மாற்றுத்திறனாளி மகனுடன் தவித்த தாய்க்கு உதவி - 24 மணி நேரத்தில் கோவை ஆட்சியர் செய்த உதவி!
மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்து வந்த பெண்ணுக்கு கோவை ஆட்சியர் வீடு தேடி சென்று உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்து வந்த பெண்ணுக்கு கோவை ஆட்சியர் வீடு தேடிச் சென்று உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை விட மனிதம் இருந்தால் மார்க்கமுண்டு என மாற்றி எழுத வேண்டிய அளவிற்கு தனி மனிதர்களின் மனிதாபிமானம் பல சிறப்பான சம்பவங்கள் நடக்கக் காரணமாக அமைந்துள்ளது.
சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை சீர்படுத்துவது, ஆதரவற்றோருக்கு உணவளிப்பது, சாலையோரம் அடிபட்டு கிடக்கும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது, ஏன்? கோடை காலத்தில் பறவைகளுக்காக ஒரு பாத்திரத்தில் நீரும், கைப்பிடி அளவு தானியமும் வைப்பது கூட மனிதனின் மனிதாபிமானத்தால் மட்டுமே சாத்தியமாகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் கோவை ஆட்சியர் செய்த காரியம் “இந்த மனசு தான் சார் கடவுள்” என சோசியல் மீடியாவில் மீண்டும் நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.
ஆதரவற்ற பெண்மணியின் அவலநிலை:
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீலா. 45 வயதான இவர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான 14 வயது மகன் ராமசாமியுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் கோபால் 13 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கணவனை இழந்த சீலா, தனது மாற்றுத்திறனாளி மகனுடன் தங்க இடம் இல்லாமல், உதவிக்கரம் நீட்ட ஆள் இல்லாமல் அபலையாக தவித்து வந்துள்ளார்.
சீலா மற்றும் அவரது மகனின் நிலையைப் பார்த்து மனமிறங்கிய மணியம்மாள் என்ற 63 வயது மூதாட்டி 13 ஆண்டுகளாக தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறார். மூதாட்டிக்கும் சீலாவிற்கும் எந்த உறவு முறையும் கிடையாது என்றாலும், மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனை வைத்துக் கொண்டு பெண் ஒருவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் மனிதநேயத்துடன் உதவ முன்வந்துள்ளார்.
மணியம்மாளின் மனிதநேயம்:
மாற்றுத்திறனாளி மகனை உடன் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் சீலாவால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை இருந்து வந்துள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மட்டுமே வாழ்வாதாரமாக இருந்து வந்துள்ளது. மூதாட்டி மணியம்மாள் தான் ஓட்டலில் பாத்திரம் துலக்குவதன் மூலமாக மாதச் சம்பளமாக கிடைக்கும் 6,500 ரூபாயையும் சீலா மற்றும் அவரது மகனுக்கு செலவிட்டு வந்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக கடந்த அக்டோபர் மாதத்துடன் ஓட்டல் வேலையில் இருந்து விலகிய மூதாட்டி மணியம்மாள், 4 ஆடுகளை வைத்து ஜீவனாம்சம் செய்து வருகிறார். இந்நிலையில், தனது காலத்திற்கு பிறகு சீலாவும், அவரது மகனும் தங்க இடம் இல்லாமல் தவிர்ப்பார்களே என சிந்தித்துள்ளார்.
எனவே, நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாரந்திர குறைதீர்ப்பு முகாமில் சீலாவையும், அவரது மகனையும் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்துள்ளார். அந்த மனுவில் தனக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்:
சீலா மற்றும் அவரது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்கினார் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன். மனு அளித்த 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பில் தரை தளத்தில் வீடு ஒதுக்கி ஆணை வெளியிட்டார். அந்த ஆணையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஷீலா தற்போது வசித்து வரும் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கியுள்ளார்.
சீலாவிடம் வீட்டிற்கான ஆணையை வழங்கிய ஆட்சியர்,
“மலுமிச்சம் பட்டியில் வீடு ஒதுக்கியிருக்கோம். உங்களுக்கு அங்க போக விருப்பம் தானே. தரைத்தளத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கு. அதுக்கு 36 ஆயிரம் ரூபாய் கட்டணும், அதையும் வேற ஒரு நிதியில் இருந்து நாங்களே கட்டிடுவோம். சந்தோஷமா? மகனுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வருகிறதா? உங்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கிறதா? என்றும் நலம் விசாரித்தார்.”
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்திற்கு செலுத்த வேண்டிய 36 ஆயிரம் ரூபாயையும் மாவட்ட ஆட்சியருக்கான விருப்ப நிதியில் இருந்து செலுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர் என்ற பொறுப்புடனும், மனிதாபிமானத்துடனும் கோவை ஆட்சியர் சமீரன் செயல்பட்ட விதம் சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
வாழ்க்கையை மாற்றிய அந்த வாட்ஸ்அப் மெசேஜ்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்த உதவி என்ன?