பயணத்தின் தொடக்கப்புள்ளியை தி இந்தியன் எக்ஸ்பிரசிடம் பகிர்ந்தார் மரியா.
2019ம் ஆண்டு, தேங்காய் சிரட்டை அடிப்படையிலான பொருட்களை விற்க முடிவு செய்தவுடன் மரியா, அதனை உருவாக்கும் கைவினைக்கலைஞர்கள் மற்றும் நிபுணர்களை சந்தித்தார்.
தேங்காய் சிரட்டையிலிருந்து பெர்ஃபெக்ட்டான பொருளை உருவாக்குவதற்காக சில நுணுக்கங்களை ஆராய்ந்துள்ளார். தேங்காய் சிரட்டை கிண்ணங்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்க சிரட்டையின் உள் மற்றும் வெளிப்புறத்தினை மென்மையானதாக்க வேண்டும்.
ஆனால், அதற்கான இயந்திரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அதனை வாங்குவதற்கு சிறு தயக்கம் காட்டியுள்ளார். மகளின் கனவிற்கு தோள்கொடுத்தார் ஓய்வு பெற்ற இயந்திர பொறியியலாளரான அவரது தந்தை குரியகோஸ் வரூ.
"தேங்காய் ஓட்டினை மென்மையாக்கும் இயந்திரத்தின் விலை அதிகமாக இருந்ததால், என்ன செய்யலாம்னு யோசித்திட்டு இருந்தேன். அப்போ, அப்பாவே மிஷினை செய்ய ஆரம்பித்தார். சில யூடியூப் வீடியோக்களை பார்த்து வீட்டிலிருந்த டிரில்லிங் மிஷின், இதர சில உதிரி பாகங்களை கடையில் வாங்கியும் குறைந்த செலவில் வடிவமைத்தார்.”
முதலில் சில பவுல்களை தயாரித்தோம். மரப்பொருட்களில் செதுக்கும் நிறுவனத்திடம் அளித்து, பிராண்டின் பெயரை செதுக்கினோம். நேர்த்தியான லுக்கிற்காக மரப்பொருட்களில் வார்னிஷ் பயன்படுத்துவார்கள். நாங்கள் அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் கொண்டே சிரட்டைகளை பாலீஷ் செய்தோம்.
தொடக்கத்தில், சில தயாரிப்புகளை சாம்பிள்காக ஈகோ ப்ரெண்ட்லி தயாரிப்புகளை விற்கும் கடைகளுக்கு அனுப்பி வைத்தேன். உடனே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன், 100 கிண்ணங்களுக்கான ஆர்டரும் கிடைத்தது.
ஆனால், இது எளிதான செயல்முறை அல்ல. சிரட்டைகள் இயற்கையான பொருள். அவை நமக்கு வேண்டிய வடிவத்தில் ஒன்றுபோல் கிடைக்காது. சரியான அளவிலான ஒரு சிரட்டையை தேர்ந்தெடுப்பதற்கு, ஒரு குவியல் தேங்காய் சிரட்டைகளை அலசி ஆராய்வோம். முதன்முதலில் கிடைத்த ஆர்டருக்காக தட்டையான அடிப்புறத்தை கொண்ட 300 முதல் 500 மி.லி கொள்கலனிலான சிரட்டைகள் தேவைப்பட்டன. அதற்காக நானும், அம்மாவும் கேரளா முழுக்க சுற்றிதிரிந்தோம்.
ஒவ்வொருவரது வீட்டின் கொல்லைப்புறத்திலும் தென்னை மரம் இருப்பதால், உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளை ஏறி இறங்கினோம். சில எண்ணெய் ஆலைகளையும் அணுகி, தேங்காய் சிரட்டைகளை பெற்றேன்.
சராசரியான அளவிலான ஒரு தேங்காய் சிரட்டை 200 மிலி கொள்கலனுடையது. 150 மி.லி அளவுடைய ஒரு பவுலின் விலை ரூ.250, 900மி.லி கொள்ளளவு உடைய பெரிய சைஸ் தேங்காய் சிரட்டைகளை வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறோம்.
ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கின. மக்கள் மத்தியில் சிரட்டை கிண்ணங்களுக்கு வரவேற்பு கிடைக்குமா? என்று தெரியாததால், யாரையும் பணிக்கு அமர்த்தாமல் முழு தயாரிப்பு பணியினையும் நானே மேற்கொண்டேன். ஆர்டர்கள் அதிகரித்தவுடன் கைவினைக் கலைஞர்களுடன் பணிபுரிய துவங்கியுள்ளோம், என்று மகிழ்ச்சியுடன் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
தேங்காய் சிரட்டையில் 4 அளவிலான கிண்ணங்கள், தேநீர் கோப்பைகள், மெழுகுவர்த்திகள், கரண்டிகள் மற்றும் தொங்கவிடப்படும் பூந்தொட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராம் தவிர்த்து ஆன்லைன் வணிகத் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்டிலும் 'தேங்கா'-யின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றார்.
திருச்சூரில் உள்ள தேங்காவின் முதல் தயாரிப்புக்கூடத்தில் 12 கைவினைஞர்கள் உற்பத்திபிரிவில் பணிபுரிகின்றனர். இப்போது கேரளா முழுவதும் 5 உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ள நிறுவனம், கடந்த ஓராண்டில் 8,000 சிரட்டை தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளது. அடுத்த கட்டமாய் தேங்காய் சிரட்டையில் கண்டெய்னர் பாக்சுகள், விளையாட்டு பொம்மைகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மரியா.
கேரளா கைவினைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, நிலையான வாழ்க்கை முறையினை நோக்கி மக்களை நகர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் அவர்.
தகவல், படங்கள் உதவி : தி பெட்டர் இந்தியா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்