ஜெர்மனி பற்றி A டூ Z தகவல்களை அள்ளித் தரும் பிரியா ஸ்ரீதரின் ‘வணக்கம் ஜெர்மனி’
புதிதாக ஜெர்மனி செல்வோருக்கு A TO Z அனைத்து விஷயங்களையும் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பயனுள்ள தகவல் களஞ்சியமாக வணக்கம் ஜெர்மனியை செயல்படுத்தி வருகிறார் வெளிநாட்டில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி பிரியா ஸ்ரீதர்.
டிஜிட்டல் யுகம் பெண்களின் திறமைகளை வெளிக்காட்டவும், தொழில்முனைவுக்கான பாதையை அமைக்கவும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. பெண் தொழில்முனைவர்கள் டிஜிட்டலில் பெரிதாக என்ன செய்து விட முடியும் அழகுக் குறிப்புகள், ஆடை விற்பனை, கலைபொருட்கள் விற்பனை மட்டுமல்ல தங்களுக்குத் தெரிந்த மற்றவர்களுக்குத் தெரியாத ஆனால் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்களை தகவல் களஞ்சியமாக கொடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் டிஜிட்டல் Influencer பிரியா ஸ்ரீதர்.
நாமக்கலை அடுத்த ராசிபுரத்தில் பிறந்து வளர்ந்த பிரியா, எம்பிஏ பட்டதாரி. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பாலாஜி ஜெர்மனியில் வசிப்பதால் அவருடனே பிரியாவும் அயல்நாடு சென்றுவிட்டார்.
நான் ஜெர்மனி வந்த போது எனக்கு என்னுடைய கணவரின் அனுபவம் உதவியதால் பெரிய கஷ்டங்களை எதிர்கொள்ளவில்லை. அயல்நாடுகளுக்குச் செல்லும் போது ஒவ்வொரு நாடும் தனக்கென தனி வழிகாட்டு நெறிமுறைகளை வைத்துள்ளன.
"தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லும் போது அவர்கள் எந்த விசாவில் செல்கிறார்கள் அதற்கு அந்த நாடு வைத்துள்ள கட்டுப்பாடுகள் என்ன உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருப்பது தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க உதவும். எனக்கு ஜெர்மனி நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி அறிந்து வைத்திருந்த கணவர் இருந்ததால் கஷ்டம் இல்லை. ஆனால் எல்லோருக்கும் இப்படியான அனுபவமிக்கவர்களின் அறிவுரை கிடைக்குமா என்று சிந்தித்ததன் விளைவாகவே 'வணக்கம் ஜெர்மனி' யூடியூப் சேனலைத் தொடங்கினேன்,” என்கிறார் பிரியா.
'வணக்கம் ஜெர்மனி' ஒரு டிஜிட்டல் வீடியோ தகவல் களஞ்சியம் என்றே சொல்லலாம். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விசாக்களுக்கு அந்த நாடு வைத்துள்ள விதிமுறைகள் என்ன? ஜெர்மனி செல்வதற்கு எப்படி தயாராக வேண்டும், ஜெர்மன் மொழியை எந்த அளவிற்கு கற்று வைத்திருக்க வேண்டும் என்று அ முதல் ஃ வரை அனைத்து விஷயங்களை அக்கக்காக பிரிந்து மேய்ந்து தகவல்களைத் தருகிறார் பிரியா.
“சமூக ஊடக பக்கத்தில் வணக்கம் ஜெர்மனி தொடங்கப்பட்ட போது ஒன்றிரண்டு பேர் மட்டுமே பார்த்தனர், ஆனால், சலித்து விடாமல் நான் தொடர்ந்து ஜெர்மனி பற்றிய தகவல்களை பதிவிட்டு வந்ததன் விளைவாக இந்தியர்கள் மட்டுமல்லாது மற்ற நாடுகளில் இருந்து ஜெர்மனி வருபவர்களும் கூட என்னுடைய வீடியோக்களில் இருந்து தகவல்களை அறிந்து பாராட்டி பின்னூட்டங்கள் இடுவது எனக்கு உற்சாகத்தை தந்தது,” என்கிறார்.
என்னுடைய கணவர் சுமார் 14 ஆண்டுகளாக ஜெர்மனியில் இருக்கிறார், மேல்படிப்பிற்காக இங்கு வந்தவர் ஜெர்மனியிலேயே பணியும் கிடைத்து ஜெர்மன் நாட்டின் குடிமகனாகிவிட்டார். அவரிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஜெர்மன் அரசின் சட்டங்களை படித்து எல்லோருக்கும் எளிமையாக புரியும் விதமாக ஆங்கிலத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் பிரியா.
விசா நடைமுறைகள் மட்டுமல்ல, ஜெர்மனியில் பகுதிநேர வேலை, வேலைவாய்ப்புகள், மருத்துவக் காப்பீடு, முதலீடுகள், பங்குச்சந்தை நிலவரம், வரிகள், எந்தெந்த பணிகளுக்கு எந்த அரசு அலுவலகத்தை நாட வேண்டும், வாடகை வீடு பார்ப்பதற்கான வழிமுறைகள், சொந்தமாக வீடு வாங்குவதற்கான சாத்தியங்கள் என்று பல விஷயங்களை பிரியாவும் அவரது கணவர் பாலாஜியும் வணக்கம் ஜெர்மனி சேனலில் பதிவேற்றி வருகின்றனர்.
வணக்கம் ஜெர்மனி (www.vanakkamgermany.de) முகநூல் (https://facebook.com/vanakkamgermany), இன்ஸ்டாகிராம், டெலிகிராம், யூடியூப் என அனைத்து டிஜிட்டல் பரிமாணங்களிலும் தகவல்களை வழங்கி வருகிறது.
வீடியோக்களாக பதிவிடுவதில் தொடங்கிய ஆர்வமானது தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்குதல் என்று விஸ்திகரிக்கப்பட்டு, இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 'வணக்கம் ஜெர்மனி'யில் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகின்றனர் என்று பெருமைப்படுகிறார் பிரியா.
இதுமட்டுமின்றி தனக்கு தெரிந்தவர்களுடன் இணைந்து பெண்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். ஜெர்மன் பற்றிய தகவல்கள் மட்டுமென்றால் போர் அடித்து விடாது இருக்க பிரியாவின் வீடியோக்களிலும் சமையல், தோட்டக்கலை, ஜெர்மன் பருவநிலை, சுற்றுலா இடங்கள், தனது கர்ப்ப கால நாட்கள் என வகை வகையான வீடியோக்கள் வரிசைகட்டி இருக்கின்றன.
“வீடியோக்கள் அனைத்தையும் நானே பதிவு செய்து, எடிட்டிங்கும் செய்துவிடுவேன். குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை சுழற்சியில் மாற்றங்கள் வந்ததுவிட்டது. குழந்தை பராமரிப்பும் இப்போது சேர்ந்து விட்டதால் அதிக நேரம் என்னுடைய மகனுடன் செலவிடுகிறேன். எனினும் நேரத்தை பிரித்து இப்போது செயல்படத் தொடங்கி இருக்கிறேன். காலை முதல் இரவு வரை மகனுடன் விளையாடுவது, அவன் பள்ளிச்செல்லும் நேரத்தில் வீடியோக்களை பதிவு செய்வது, இரவில் அவன் உறங்கிய பின்பு எடிட்டிங் வேலை என்று திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருப்பதால் தொடர்ந்து என்னுடைய பணியை திருப்தியுடன் செய்ய முடிகிறது,” என்கிறார் பிரியா.
ஆரம்பம் முதலே குடும்பத்தினரும் கணவரும் எனக்கு துணையாக இருந்து ஆதரவு அளிப்பதால் என்னால் இவ்வளவு தூரம் வெற்றிபெண்மணியாக முடிந்திருக்கிறது.
அண்மையில் சக்தி மசாலாவின் ’சுயசக்தி விருதுகள்’ பிரிவில் பெண் என்ஆர்ஐ தொழில்முனைவர் என்று டிஜிட்டல் பிரிவில் விருது கிடைத்தது எனக்கு மிகவும் உத்வேகமாக அமைந்துள்ளது. வணக்கம் ஜெர்மனி அறிவை புகட்டும் ஒரு தளமாக தொடங்கப்பட்டாலும் தற்போது வருமானத்தை பெற்றுத் தரவும் தொடங்கி இருக்கிறது என்கிறார் பிரியா.
என்னுடைய வீடியோக்களைப் பார்த்து பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை கேட்டு வருகின்றனர், அவர்களிடம் ஆலோசனைக்கென குறைந்த அளவு கட்டணத்தை வசூலிக்கிறோம், அதுமட்டுமின்றி சில காப்பீட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுவதால் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பயனாளிக்கு இடையே இணைப்புப் பாலமாக இருப்பதனாலும் கணிசமான தொகையை பெற முடிகிறது. இவ்வாறு வருமானம் ஈட்டுவது எனக்கு பொருளாதார சுதநத்திரத்தை கொடுக்கிறது.
தாய்நாட்டை விட்டு வந்துவிட்டோம், இங்கே வீட்டிலேயே இருக்க வேண்டியது தான் என்று இல்லாமல் நான் கற்ற கல்வியின் உதவியால் எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதனால் மேலும் மேலும் என்னுடைய தேடலை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவும் வணக்கம் ஜெர்மனி தளத்தை பார்க்கிறேன் என்று மகிழ்கிறார் பிரியா.