சிறு நிறுவனங்கள் அடுத்தக்கட்ட வளர்ச்சி அடைய டெக்னாலஜி சேவையை வழங்கும் கோவை நிறுவனம்!
சிறு நிறுவனங்களுக்கும் டெக்னாலஜி அவசியம் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பம் இங்கு இல்லை. இந்த இடைவெளியை புரிந்துகொண்ட லோகேஷ் சிறு நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தொழிலுக்கு டெக்னாலஜி அவசியம் என்னும் நிலையில் இருந்து டெக்னாலஜி இல்லாமல் தொழில் இல்லை என்னும் நிலைக்கு தொழில்நுட்பத்தின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. டெக்னாலஜி உதவியுடன் தொழிலில் இருக்கும் சிறு நிறுவனங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க்கின்றன. டெக்னாலஜியை தவிர்த்த நிறுவனங்கள் காணாமல் போகின்றன என்பதுதான் தற்போது எதார்த்தமாக இருக்கிறது.
சிறு நிறுவனங்களும் டெக்னாலஜி அவசியம் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பம் இல்லை என்பதே களம். இந்த இடைவெளியை புரிந்துகொண்ட லோகேஷ் வேலுசாமி, சிறு நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்.
Effitrac Solutions என்னும் நிறுவனம், சிறு நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கித் தரும் சேவையை புரிகிறது. இந்த நிறுவனம் கோவையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் எப்படி உருவானது, ஆரம்பகட்ட தேவைகள் என்ன தற்போதைய நிதி நிலைமை என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து லோகேஷ் யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பகாலம்
நாமக்கல் என் சொந்த ஊர். அங்கு எங்களுக்கு பவுல்ட்ரி, டெக்ஸ்டைல், ரீடெய்ல் என சில தொழில்கள் இருந்தன. இருந்தாலும் எனக்கு டெக்னாலஜியில் ஆர்வம் என்பதால் கோவையில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்தேன். அதனைத் தொடர்ந்து ’ஐபிஎஸ்’ என்னும் டெக்னாலஜி நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். அங்கிருந்து அசெஞ்சர் நிறுவனத்தில் இணைந்தேன்.
அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது எங்களது குடும்பத்தொழிலை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. ஏற்கெனவே என்னுடைய தம்பி தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரளவுக்கு வளர்ந்துவிட்டதால் தொழிலை பார்த்துகொள்வதற்காக இந்தியா வந்தேன்.
டெக்னாலஜியில் டேட்டா மூலமாகவே முடிவெடுத்துவந்த எனக்கு இங்குள்ள பிஸினஸ் சூழல் முற்றிலும் புதிதாக இருந்தது. எந்த ரியல் டைம் டேட்டாவும் இருக்காது. யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு பணம் வர வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என அனைத்தையுமே போனில் அழைத்து கேட்க வேண்டி இருந்தது.
அடுத்த கட்டத்துக்கு மட்டுமல்ல, தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கே டெக்னாலஜி அவசியம் என்பது எனக்கு புரிந்தது.
“எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 2002-ம் ஆண்டில் ஒரு முட்டை ரூ.2. ஆனால் தற்போது ரூ.3.50 முதல் ரூ.4 எனும் அளவிலே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு பொருட்களின் விலையும் ஐந்து மடங்குக்கு மேல் விலையேறி இருக்கும் சூழலில் கோழிப்பண்ணைத் தொழிலை நடத்த வேண்டும் என்றால் நிதிசார்ந்த ஒழுங்கு இருக்க வேண்டும். அதற்கு டெக்னாலஜி அவசியம். இந்த தொழில் மட்டுமல்ல எந்த தொழிலாக இருந்தாலும் நிகர லாப வரம்பு என்பது மிகவும் குறைந்திருக்கிறது. தொழில்நுட்பத்தை வைத்திருந்த நிறுவனங்கள் பெரிய வளர்ச்சியை சந்தித்திருக்கின்றன,” என்றார் லோகேஷ்.
எங்களுடைய பிஸினஸில் டெக்னாலஜி இல்லை. அதேபொல எங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என பலரை சந்தித்து அவர்களுடைய சிக்கல் என்ன என்பதை தெரிந்துகொள்ள முயற்சித்தோம். இதில் சில குறிப்பிட்ட டெக்னாலஜி டூல்களை பயன்படுத்திவருகிறார்கள். உதாரணத்துக்கு அக்கவுண்ட்ஸுக்கு ஒரு சாப்ட்வேர் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த சாப்ட்வேரை வைத்து வேறு எதுவும் தெரிந்துகொள்ள முடியாது.
இன்னும் சில நண்பர்கள் தெரிந்த டெக்னாலஜி நிறுவனங்கள் மூலம் அவர்களுக்கு என பிரத்யேக சாப்ட்வேரை உருவாக்கும் முயற்சியை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு டெக்னாலஜியில் என்ன தேவை என்பதை சொல்ல முடியவில்லை, டெக்னாலஜி எழுதும் நபர்களுக்கு அந்தத் தொழிலில் உள்ள தேவை புரியவில்லை. வரும்கால தேவையை கணித்து அதற்கு ஏற்ப சாப்ட்வேர் எழுத முடியவில்லை. அதனால் சொந்தமாக உருவாக்கும் முயற்சியில் சிறு நிறுவனங்கள் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை என்பது புரிந்தது.
”ஒருங்கிணைந்த டெக்னாலஜியை சிறு நிறுவனங்கள் பயன்படுத்துவதில்லை. அதேசமயம் சிறு நிறுவனங்களுக்கு என சந்தையில் டூல்களும் இல்லை. பெரும்பாலான டெக்னாலஜி நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்தன. சிறு நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டன. அதனால்தான் சிறு நிறுவனங்களுக்கு என குறைந்த விலையில் சாப்ட்வேர் தயாரிக்கத் தொடங்கினோம்.”
Effitrac solutions
2012ம் ஆண்டு இந்தியா வந்தேன். ஓர் ஆண்டு குடும்பத் தொழிலில் இருந்தேன். அதனைத் தொடர்ந்து
solutions என்னும் நிறுவனத்தை தொடங்கி மூன்று ஆண்டுகள் சில நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், இந்த புராடக்டை உருவாக்கவும் நேரம் எடுத்துக்கொண்டேன்.2016-ம் ஆண்டு வரை நாமக்கலில் இருந்த நிறுவனத்தை கோவைக்கு மாற்றி எங்களுடைய சாப்ட்வேரை விற்கத்தொடங்கினோம். Efficiency tracking என்பதை சுருக்கி Effitrac சொல்யூஷன்ஸ் என்னும் பெயரில் நிறுவனத்தை தொடங்கினோம்.
ஆன்லைன் மூலம் எங்கள் சேவையை விற்பனை செய்கிறோம். சில பார்ட்னர்கள் மூலம் எங்களுடைய தொழில்நுட்பத்தை விற்பனை செய்தோம். 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தமாக சாப்ட்வேர் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு சாஸ் (saas) மாடலில் எங்களுடைய சாப்ட்வேரை விற்பனை செய்யத் தொடங்கினோம்.
”ரீடெய்ல், ஜூவல்லரி, பவுல்ட்ரி, உற்பத்தி என 14 வகையான துறைகளுக்குத் தேவையானவற்றை நாங்கள் வழங்குகிறோம். மாதம் 156 ரூபாய்க்குக் கூட எங்களுடைய சாப்டவேரை பயன்படுத்த முடியும். தேவைக்கு ஏற்ப இதற்கான கட்டணம் உயரந்துகொண்டே இருக்கும். தற்போது 400க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் எங்களுடைய சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் உடனடியான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இதனை வடிவமைத்திருக்கிறோம்,” என்கிறார்.
எங்களுடைய வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் அளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர். மீதமுள்ள வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். குறைந்த சதவீத வாடிக்கையாளர்கள் இதர நாடுகளில் உள்ளனர்.
நிதிசார்ந்த தகவல்கள்
இதுவரை, சுமார் 4 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்திருக்கிறோம். நாங்கள் சாஸ் மாடலுக்கு மாறுவதற்கு முன்பான நிதி ஆண்டில் ரூ.2 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி இருந்தோம். 2020 மார்ச்சில் சாஸ் மாடலுக்கு மாற்றும்போது வருமானம் இல்லை. ஜீரோவில் இருந்து தொடங்கினோம்.
தற்போது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிலையான வருமானம் ஈட்டிவருகிறோம். ஒவ்வொரு மாதமும் 25 சதவீத வளர்ச்சி இருந்துவருகிறது.
கோவையில் மட்டுமே அலுவலகம் இருக்கிறது. 38 நபர்கள் உள்ளனர். இதுதவிர பெங்களூருவில் சிலர் பணியாற்றிவருகின்றனர்.
சாஸ் மாடலுக்கு மாறியபின்பு பல முதலீட்டாளர்களுடன் பேசி வருகிறோம். முதலீடு திரட்டும் திட்டமும் இருக்கிறது. சர்வதேச அளவில் பல சிறிய நிறுவனங்கள் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் 20 லட்சம் நிறுவனங்கள் வரை எங்களால் செல்ல முடியும். இந்த நிறுவனங்களை வாடிக்கையாளராக்க வேண்டும் என்றால் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதலீடு அவசியம்.
சிறிய நிறுவனங்கள்தான் எங்கள் இலக்கு என்றாலும் கோத்ரெஜ், ஓலா எலெக்ட்ரிக், டிரான்ஸ்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் எங்களின் வாடிக்கையாளர்கள் என லோகேஷ் தெரிவித்தார்.