குழந்தைகள் மலச்சிக்கலை போக்க இந்தியன் ஸ்டைல் ‘Potty Seater’ - மகனுக்காக தொடங்கி வர்த்தமாக்கிய இளம் தாய்!
குழந்தைகள் கஷ்டம் இல்லாமல் மலத்தை வெளியேற்ற முதன்முறையாக 'இந்தியன் ஸ்டைல் potty seater' உருவாக்கி அதனை ஒரு பிராண்டாக சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் கோவைப் பெண் ஸ்ரீ சேஷப்ரியா.
குழந்தைகள் கஷ்டம் இல்லாமல் மலத்தை வெளியேற்ற முதன்முறையாக 'இந்தியன் ஸ்டைல் potty seater' உருவாக்கி அதனை ஒரு பிராண்டாக சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் கோவைப் பெண் ஸ்ரீ சேஷப்ரியா.
இளம் தாய்மார்களை தொழில்முனைவர்களாக்குவதில் குழந்தைகளின் பங்கு அதிகம் இருக்கிறது. தங்களின் குழந்தைக்கு சிறந்தவற்றை தேடித் தேடி அதற்கான தீர்வை மற்றவர்களும் அனுபவிக்கும் விதத்தில் தொழில்முனைவரான பெண்கள் ஏராளம்.
கோயம்புத்தூரில் வாழ்ந்து வரும் ஸ்ரீசேஷப்ரியா, தன்னுடைய மகனின் மலச்சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு தேடப்போய் அவருக்குள் இருந்த வடிவமைப்பாளர், தொழில்முனைவரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
தேவைக்காக தொழில்முனைவரான ஸ்ரீ சேஷப்ரியா
திருப்பூரில் பிறந்து வளர்ந்து சென்னையில் பி.காம் முடித்த ஸ்ரீ சேஷப்ரியா, 2015ம் ஆண்டில் திருமணமாகி கோவைக்கு இடம்பெயர்ந்தார். கணவரின் நிறுவனத்திலேயே அக்கவுண்ட்ஸ் பிரிவு தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், Parentales என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ்
என்னும் பெயரில் தான் வடிவமைத்த இந்தியப் பாணியிலான Potty சீட்டர் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.Parentales நிறுவனரும், சிஇஓவுமான ஸ்ரீசேஷப்ரியா தான் தொழில்முனைவரான பயணத்தை யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார், “எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மூத்த மகன் இளனுக்கு ஒன்றரை வயது முதலே மலச்சிக்கல் பிரச்னை இருந்தது. அவனுடைய கழிவை வெளியேற்றும் நேரம் என்பது அவனுக்கும் எங்களுக்கும் மிகவும் வேதனையானதாக இருந்தது.
இதற்காக மருத்துவ உதவியைக் கூட எடுத்துக்கொண்டோம், ஆனால், அவையெல்லாம் தற்காலிகத் தீர்வாகத் தான் இருந்தது. அதனால் இளனின் உடல்நலனுக்குத் தீங்கு ஏற்படுத்தாத, வலி இல்லாத அணுகுமுறை என்பதை கண்டறிவதில் என்னுடைய தேடல் நீண்டு கொண்டே இருந்தது.
2021ம் ஆண்டில் கொரோனா காலத்தில் எங்கள் பண்ணை வீடான பொங்கலூருக்குச் சென்றிருந்தோம். அப்போதும் இளனுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தது. அங்கு இந்திய பாணியிலான கழிப்பறை மட்டுமே இருந்தது, ஆனால் அதனைப் பயன்படுத்த இளன் பயந்ததால் பூமியிலேயே குழி பறித்து அவனுக்கு குத்தவைத்து உட்கார்ந்து மலம் கழிக்கச் செய்தோம். கால்களை குத்தவைத்த முறையில் அதிக சிரமமின்றி மலத்தை வெளியேற்றினான்.
”அதில் இருந்து எப்போதும் அவனுக்கு மலம் கழிக்க வேண்டுமென்றாலும் கால்களை குத்தவைத்து உட்காரத் தொடங்கினான், அப்போது தான் இந்த முறை அவனுக்கு எளிதாக இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். மூன்று மாத காலம் இப்படியே செல்ல மருந்துகள் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் போது அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் வலி இல்லாமல் இருந்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது,” என்று இளம் தாயாக தான் அனுபவித்த கஷ்டத்தை கூறுகிறார்.
இல்லாத பொருளை உருவாக்கிய தாய்
பொங்கலூரில் இருந்து மீண்டும் கோயம்புத்தூருக்கு வந்த பிறகு பழைய மாதிரியே இங்கு மேற்கத்திய பாணியிலான கழிப்பறை பயன்படுத்தும் போது அவனுடைய நிலைமை பழைய முறைக்கே திரும்பியது. சிறிது காலம் தரையில் அமர்ந்து கழிவை வெளியேற்ற பழக்கினாலும், சுத்தப்படுத்துவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது, அதனால் இந்திய பாணியிலான Potty seat இருக்கிறதா என்று தேடிய போது எனக்கு ஆச்சரியமளித்த விஷயம், அப்படியான வடிவமைப்பைக் கொண்ட ஒரு பொருளே சந்தையில் இல்லை என்பது.
இப்படியான நிலையில் மலச்சிக்கலுக்குத் தீர்வாக மீண்டும் மருந்து மாத்திரைகளின் பிடியில் சிக்காமல் ஆரோக்கியமான வழியில் இளனை வளர்க்க வேண்டும் என்பதால் நானே எங்கள் வீட்டில் இருந்த தெர்மாகோலை பயன்படுத்தி இந்தியன் ஸ்டைல் potty seater-ஐ வடிவமைத்தேன்.
அந்த Prototype நன்றாக இருந்தாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது வந்த சிறு சிறு தவறுகளை சரிசெய்து நாங்களே ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி இதற்கான mould உருவாக்கி, அதில் இருந்து 2 in 1 Potty seater தயாரித்து சுமார் 2 ஆண்டுகள் என்னுடைய மகன்களுக்கு பயன்படுத்தி வந்தேன்.
"ஒன்றரை ஆண்டுகள் R&D யில் கடைசியாக ஒரு வடிவம் பெற்ற பொருளை சந்தையிலும் விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்து காப்புரிமைக்கு விண்ணப்பித்தேன். இந்தியாவில் 2 வடிவமைப்புகளுக்கும், அமெரிக்காவில் ஒரு வடிவமைப்பிற்கும் காப்புரிமை பெற்றிருக்கிறேன்," என்று தான் தொழில்முனைவரானதை விவரிக்கிறார் ஸ்ரீசேஷப்ரியா.
குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் நோ டென்ஷன்
2021 மே மாதத்தில் தொடங்கிய இந்தப் பயணமானது 2023 ஏப்ரல் மாதத்தில் ஒரு பொருளாக சந்தைக்கு அறிமுகமானது. நான் உருவாக்கிய Potty 3 இன் 1, ஒரே Potty seather-இல் இந்தியன் ஸ்டைல், மேற்கத்திய ஸ்டைல் என இரண்டு விதங்களிலும் கழிவை வெளியேற்ற குழந்தைகளுக்கு பழக்கலாம்.
மேலும், பெரியவர்கள் பயன்படுத்தும் டாய்லெட்டின் மேல் இந்த சீட்டை வைத்தும் குழந்தைகளுக்கு potty பழக்கலாம். என்னைப் போலவே பல இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதே போன்ற பிரச்னைக்கான தீர்வைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் பலரிடம் கேட்ட போது தான் புரிந்தது.
”பலரும் பால்கனியில் ஸ்குவாட் செய்ய வைக்கிறோம், பாத்ரூமில் ஸ்குவாட் செய்ய வைக்கிறோம், வெஸ்டர்ன் டாய்லெட் மீது அமர வைத்து குழந்தையை பிடித்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். என்னைப் போலவே பல இளம் தாய்மார்களும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து தான், நான் உருவாக்கி பலனை அடைந்த இந்தப் பொருளையே ஏன் ஒரு பிராண்டாக சந்தையில் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது.”
எங்களின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் தொழில்முனைவர்களாக இருப்பதால் எனக்கு இந்தத் துறை என்பது புதிதல்ல, என்னை வழிகாட்ட என் கணவர், மாமியார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருந்ததால் தயக்கமே இல்லாமல் இதைச் சந்தைப்படுத்தலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் என்று கூறுகிறார் சேஷப்ரியா.
அறிமுகமும், வரவேற்பும்
Parentales என்கிற பெயரை ஏன் நிறுவனத்திற்கான பெயராக வைத்தேன் என்றால் குழந்தைகளின் வளர்ப்பில் அம்மா, அப்பா இருவருக்கும் சமபங்கு இருக்கிறது, அதனை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப் பெயரைத் தேர்வு செய்தேன்.
Potty Chairக்கான பெயரை SQWHAT என்று ஸ்குவாட் முறையில் அதாவது குத்தவைத்து அமர்வதை குறிக்கும் விதமாக அதை பிராடக்ட் பெயராக வைத்தேன். SQWHAT Potty chair அடிப்பகுதி நீல நிறத்திலும் மேல் பகுதி சீட்டானது மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு நிறங்களிலும் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு SQWHAT சீட்டரின் விலையானது வரி உள்பட ரூ.2950 என நிர்ணயம் செய்து விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறேன்.
“6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த சீட்டரை பயன்படுத்தலாம். சமூக ஊடகம் மூலமே SQWHAT விற்பனை செய்யப்பட்டாலும் 2 மாதங்களில் இந்தியா முழுவதும் 8 மாநிலங்களில் 140க்கும் மேற்பட்ட டெலிவரியை செய்திருக்கிறேன்.”
மொத்தமாக ஆயிரம் potty சீட்டர்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டு தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தேன். ஆனால், அவற்றில் 250 சீட்டர்கள் அதன் பேக்கிங் அட்டை சிறிதாக இருந்ததால் ஷிப்பிங் செய்யும் போது உடையத் தொடங்கி இருந்தது. என்ன காரணத்திற்காக உடைகிறது என்று முதலில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, வாடிக்கையாளரின் கைக்கு சென்ற பின்னரே பொருட்கள் உடைந்திருக்கின்றன என்னும் செய்தி கிடைத்தது.
அடுத்த பேட்ச் அனுப்பும்போது அட்டைப் பெட்டியின் அளவு மாறி இருந்தது, கூரியர் கட்டணம் அதிகமாகும் என்று சொன்னார்கள், அப்போது தான் முன்னால் அனுப்பிய பாட்டி சீட்டர்களின் பேக்கிங் சரியில்லை அதனால்தான் அவை உடைந்தது என்ற காரணத்தை நான் கண்டறிந்தேன் என்று தொழில்முனைவராக தான் சந்தித்த முதல் பிரச்னை குறித்து பகிர்கிறார் சேஷப்ரியா.
சொந்தமாக பிராண்டிங்
SQWHAT ஆர்டர் செய்து உடைந்த பொருளைப் பெற்றவர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தருகிறோம், அல்லது மீண்டும் பொருளையே தருகிறோம் என்று கேட்டதற்கு ஆச்சரியமான விஷயம் எல்லோருமே மீண்டும் பொருள் வேண்டும் என்றே கேட்டனர்.
SQWHAT அறிமுகம் செய்யப்போமும் 4 மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கைத் தொடங்கி குழந்தைகளின் மலச்சிக்கலுக்கான காரணங்கள் குறித்து ஸ்டோரிகளாகப் போட்டேன். ஆனால், அதற்கு அந்த அளவிற்கு வரவேற்பு இல்லை. திடீரென ஒரு நாள் எல்லோரும் அவர்களின் சொந்த அனுபவத்தைப் பகிரும் போது நாம் ஏன் இப்படி செய்யக் கூடாது என்று நான் தெர்மகோல் வைத்து உருவாக்கிய Prototype புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய சொந்த அனுபவத்தையும் சேர்த்து பகிர்ந்த போது நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பின்னர், 3Dபிரிண்ட் மாடல், மோல்டிங் எப்படி செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட அனைத்தையும் ஒவ்வொரு நாளும் ஸ்டோரியாக இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டே வந்தேன். படிப்படியாக இந்தப் பொருள் உருவான விதத்தைப் பார்த்தவர்கள் இதன் அறிமுகம் எப்போது என்று காத்துக் கொண்டிருந்தனர். ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்த போது நான் எதிர்பார்த்தபடியே பலரும் புக் செய்து பொருளைப் பெற்றுக்கொண்டனர். எங்களுடைய இணையதள பக்கமான https://sqwhat.in/ ல் ஆர்டர் செய்யும் வசதியை கொடுத்துள்ளேன் என்று சொல்கிறார் சேஷப்ரியா.
தொலைதூர இலக்கு
சுமார் 45 லட்ச ரூபாய் சொந்த முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கி இருக்கிறேன், இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்த பொருளுக்கான சந்தை இருக்கிறது என்பது தெரிந்தே இதில் தடம் பதித்திருக்கிறேன் என்று தைரியமாகக் கூறும் இந்த இளம் தொழில்முனைவர், தொடர்ந்து சந்தையில் இல்லாத ஆனால் தனித்துவமான குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற பொருட்களை உருவாக்க வேண்டும் என்கிற தொலைநோக்குத் திட்டத்துடன் செயல்படத் தொடங்கி இருக்கிறார்.
SQWHATஐ தொடர்ந்து காரில் குழந்தைகளுக்கான Safety child lock அறிமுகப்படுத்த உள்ளார். அதோடு, பலரும் பெரியவர்கள் பயன்படுத்தும் மேற்கத்திய டாய்லெட்டிலேயே அவர்களும் இந்தியன் ஸ்டைலை முயற்சிக்கும் வடிவமைப்பைக் கோரி இருந்ததால் அதற்கான வடிவமைப்புப் பணிகள் தொடங்கி உள்ளன என்கிறார். இது போன்ற தனித்துவமான பொருட்களை உருவாக்கி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சந்தைப்படுத்துவதே என்னுடைய இலக்கு என்று கூறுகிறார் இளம்பெண் சேஷப்ரியா.
மகனுக்காக புத்தகம் எழுதத் தொடங்கி, அதையே தொழிலாக்கி தனித்துவ படைப்புகளில் சிறக்கும் தந்தை!